பதிப்பாசிரியர் குறிப்பு





இப்பகுதியில் இப்பொழுது வெளியிடப்படுவது தொல்காப்பியம் பொருளதிகார இளம்பூரணருரையில் இரண்டாவது பகுதி. இதிலே களவியல் கற்பியல் பொருளியல் என்பன அடங்கியுள்ளன. ஏனை இயல்களும் அச்சில் இருக்கின்றன. விரைவில் இளம்பூரண முழுமையும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வெளியிடுதற்குக் கிடைத்த கடிதப் பிரதிகளில் ஒன்று காலஞ் சென்ற த. மு. சொர்னம்பிள்ளையவர்களுக் குரியதாகும். அவர்கள் பிரதிசெய்யும் பொழுது உரையில் இல்லாத பலசொற்றொடர்களை இடையிடையே பெய்திருக்கிறார்கள் என்பது பல காரணங்களால் ஊகிக்கக்கூடியதாயிருக்கிறது. பிறிதொரு பிரதி ஶ்ரீமான் தி. நா. சுப்பிரமணிய ஐயரிடமிருந்து கிடைத்தது. இது சொர்னம்பிள்ளை யவர்களது பிரதியைப்பார்த்து எழுதிய கடிதப் பிரதியின் பிரதியென்று தெரியவருகிறது. இதிலும் பலவகையான இடைச்செருகல்கள் உள்ளன. மூன்றாவது பிரதி ஶ்ரீமான் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களுக்குரியது. இது 1912 ல் ஶ்ரீமான் தி. த. கனகசுந்தரம்பிள்ளை யவர்கள் எட்டுப்பிரதியைப் பார்த்து எழுதிய கைப்பிரதியாகும். இதுவே இடைச்செருகல்களைத் தெரிந்துகொள்வதற்கும் மூலத்தின் சுத்தபாடத்தை நிச்சயிப்பதற்கும் பெரிதும் பயன்பட்டது. இதனையே த. மு. சொர்னம்பிள்ள யவர்கள் இரவலாகப் பெற்றுத் தமக்குத் தோற்றியவாறு பலவிடங்களில் மாற்றியுங் கூட்டியும் பிரதிசெய்து கொண்டார்கள்.
இப்பொழுது வெளியிடும் பகுதியில் ஒரு சில இடங்களில் இளம்பூரணருரை மறைந்து போய்விட்டது. இவ்விடங்களில் நச்சினார்க்கினியருரையைத் தழுவி உரையெழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வகையான இடங்கள் அங்கங்கே அடையாளமிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இருதலைப்பகரத்துள் அமைத்துள்ள எழுத்துக்களும் சொற்களும் இன்றியமையாமைபற்றிப் புதிதாகச் சேர்க்கப்பட்டன வாகும்.