பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

இ-ள். வேதப் பொருளை உலகோர் ஓத விரகால் விரித்துத் தமிழால் உரை செய்தார் - வேதத்தின் பொருளை உலகத்தார் ஓதி யுணரும் பொருட்டு உபாயத்தால் விரித்துத் தமிழ் மொழியினாலே சொல்லி யருளினார்; ஆதலால், உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் வள்ளுவர் வாய் மொழிமாட்டு உண்டு என்ப - ஆதலால், நினைப்பவர் நினைக்கும் பொருள்க ளெல்லாம் திருவள்ளுவர் திருவாயிற் பிறந்த திருக்குறளின்கண்ணே உண்டென்று அறிவுடையோர் சொல்லுவர்.

உபாயத்தால் விரித்தல், சொற் சுருக்கத்தால் ஓதற் கெளிதென மன வெழுச்சி யுண்டாக்கிக் கற்போரது அறி வளவிற் கேற்கப் பொரு ளளவு விரிய வைத்தல். நினைக்கப் படும் பொருள்க ளெல்லாம் இதன்கண்ணே இக் காரணத்தால் தோன்றாநின்றன வென்று கூறிய படி. (௪௰௨)

வண்ணக்கஞ் சாத்தனார்.

ஆரியமுஞ் செந்தமிழு மாராய்ந் திதனினிது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதா-லாரியம்
வேத முடைத்துத் தமிழ்திரு வள்ளுவனா
ரோது குறட்பா வுடைத்து.

இ-ள். ஆரியமும் செந் தமிழும் ஆராய்ந்து இதனின் இது சீரியது என்று ஒன்றைச் செப் பரிது - வடமொழியையும் தென்மொழியையும் ஆராய்ந்து இதைக்காட்டினும் இது சிறப்புடைத் தென்று ஒன்றைத் தெரிந்து சொல்லுதல் கூடாது; ஆரியம் வேதம் உடைத்துத் தமிழ் திருவள்ளுவனார் ஓது குறட்பா உடைத்து - வடமொழி வேத முடைத்து; தமிழ்மொழி திருவள்ளுவ நாயனார்

சொல்லிய குறட்பாவுடைத்து (ஆதலால்).

45