பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

பாரதம் பாடிய பெருந்தேவனார்.

எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு-முப்பாற்குப்
பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்.

இ-ள். பாரதம் சீ ராம கதை மனுப் பண்டை மறை நேர்வன - பாரதம் பழைய சீ ராம கதையையும், மனு மிருதி பழைய வேதத்தையும் ஒப்பன வாகும்; எப் பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச் செப்பிய வள்ளுவர் செப்ப வரும் முப்பாற்கு நிகர் இல்லை - எவ் வகைப்பட்ட பொருள்களையும் எவ்வகையோரும் அவற்றின் தன்மையோடு அறிய அவர்க்குச் சொல்லும் படிக்குத் திருவள்ளுவர் சொல்லலால் வந்த திருக்குறளுக்கு உவமானமாகத் தக்கது ஒன்றில்லை.

'மற்று' அசை. அறிதற் கரிய வேதாந்தப் பொருளு மென்றற்கு எப் பொருளு மென்றும், உயர் குலத்தாரேயன்றி ஏனையோரு மென்றற்கு யாரு மென்றும், ஐயந் திரி பின்றி அறிய வென்றற்கு இயல்பி னறிவுற வென்றும், இதுவே சுருதி குரு விரண்டு மா மென்றற்குச் செப்பிய வென்றும் கூறினார். பண்டை யென்பது சீ ராம கதைக்குங் கூட்டுக. கதா ரூபமா யிருந்து பாரத ராமாயணமெனவும், விதி ரூபமா யிருந்து சுருதி மிருதி யெனவும் கூட்டிச் சொல்லப்படுதலால், உவமான உவமேயங்க ளாதல் அறிக. எப் பொருளும் யாரு மியல்பி னறிவுறச் செப்புதல் வேதத்திற் கின்மையால், முன் முப்பாலின் மிக்க மொழி யென்ற அதனாற் பெறப்பட்ட வேதத்தி னொப்புமையை மறுத்தபடி. (௩௰)

உருத்திர சன்ம கண்ணர்.

மணற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத்
துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால்- பிணக்கிலா

35