பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

கூறினான், '"மன்ன னெப்படி மன்னுயி ரப்படி" ஆகலின். இப் புத்தகத்தை முன்னே பூசித்து மெய் மொழி மனங்களால் வணக்கஞ் செய்து பின் கேட்க வேண்டு மென்று சொல்லியபடி, (௪)

கபிலர்.

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும். படித்தான்-மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி.

இ-ள். மனை அளகு வள்ளைக்கு உறங்கும் வள நாட-மனையில் வளர்க்கப்படுகின்ற பறவைப் பேடுகள் உலக்கைப் பாட்டால் கண்ணுறங்குகின்ற வளம் பொருந்திய நாட்டையுடைய அரசனே, வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி - திருவள்ளுவரால் அருளிச் செய்யப்பட்ட குறள் வெண்பா மிகப் பெரிய பொருளைத் தன்னுட் கொண்டு காட்டுதல், தினை யளவு போதாச் சிறு புன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்து - தினையரிசியி னளவுக்கும் போதாத சிறிய புல்லினது நுனியின்க ணுள்ள பனி நீர் உயர்ந்த பனையின் அளவான அதன் சாயையைத் தன்னுட்கொண்டு காட்டுங் குணம்போலுங் குணத்தை யுடைத்து.

'பனை' ஆகு பெயர். 'ஆல்' அசை. பறவை-கிளி முதலியவை. உலக்கைப் பாட்டு, மகளிர் பரிமளப் பொடி இடிக்கின்றபோது பாடும் பாட்டு. விரி - விரித்தல், எப்படி மிகச் சிறிய பனித் துளியிலே மிகப் பெரிய பனை மரத்தின் சாயை அடங்கி விளங்குகின்றதோ, அப்படியே மிகச் சிறிய இக் குறள் வெண்பாவில் மிகப் பெரிய பொருள் அடங்கி விளங்குகின்ற தென்பதாம். இது சுருங்கியிருந்தும் விரிவான பொருளை விளக்குமாறு சொல்லியபடி. இது முதலியன சங்கத்துப் புலவராலே பாடப்பட்டன. (௫)

13