பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ii

விஷயங்களைச் சேர்த்தும் பெருக்கியும் இப்போது நம் முன்பாக உள்ள அழகிய உயரிய நூலாக அமைத்து நம் தமிழ் மக்களுக்கு மட்டுமேயன்றி ஆங்கில உலகம் முழுவதுக்கும் பரிவோடு அளித்துள்ளார். இந்நூல் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு ஓர் அரிய விருந்தே என்று கூறின் அது ஒருக்காலும் மிகையாகாது. கடல்போன்ற பெரிய விஷயங்களை அணுப்போன்ற சிறிய அதிகாரங்களில் சுருங்கச்சொல்லி விளங்கவைத்திருக்கும் ஆசிரியரது திறமை அளவிடற்கரியதாகும். கூர்ந்து தாக்கும் கொடுஞ்சொற்களும், நகையாடி நகைப்பிக்கும் கேலிக்கூற்றும், உணர்ச்சியை ஊட்டும் உன்னத வார்த்தைகளும், பற்பல எண்ணிறந்த பெரியார்களின் விலைமதிப்பில்லாத மேற்கோள்களும் இந்நூலில் ஆதியிலிருந்து இறுதிவரை அழகாய் பொலிந்து வாசிப்பவர்களுக்கு இன்பம் பயந்து வருகின்றன. சுருக்கமாகக் கூறவேண்டின், இந்நூலின் ஆணித்தரமான தர்க்கமுறையையும், மேற்கோளோடும் சட்ட முறையின் படியும், சரித்திர சாட்சியத்தோடும் நம் தோழர் சிதம்பரம் அவர்கள் இந்தியாவிலுள்ள கோவில்களுக்குள் நுழைய எல்லா மக்களுக்கும் மறுத்தற்கியலாத உரிமை உண்டு என்று கூறியிருத்தலை அறிவுடைய எம்மனிதனும் நியாயம் என்பதைக்கொண்டு எதிர்த்துப் பதில் கூற முடியாது என்பது முக்காலும் நிச்சயம்.

இந்நூலுக்கு இந்நூலே சமம்; ஆதலால் இதில் கிடக்கும் மடிக்க முடியாத பொக்கிஷத்தை அவரவரே வாங்கிப் படித்தாலொழிய அதை முழுதும் எடுத்துக் கூறிவிடுதல் முடியாத காரியமேயாகும். எனினும் இந்நூல் முழுதும் ஓடிக்கொண்டிருக்கும் நூல்போன்ற கருத்துத் தொடர்ச்சியையும் தர்க்க முறையையும் மட்டும் சுருக்கமாக நம் நேயர்களுக்கு சொல்லலாமென நினைக்கிறோம். இந்நூலின் முக்கிய கருத்து பின்வருமாறு:-

ஒவ்வொரு ஹிந்துவும், தீண்டப்படுபவனாயினும், தீண்டப்படாதவனாயினும், ஜாதியுள்ளவனாயினும், ஜாதிக்குப் புறம்பானவனாயினும் எந்த விதமான பொதுக்கோவிலுக்குள்