பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

குறட் கையெழுத்து ஏடுகளிலும் அச்சுப் புத்தகங்களிலும் அவை காணப்படுகிற இடத்திலேயே சேர்த்துள்ளேன். திருவள்ளுவ மாலைப் பாக்களைத் திருத்தணிகைச் சரவணப் பெருமா ளையரவர்கள் உரையோடும், திரிசிரபுரம் மகாவித்வான் மீனாச்சிசுந்தரம் பிள்ளையவர்கள் முதலிய நால்வர் பாக்களை எனது உரையோடும் "சிறப்புப்பாயிரம்" என்னும் தலைப்பெயருடன் இவ்வுரைப் பாயிரத்திற்கும் இடைப் பாயிரத்திற்கும் இடையில் சேர்த்துள்ளேன்.

திருவள்ளுவ மாலைப் பாக்களிற் சில மேற்கண்ட மூன்று அதிகாரங்களையும் திருக்குறட் பாயிரம் எனக் கூறுகின்றனவே எனின், அப் பாக்களைப் பாடியவர்களாகக் குறிக்கப்பட்டுள்ள புலவர்கள் திருவள்ளுவர் காலத்திற்கு மிகப் பிற்பட்ட காலத்தவர்க ளென்றும், அவர்களிற் சிலர் தாம் திருக்குறளைப் படித்த காலங்களில் அதன் பெருமையைப் பற்றிப் பாக்கள் பாடித் திருக்குறட் சுவடிகளிற் சேர்த்தன ரென்றும்,அவர்களில் வேறு சிலர் தமிழ் நூல்களிற் பல அழிவுற்ற காலத்தில் திருக்குறளில் உள்ளவை இன்னவை யென்று பிற் காலத்தார் தெரிந்து கொள்ளும் பொருட்டுத் தமக்குக் கிடைத்த திருக்குறட் சுவடிகளில் கண்டபடி, பால், இயல், அதிகாரங்களின் தொகைகளை வரையறை யிட்டுப் பாக்களைப் பாடித் திருக்குறட் சுவடிகளில் சேர்த்தனரென்றும், அப் பாக்க ளெல்லாம் சேர்ந்து அவர்களுக்குப் பிற்பட்ட காலத்தார் ஒருவரால் கொடுக்கப்பட்ட "திருவள்ளுவ மாலை" என்னும் தலைப்பெயருடன் வழங்கி வருகின்றன வென்றும் விடையளித்திடுக.

4