பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௪௩-ம் அதி.–நெடுநீ ரொழித்தல்.

நெடுநீர் கால நீள விடுதல்; ௪௨௧
ஒருகணச் செயலைமற் றொன்றற் கீதல். ௪௨௨
நெடுநீர் குறைபல தருமியல் புடையது. ௪௨௩
நெடுநீர் சிறிதுறி னடுமதூஉம் பெருகி. ௪௨௪
நெடுநீ ரறவிடிற் படுபொரு ளாகும். ௪௨௫
நெடுநீர் விடற்கந் நினைவையுட் கொள்ளுக; ௪௨௬
நெடுநீ ரால்வருங் கெடுதியை யுள்ளுக; ௪௨௭
எக்கணத் தெஃதுறு மக்கணத் ததைச்செயல். ௪௨௮
உறுவ பெரிதென வுற்றதை வைத்திடேல். ௪௨௯
உற்றதைச் செய்துபி னுறுவதை யெண்ணுக. ௪௩0

௪௪-ம் அதி.–மறவி யொழித்தல்.

மறவிதன் கடமையை மனத்திலுன் னாமை. ௪௩௧
மறவியூக் கத்தின் மறுதலை யாகும். ௪௩௨
மறவி பலவகை யிறவையு நல்கும். ௪௩௩
மறவியை யடுத்தவர் மாண்பெலா மிழப்பர். ௪௩௪
மறவியை விடுத்தவர் மாநிலத் துயர்வர். ௪௩௫
மறவியை விடற்கு மனத்தினன் குள்ளுக; ௪௩௬
காலையு மாலையுங் கடவுளைத் தொழுக; ௪௩௭
மாணுயர் நூல்சில மனனஞ் செய்க; ௪௩௮
விடிந்தபின் செய்பவை விடியுமு னுள்ளுக; ௪௩௯
பகலிற் செய்தவை யிரவினன் காய்க. ௪௪0


24