பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௧௯-ம் அதி.–பயனில் சொல் விலக்கல்.

பயனில்சொல் யார்க்கும் பயன்றராச் சொல்லே. ௧௮௧.
அறியா மையினின் றச்சொல் பிறக்கும். ௧௮௨.
அறியா மையினை யச்சொல் வளர்க்கும். ௧௮௩.
அறிவினர் நட்பெலா மச்சொல் குறைக்கும். ௧௮௪.
அறிவிலார் நட்பினை யச்சொல் பெருக்கும். ௧௮௫.
பயனுள சொல்லினைச் சொலவிடா தச்சொல். ௧௮௬.
பயனுள செயலினைச் செயவிடா தச்சொல். ௧௮௭.
பயனில சொல்லுவர் நயனுறா ரென்றும். ௧௮௮.
பயனில சொல்பவர் பதடியென் றறைப. ௧௮௯.
பயனில விலக்கிப் பயனுள சொல்லுக. ௧௯0.

௨0-ம் அதி.–அழுக்கா றொழித்தல்.

அழுக்கா றயலா ராக்கத்திற் புழுங்கல். ௧௯௧.
அழுக்கா றுறலினோ ரிழுக்கா றிலதே. ௧௯௨.
அழுக்கா றதுபோ லழிப்பதொன் றின்றே. ௧௯௩.
அழுக்கா றுளவரை யொழுக்கா றிலையே. ௧௯௪.
அழுக்கா றுடையார்க் காக்கமின் றாகும். ௧௯௫.
வறுமையும் பசியுஞ் சிறுமையு முளவாம். ௧௯௬.
அழுக்கா றுடைமைகீழ் வழுக்கா றென்ப. ௧௯௭.
விலங்குளு மழுக்கா றிலங்குத லில்லை. ௧௯௮.
அறிவுடை மக்க ளதுகொளல் புதுமை. ௧௯௯.
அழுக்கா றுளத்துறா தநுதின மோம்புக. ௨00.


12