பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

௱௪௨

தொல்காப்பியம் - இளம்பூரணம்


ஒன்றியுயர்ந்த பாலதாணையின் என்றது—இருவருள்ளமும் பிறப்புத்தோறும் ஒன்றி நல்வினைக்கண்ணே நிகழ்ந்த ஊழினது ஆணையின் என்றவாறு.

உயர்ந்ததன் மேற்செல்லும் மன நிகழ்ச்சி உயர்ந்த பாலாயிற்று. காமநிகழ்ச்சியின்கண் ஒத்த அன்பினராய்க் கூடுதல் நல்வினையான் அல்லது வாராதென்பது கருத்து.

ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப என்பது;

ஒப்பு பத்துவகைப்படும்.[அவை]

“பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயி
னிறையே யருனே யுணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த வொப்பினது வகையே.”[மெய்ப்-௨௫]

என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் [கூறியபத்துமாம்.] [அவற்றுள்] பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வருங்குலம், குடிமையாவது அக்குலத்தினுள்ளா ரெல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம்பற்றிய [குடிவரவு.] குடிவரவைக் குடிமை என்றார்.

“பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். [குறள்-௯௭௨]”

எனப் பிறரும் குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டென்று கூறினாராகலின். ஆண்மையாவது, ஆண்மைத்தன்மை. அஃதாவது, ஆள்வினையுடைமையும் வலி பெயராமையுமாம்.

“மொழியா ததனை முட்டின்றி முடித்தல்” [மரபியல்-௱௭]

என்பதனால் தலைமகள் மாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிர்க்கு இயல்பாகிய நாணம் முதலாயினவும் பெண்ணீர்மையும், ஆண்டென்பது, ஒருவரினொருவர் முதியரன்றி ஒத்த பருவத்தராதல். அது குழவிப்பருவங் கழிந்து பதினாறு பிராயத்தானும் பன்னிரண்டு பிராயத்தாளு மாதல். உரு என்பது வனப்பு. நிறுத்த காமவாயில் என்பது நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில். அஃதாவது, ஒருவர் மாட்டு ஒருவர்க்கு நிகழும் அன்பு. நிறை என்பது அடக்கம். அருள் என்பது பிறர் வருத்தத்திற்குப் பரியும் கருணை. உணர்வென்பது அறிவு. திரு என்பது செல்வம். இப்பத்து வகையும் ஒத்த கிழவனும் கிழத்தியும் எதிர்ப்படுவர் எனக் கொள்க.

மீக்கோ... யின்றே என்பது—இக்குணங்களால் தலைமகன் மிக்கானாயினுங் கடியப்படாது என்றவாறு.

எனவே, இவற்றுள் யாதானும் ஒன்றினாயினும் தலைமகள் மிக்காளாயின் ஐந்திணையிற் கடியப்படும் என்றவாறாம்.

பாலதாணையிற்... காண்ப என்பது ஒருவரை யொருவர் கண்டுழியெல்லாம் புணர்ச்சி வேட்கை தோற்றாமையிற் பாலதாணையான் ஒருவரையொருவர் புணர்தற் குறிப்பொடு காண்ப என்றவாறு. மிக்கோனாயினும் என்ற உண்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. எற்றுக்கு, எதிர்மறையாக்கி ‘இழிந்தோனாயினும் கடியப்படாது’ என்றாற் குற்றமென்னை யெனின், செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி வருகின்ற பெருமை யாதலின், இழிந்தானொடு உயர்ந்தாட்குளதாகிய கூட்டமின்மை பெருவழக்காதலின் அது பொருளாகக் கொள்ளாம் என்பது. ஈண்டுக் கிழவனும் கிழத்தியும் என ஒருவனு மொருத்தியும் போலக் கூறினாராயினும்,