பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தொல்காப்பியம்.


இளம்பூரணம்.


பதிப்புரை.


“தொல்காப்பியம்” என்னும் இந்நூல் தமிழ் மொழிக்குத் தலையாக விளக்கும் ஒப்புயர்வற்ற ஓர் இலக்கணம். இஃது அகத்தியனது பன்னிரு மாணாக்கருள் “திரணதூமாக்கினி” என்னும் இயற்பெயரினையும், “பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்" என்னும் புகழ்ப்பெயரினையும் கொண்டு விளங்கிய ஓர் முனிவனால் இயற்றப் பெற்றது. இதற்கு முதல் நூல் அகத்தியனால் இயற்றப்பெற்ற "அகத்தியம்” என்ப. இந்நூல் பன்னீராயிரம் வருஷங்களுக்கு முன் இயற்றப்பெற்றதென வீரசோழியத்தின் பதிப்புரையில் திருமன், சி. வை. தாமோதரம்பிள்ளை நிலைநாட்டியுள்ளனர்.

ஆண், பெண், அலிகளை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் விகுதிகளால் உணர்த்தவது தமிழ்மொழி ஒன்றே. ஆண்பால் விகுதியைப் பொருந்தி ஆணைக்குறியாமலும், பெண்பால் விகுதியைப் பொருந்திப் பெண்ணைக் குறியாமலும், ஒன்றன்பால் விகுதியைப் பொருந்தி அலியைக் குறியாமலும் நிற்கும் சொற்கள் ஆரியம் முதலிய மொழிகளில் எண்ணில உண்டு. உயர்திணை, அஃறிணை என்னும் தமிழ் இலக்கணப்பாகுபாடு ஆரியம் முதலியவற்றில் இல்லை, நிலத்தின் பாகுபாடுகளையும், அவற்றின் உரிப்பொருள், கருப்பொருள்களையும், அவற்றின் மக்களது ஒழுக்கங்களையும் கூறுவது தமிழ் இலக்கணம் ஒன்றே.

இவ்வகைத் தனிச் சிறப்புப்பொருந்திய இத்தமிழ் இலக்கணத்துள்ளும் ஆரியமொழிகள் சிலவற்றையும், ஆரியர் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும், ஆரியர் கொள்கைகள் சிலவற்றையும், இந்நூலாசிரியன் நுழைத்திருத்தலை ஆங்காங்குக் காணலாம். ஆயினும், தமிழ் மக்களின் முற்காலப் பழக்க வழக்க ஒழுக்கங்களும், தமிழ் மொழியின் நேர்மையும் மாண்பும் ஏற்றமும் இந்நூலின்கண் தெற்றெனக் காணலாகும். இந்நூலின் எழுத்ததிகாரச் சொல்லதிகாரச் சூத்திரங்களைக் கற்போர் நன்னூலாதியவற்றைப் புன்னூலாகக் காண்பரென்பது திண்ணம்.

இந்நூற்கு உரை எழுதினோர் இளம்பூரணர், கல்லாடர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் என்னும் ஐவர். அவருள் இளம்பூரணரும், பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் இந்நூலின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்