பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்.

௮௫-ம் அதி.–கைத் தொழில்.

கைத்தொழில் பொருடரு மெய்த்தொழி லாகும். ௮௪௧
மற்றைய விரண்டையும் வளர்ப்ப தத்தொழில். ௮௪௨
அத்தொழில் பேணா ரடைகுவர் வறுமை. ௮௪௩
அத்தொழில் பல.அவை யாடை நெய்தல்; ௮௪௪
உணற்குஞ் செயற்கு முதவுவ செய்தல்; ௮௪௫
வீடரண் முதலிய மேம்பட வியற்றல்; ௮௪௬
நிலத்திற் செல்பல வலத்தே ராக்கல்; ௮௪௭
நீரிற் செல்பல நாவா யாக்கல்; ௮௪௮
நிலநீ ருள்ளுள பலபொரு ளெடுத்தல்; ௮௪௯
காப்பிற் காம்பல கருவிக ளியற்றல். ௮௫0

௮௬-ம் அதி.–படை.

பகையுயிர் படுத்தலாற் படையெனப் பட்டது. ௮௫௧
உலகெலா மளிப்பதோ ருத்தம வரசே. ௮௫௨
அரசரண் பொருள்களை யளிப்பது படையே. ௮௫௩
இன்பமும் புகழு மீவது படையே. ௮௫௪
மெய்யிய லடையச் செய்வதும் படையே. ௮௫௫
படையிலா ரரசரண் படுபொரு ளிழப்பர்; ௮௫௬
அறம்புக ழின்பறி வருண்மெய் யிழப்பர்; ௮௫௭
அடியராய்ச் சிறைபுகுந் தலக்கணுற் றுழல்வர்; ௮௫௮
பிணியொடும் பசியொடும் பிணக்குற் றழிவர்; ௮௫௯
நரகமும் பழியுங் கிருகமாக் கொள்வர். ௮௬0


45