பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

௱௮௨

தொல்காப்பியம் - இளம்பூரணம்

வலவ னாய்ந்த வண்பரி
நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே.”

[அகம் - ௨௰] எனவரும்.

[தன்குறி தள்ளிய தெருளாக் காலை] வந்தவன் பெயர்ந்த வறுங் களம் நோக்கித் தன்பிழைப்பாகத் தழீஇத் தேறியதற்குச் செய்யுள்:—

‘இருள் கிழிப்பது போல்’ என்னும் களிற்றியானை நிரையுள்,

“வாணடந் தன்ன வழக்கருங் கலவை
யுள்ளுந ருட்குங் கல்லடர்ச் சிறுநெறி
யருள்புரி நெஞ்சமோ டெஃகு துணையாக
வந்தோன் கொடியனு மல்லன் றந்த
நீதவ றுடையையு மல்லை நின்வயி
னானா வரும்படர் செய்த
யானே தோழி தவறுடை யேனே.” [அகம் - எஉ]

எனவரும்.

வழுவின்று - அன்னவுமளவே என்பது—வழுவின்று நிலைஇய இயற்படுபொருண் முதலாக 'ஏமஞ் சான்ற உவகை' யீறாகச் சொல்லப்பட்ட இடங்களில் தன்னிடத்து உரிமையும் அவனிடத்துப் பரத்தமையும் அன்னவையும் நிகழப்பெறும் என்றவாறு.

அன்ன என்பது, அவை போல்வன என்றவாறு.

ஓரிடத்துக்கண் என்றதனால் இவ்வாறு எல்லார் மாட்டும் எவ்விடத்தும் நிகழாது என்றவாறாம். எனவே மேற் குறிப்பினும் இடத்தினுமல்லது [களவியல் - ௰௮]. கூற்று நிகழாதென்பதனை மறுத்து ஓரிடத்துக் கூற்று நிகழும் என்றவாறாம்.

அவற்றுள், வழுவின்று நிலையே இயற்படு பொருளினும் என்பது—தலைவனை இயற்பழித்தவழி அவன் குற்றமிலனாக நிலைநிறுத்தப்பட்ட இயற்படமொழிந்த பொருண்மைக் கண்ணும் தன்வயின் உரிமைதோன்றவும் அவன்வயிற் பரத்தைமை தோன்றவும் கூறும் தலைவி என்றவாறு.

இரண்டினுள் ஒன்றுதோன்ற உரைக்கு மென்றவாறு. எனவே இரண்டுந் தோற்ற வருவனவு முளவாம்.

பொழது மாறும் - சிந்தைக் கண்ணும் என்பது—தலைவன் வருங் காலமும் இடனும் குற்றமுளவாதலான். ஆண்டு அழிவுவந்த சிந்தைக்கண்ணும் தலைமகள் [தன்வயின்] உரிமையும் அவன் வயிற் பரத்தை[மை]யும் தோன்றக் கூறும் என்றவாறு.

காமஞ் சிறப்பினும் என்பது—தலைமகன்மாட்டு வேட்கை மிகினும் தன்வயின் உரிமையும் அவன் வயிற் பரத்தை[மை]யும் உரைக்குந்தலைவி என்றவாறு.

அவன் அளி சிறப்பினும் என்பது—தலைவன் தலையளி மிக்கவழியும் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தை[மை]யும் தோன்றக்கூறும் என்றவாறு.

ஏமஞ்சான்ற உவகைக்கண்ணும் என்பது—ஏமம் பொருந்திய மகிழ்ச்சிவந்துழித் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தை[மை]யும் தோன்றக் கூறும் என்றவாறு. அஃதாவது இவன் வரைந்தல்லது நீங்கான் என்னும் உவகை.

அவற்றுள், வழுவின்று நிலைஇய இயற்படு பொருட்கண் கூறியதற்குச் செய்யுள்:—

“அடும்பம லங்கொடி யுள்புதைந் தொளிப்ப
வெண்மலர் விரிக்குந் தண்ணந் துறைவன்