பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்.

பாடங்கள் கொண்டிருப்பதும் திருக்குறளின் மூல பாடங்களில் புகுந்திருந்த எழுத்துப் பிழைகளையும் சொற் பிழைகளையும் திருத்தும்படியான துணிவை எனக்குத் தந்தன.

எனது உரையில் பொருள் என்னும் சொல்லோடு தொடங்கிப் பதவுரை எழுதியுள்ளேன்; அவ்வுரையில் வருவிக்கப்பட்ட சொற்களை ( ) இவ் வடையாளங்களுள் அமைத்துள்ளேன்; அகலம் என்னும் சொல்லோடு தொடங்கி இலக்கணக் குறிப்பு, வினா விடை, மேற்கோள், பாடபேதம் முதலியவற்றைக் குறித்துள்ளேன்; கருத்து என்னும் சொல்லோடு தொடங்கிக் கருத்தினைக் கூறியுள்ளேன். என் உரையைப் படிக்கத் தொடங்குபவர்களில் முன் இலக்கிய இலக்கண ஆராய்ச்சி யில்லாதார், முதன் முறை படிக்கும் போது பொருளையும் கருத்தையும் மாத்திரம் படிக்குமாறும், நூல் முழுவதையும் ஒரு முறை படித்து முடித்து நூலை இரண்டாம் முறை படிக்கும் போது அகலத்தையும் சேர்த்துப் படிக்குமாறும் வேண்டுகிறேன்.

அவையடக்கம் கூறுதல் பேரறிவுடையார் வழக்காகலின், அஃதில்லாத யான் அதனைக் கூறாது விடுகிறேன். தமிழ் மக்களெல்லாம் திருவள்ளுவர் திருக்குறளைக் கற்றும் கேட்டும் உணர்ந்து, அது கூறும் நெறியில் ஒழுகி மேம்பட வேண்டு மென்று யான் கோருகிறேன். எல்லாம் வல்ல இறைவன் துணை.

தூத்துக்குடி.
9—1—35.
உரையாசிரியன்

8