பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௧௧௫-ம் அதி.–வெஃகாமை.

வெஃகுதல் பிறர்பொருள் விரும்புங் குற்றம். ௧௧௪௧
வெஃகலை மறத்தின் வித்தென மொழிப. ௧௧௪௨
அதுதீ யவாவி னங்குர மாகும்; ௧௧௪௩
காமமுங் களவுங் கலிதழை யிலைவிடும்; ௧௧௪௪
கொலையும் பொய்யுமாங் கொம்பொடு கிளைவிடும்; ௧௧௪௫
அழிதகு மறங்களா மரும்பொடு மலர்விடும்; ௧௧௪௬
பழியுங் கேடுமா மழியாக் காய்தரும்; ௧௧௪௭
அழிபல நிரயக் கழிபெருங் கனிதரும்; ௧௧௪௮
பொறிவழித் துன்பமாஞ் செறிபல சுவையாம். ௧௧௪௯
ஆதலால் வெஃகலை யறவே விடுக. ௧௧௫0

௧௧௬-ம் அதி.–வெகுளாமை.

வெகுளி யகத்தெழும் வெங்கனற் சுடரே. ௧௧௫௧
இச்சுடர் தம்மையு மினத்தையு மழிக்கும்; ௧௧௫௨
நகையை யுவகையைத் தகையைக் கொல்லும்; ௧௧௫௩
பகையைச் சொல்லரும் வகையில் வளர்க்கும்; ௧௧௫௪
மிகையுந் துயரு மிகுந்திடச் செய்யும்; ௧௧௫௫
வெகுளியை விடற்கவ் விருப்பமுட் கொள்ளுக; ௧௧௫௬
வெகுளியுள் ளெழுங்கா னகுதலேபுரிக; ௧௧௫௭
வெகுளியின் கேடெலாம் விரைந்துட னெண்ணுக; ௧௧௫௮
ஆடிகொண் டுடன்முக வழகினை நோக்குக. ௧௧௫௯
வெகுளியை யடுதலே தகுதியென் றடுக. ௧௧௬0


60