பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௩-ம் அதி.–தாய்தந்தையரைத் தொழுதல்.

தாயுந் தந்தையுந் தம்முதற் றெய்வம். ௨௧.
அவரிற் பெரியர் யாருமிங் கிலரே. ௨௨.
அவரடி முப்பொழு தநுதினந் தொழுக. ௨௩.
அவர்பணி யெல்லா மன்பொடு செய்க. ௨௪.
அவருரை யெல்லா மறிந்துளங் கொள்க. ௨௫.
அவர்பொருள் செய்தற் காந்துணை புரிக. ௨௬.
அவர்நட் பெல்லா மவர்போற் கொள்ளுக. ௨௭.
அவர்பகை யெல்லா மவர்போற் றள்ளுக. ௨௮.
அவர்பெயர் விளங்கிட வறிவமைந் தொழுகுக. ௨௯.
இல்வாழ் வரசிற் கியைந்தவ ராகுக. ௩0.

௪-ம் அதி.–மெய்யைத் தொழுதல்.

மெய்யுல கெல்லாஞ் செய்முதற் கடவுள் ௩௧.
உலகப் பொருட்கெலா முயிரென நிற்பது. ௩௨.
அறிவா யெங்கணுஞ் செறிவா யமைந்தது. ௩௩.
பகுத்தறி யுயிர்வினைப் பயனதற் களிப்பது. ௩௪.
உலகந் தனதரு ணலனுற வாள்வது. ௩௫.
தொழுமுறை யதனைமுப் பொழுது முள்ளல். ௩௬.
உள்ளியாங் குறங்கி யுள்ளியாங் கெழுதல். ௩௭.
எம்மதக் கடவுளுந் தம்ம தெனக்கொளல். ௩௮.
உலகி லதனடு வோர்ந்து நிற்றல். ௩௯.
அந்தண ராகி யதனிலை யடைதல். ௪0.


4