பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் திருக்குறள்

தற் கெட்டாதிருந்த அறம் முதலியவற்றி னுட்பங்கள். இம்மை மறுமை வீடுகளைக் குறித் துணர்தற் குரிய உறுதிப் பொரு ணான்கு முணர்தலின், இனி யாதொன்றாலுங் குறைவில்லை யென்ற படி. (௫௰)

கவுணியனார்.

சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த விருவினைக்கு மாமருந்து—முந்திய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய வின்குறள் வெண்பா.

இ—ள். முந்திய நன்னெறி நாம் அறிய நாப் புலமை வள்ளுவனார் பன்னிய இன் குறள் வெண்பா—முற்பட்டதாகிய நல்ல வழியை நாமறியும் பொருட்டு நாவால் விளங்குகின்ற புலமையையுடைய திருவள்ளுவ நாயனாராற் சொல்லப்பட்ட இனிய குறள் வெண்பாக்கள், சிந்தைக்கு இனிய—நினைத்தால் மனதிற்கு இன்பஞ் செய்வன; செவிக்கு இனிய-கேட்டாற் காதுக்கு இன்பஞ் செய்வன; வாய்க்கு இனிய—ஓதினால் வாய்க்கு இன்பஞ் செய்வன; வந்த இரு வினைக்கு மா மருந்து—தொடர்ந்து வருகின்ற இரு வினைகளாகிய நோய்களுக்குப் பெரிய மருந்துக ளாவன.

குறட்பாவை மருந் தென்றமைக்கு எற்க வினையை நோயென் னாமையால், ஏக தேச ரூபகம். நல் வினையும் பிறவிக்கு ஏதுவாகலால், இருவினை யென்றார். முற் பட்ட நல் வழி நன் மக்களுக்கு அநாதியா யமைந்துள்ளது; அது சமயத்தாரது பல்வகைப்பட்ட கற்பனையினாலே மறைபட்டு நின்றமையின், நா மறிய வென்றார். இந் நூலின் பாக்களைச் சிந்தித்தன் முதலியன செய்யுங்காலும் சொற் பொரு ணயங்களாலே இன்பம் விளைத்துத் தெய்வத் தன்மையால் வினைத் துயரும் ஒழிக்கு மென்ற படி, (௫௰௧)

52