பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௧0௩-ம் அதி.–தூது விடல்.

தூதொரு வர்க்குச் சொலச்சொலுஞ் சொல்லே. ௧0௨௧
எதிரியை யிணைத்தற் கெண்ணிய சொல்லே. ௧0௨௨
அறவர சமர்முன ரதுவிடல் வழக்கே. ௧0௨௩
அமையு மிடத்தெலா மதுவிடல் கடனே. ௧0௨௪
அறியாப் பகைக்கறி வளித்தலுங் கடனே. ௧0௨௫
தூதுரைப் பாரிய றூய்மையே வாய்மையே; ௧0௨௬
அன்பே துணிவே யழகே யாற்றலே; ௧0௨௭
நூலெலா மறிந்துள நுண்ணறி வுடைமையே; ௧0௨௮
அமையமும் பிறவு மறிந்துசொலுந் திறனே; ௧0௨௯
அமைச்சர சியலெலா மமைந்துள தன்மையே. ௧0௩0

௧0௪-ம் அதி.–அமர் செய்தல்.

தூதினுந் தெருளாத் தீயரை யடன்முறை. ௧0௩௧
அவரை யறவடா தவர்தீ தடறலை. ௧0௩௨
அரும்படை பெருக்கி யவரஞ் சச்செயல். ௧0௩௩
அறியா நெறியா லவரைச் சிறைகொளல். ௧0௩௪
அவரய லமர்செயு மமையத் தரண்கொளல். ௧0௩௫
அவரது பகைகொண் டவர்மற வலியடல். ௧0௩௬
அவரிற் சிலர்கொண் டவர்மற வலியடல். ௧0௩௭
அவரிற் சிலர்பிரித் தவர்மற வலியடல். ௧0௩௮
அமையு மமர்செய் தவர்மற வலியடல். ௧0௩௯
அளவுக் கதிக மடுவது தீது. ௧0௪0


54