பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“எனது அன்புள்ள நண்பரவர்களே,

உங்கள் அருமை மனைவியவர்களது மரண சம்பவத்தைப் பற்றிய கார்டு கிடைத்தது. தங்களுக்கு நேர்ந்த இந்நஷ்டத்தைக் குறித்து யானும் என் குடும்பத்தாரும் மிகுந்த துக்கமடைகிறோம்.

இதைவிட அதிகமாக மனத்தைப் பிளக்கக்கூடியதும் சகிக்கமுடியாததுமான துர்ப்பாக்கியம் ஒன்றை நாங்கள் நினைக்கமுடியவில்லை. உயிர் துறந்தவர்கள் சாதாரண மனைவியைப் போன்றவர்களல்லர், இனி அவர்களை யொத்த ஒரு மனைவியை அடைதல் மிகவும் கஷ்டமான காரியம்; இல்லை, அசாத்தியமான காரியம். உங்கள் குடும்பத்திற்கு அவர்கள் ஓர் உண்மையான பூஷணமாயிருந்தார்கள். அவர்களில்லாத குறைவை நீங்கள் ஒருபோதும் உணராமல் இருக்க முடியாது.

கடவுள் அவர்களை ஆசீர்வதித்துத் தமது பேரின்ப நிலையில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பது உங்களுடைய உண்மையான நண்பனாகிய என்னுடைய மனப்பூர்வமான பிரார்த்தனை.

ஒட்டப்பிடாரம், உங்கள் உண்மையுள்ள,

ஜூலை 7, 1901. (ஒப்பம்) எம். பாண்டுரெங்கராயர்.


—————————