பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யியல்.

௧௨௧-ம் அதி.–மெய் யுண்மை.

உயர்கரி சுருதி யுத்தி யநுபவம். ௧௨0௧
தூயர் பகருரை சுருதி யென்ப. ௧௨0௨
பலமதத் தூயரும் பகர்ந்துள ருண்மை. ௧௨0௩
ஏது சிலகொண் டோதுவ துத்தி. ௧௨0௪
ஆத னிலவ லழித லிவணுள; ௧௨0௫
அவைசெயக் கர்த்தா வவசிய மென்க. ௧௨0௬
அறிந்துள் ளுணர்தலை யநுபவ மென்ப. ௧௨0௭
இடருறும் போழ்துமெய் யெண்ணுகின் றனர்பலர்; ௧௨0௮
பாவஞ் செயவுளம் பதைப்ப தநுபவம்; ௧௨0௯
அரசரு மாளப் படுவ தறிகிறோம். ௧௨௧0

௧௨௨-ம் அதி.–மெய்யின் அடக்கநிலை.

அடக்க நிலைமெய் யடங்கிய வறிவு. ௧௨௧௧
அண்டப் பொருளெலா மணுக்களின் சேர்க்கை. ௧௨௧௨
வலியிலா தணுக்கண் மருவிநிற் கும்மோ? ௧௨௧௩
அண்டஞ் சுற்றலு மதுகொண் டன்றோ? ௧௨௧௪
ஆதலா லெங்கணு மஃதமைந் துளதே. ௧௨௧௫
அகில நிகழுமா றாள்வ தறிவு. ௧௨௧௬
அன்றே லொழுங்கா வவைகண நிகழுமோ? ௧௨௧௭
ஆதலா லெங்கணு மறிவமைந் துளதே. ௧௨௧௮
நிறைபொரு ளிரண்டு நிலவா வென்ப. ௧௨௧௯
ஆதலால் வலியு மறிவு மொரேபொருள். ௧௨௨0


63