பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

அவைகள் பசித்திருக்கும். எப்பொழுதும் ஜாக்கிரதை குறைவான மீனாவது, நண்டாவது அகப்படுமாவென்று பார்த்துக்கொண்டேயிருக்கும். அவைகள் பாறைகளினிடையில் வாசம் செய்யும். தேன் கூண்டுபோல் இருக்கும் பவள மலை மேற்பரப்பில் அவைகள் மிகுதியாய் வாசம் செய்யும்; கடல் வற்றிய சமயத்தில், அம்மலைகளின் மேல் நான் நடந்து போய்க்கொண்டிருக்கும் பொழுது, இத்துஷ்ட பிராணிகளிலொன்று என்னை உண்மையில் கடித்துவிட்டது. என் காலடி சத்தம் கேட்டு அந்த மீன், திடீரென்று, தானிருந்த சிறு குட்டையிலிருந்து தன் தலையைக்கிளப்பி என் பாதத்தைக்கடித்தது. இந்த மீன் வைத்திருக்கும் செய்குளங்களில், அவைகள் கூட்டமாய்ச் சேர்ந்து வசிக்கும் குணத்தைக் காட்டுகின்றன. கொஞ்சநாளைக்கு முன் வரையிலும் அவைகள், நெ.1, குளத்தில், கடல்பாம்புகளோடு சேர்த்துவைக்கப்பட்டிருந்தன. ஒரு தடவை, புதிதாய்க்கொண்டுவரப்பட்ட ஒன்றை தற்காலம், நெ. 3, குளத்தில் வைத்திருந்தார்கள். மறுநாள் காலையில், நெ. 1, குளத்தில், தன் கூட்டாளிகளோடு சேர்ந்திருந்தது. வேலைக்காரன் அவைகளின் சுபாவம் அதுதான் என்று சொன்னான். அதைச் சோதித்துப்பார்ப்பதற்காக, வேறொரு கடல் விலாங்கை, நெ.1 குளத்திலிருந்து எடுத்து நெ. 3 குளத்தில் விட்டார்கள். முதலிலிருந்தே அது பதைபதைத்துக்கொண்டிருந்தது. சீக்கிரமாகவே, நெ. 2 குளத்திற்கும் அதற்கும் இடையில் உள்ள இரண்டு குளத்தையும் பிரிக்கும் சுவர் ஓரமாய் மேலே எழும்பி, தன் தலையையும் கழுத்தையும், அச்சுவரின் முனையை எட்டுகிற வரையில் தூக்கி, பின் தன் தேகத்தைத் தூக்கி நெ. 2 குளத்தில் நழுவி விழுந்துவிட்டது. அதேமாதிரியாக மீண்டும் செய்து, தன் கூட்டாளிகளிருக்கும் குளத்திற்கு வந்துவிட்டது. இவைகள் இவ்வாறு கூடியிருக்க விரும்பியபோதிலும், பெரிய விலங்குகளுக்குப் பசியுண்டானால் சிறு விலாங்குகளை விழுங்கிவிடுகின்றன.

ரோமாபுரியிலிருந்த எபிகியூரர் (Epicures) என்று சொல்லப்பட்ட சுகபோகதத்துவ ஞானிகளுக்கு கடல் விலாங்குகளைச் சாப்பிடுவதில் அதிகப்பிரியம். செல்வர்கள், இக்கடல் விலாங்குகளை மீன் வளர்க்கும் குட்டைகளில் வைத்து வளர்ப்பது வழக்கம். இந்த ஓயாப்பசியுள்ள மீன்களுக்கு ஆகாரமாகும்படி, அப்பிராணிகள் வசிக்கும் குட்டைகளில், அடிமைகளை தூக்கிப்போடப்பட்ட கதைகள் சொல்லப்படுகின்றன.

கடல்களில் உள்ள விராட்டு மீன்களில் இரண்டு தினுசுகள் (1) சிங்கார இரால் (2) கல் இரால் (Squat-lobster) சிலசமயங்களில் இந்தக்குளத்தில் வைக்கப்படுவதுண்டு. இவ்விரண்டு தினுசு விராட்டு இரால்களுக்கு வாலை பலமாய் அடித்துக்கொண்டு பின்பக்கம் நீந்தும் வினோத பழக்கமுண்டு. கல் இராலுக்குள்ள, அழுக்கான காக்கிநிறம், அது உயிர்வாழ்வதற்கு அனுகூலமாயிருக்கிறது. ஏனென்றால், அவைகள் சென்னை கடற்கரையோரங்களில் அதிக சாதாரணமாய் இருக்கும். அங்கே, அடிமட்டத்தோடு அரிக்கும் செம்படவர்கள் வலைகளில் அகப்பட்டுக்கொள்ளுகின்றன. (33-ம் பக்கத்தை பார்க்கவும்.)