வீரவநல்லூர் சப்ரிஜிஸ்டிராராயிருந்த
ஸ்ரீமாந் வி.அ. சொக்கலிங்கம் பிள்ளையவர்கள் கடிதம்.
“எனது அன்புள்ள சகோதரரவர்களே,
உங்கள் மனைவியவர்களின் மரணத்தைக்கேட்டு மிகுந்த துக்கம் அடைகின்றேன். ஸ்ரீ. வள்ளிநாயக சுவாமியவர்கள் இங்கு வந்திருந்தபோது, அவர்களது நற்குணங்களை மிகச் சிலாகித்துப்பேசினார்கள். அத்தகைய மேன்மைவாய்ந்த உயிர்த்துணையை நீங்கள் இழந்தது உங்களுடைய பெரிய துரதிர்ஷ்டமே. அவ்வளவு சிறந்த ஒரு வாழ்க்கைத் துணையை இளமைப் பிராயத்தில் தங்களைவிட்டுப் பிரிக்கவேண்டுமென்பது கடவுளின் ஆஞ்ஞை. ஆதலால், கழிந்தகாரியத்தைப்பற்றிப் புலம்பியழுவதால் பயன் ஒன்றுமில்லை. அருமைச் சகோதரரவர்களே, இத்துக்ககாலத்தில் நீங்கள் தைரியம்கொண்டு, உங்களால் கூடியவரை மனச்சமாதானத்தோடு உங்கள் வாழ்நாளைக் கழிப்பீர்களாக. நமது அன்பார்ந்த சுவாமியவர்கள் திருவடிகளில் எனது வந்தனோபசாரங்களையும் நல்விருப்பங்களையும் சமர்ப்பிக்கவேண்டுகிறேன்.
வீரவநல்லூர், தங்கள் உண்மையுள்ள,
23-6-1901. (ஒப்பம்) வி. அ. சொக்கலிங்கம்.”
————————