பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள்—அறப்பால்.

துணிந்து, இப்பொழுது அறப்பாலையும் அதன் உரையையும் ஒரு புத்தக மாக்கி வெளியிடுகின்றேன்.

அறப்பாலில் 76 குறள்களில் என் உரை பரிமேலழகர் உரைக்கு வேறுபடுகின்றது. 12 குறள்களில் என் உரை அவர் உரையை வெளிப்படையாக மறுக்கின்றது. 5 குறள்களில் என் உரை அவர் உரையை வெளிப்படையாக ஆமோதிக்கின்றது. மீதக் குறள்களில் என் உரையும் அவர் உரையும் ஒத்திருத்தல் கூடும். அறப்பாலில் பரிமேலழகர் கொண்டுள்ள மூல பாடங்களுக்கு வேறாக 151 மூல பாடங்களை மணக்குடவரும் மற்றும் மூன்று உரையாசிரியர்களும் கொண்டுள்ளார்கள். பரிமேலழகர் கொண்டுள்ள மூல பாடங்களுக்கு வேறாக 74 மூல பாடங்களை யான் கொண்டுள்ளேன். அவற்றில், 30 பாடங்கள் முந்திய உரையாசிரியர்கள் கொண்டுள்ள பாடங்கள். மீதம் 44 பாடங்கள்தான் யானாகக் கொண்டுள்ள பாடங்கள். அப்பாடங்களை யான் கொண்டதற்குரிய காரணம், அப் பரிமேலழகர் பாடங்கள், ஏடு பெயர்த் தெழுதியோரால் நேர்ந்த பிழைப் பாடங்கள் என யான் கருதியதே. யான் கருதியது போலவே, பழம் பெரும் புலவரான மகா வித்வான் மீனாச்சிசுந்தரம் பிள்ளை யவர்களும் பல பிழைகள் அக்காரணத்தால் மூலத்தில் புகுந்துள்ளன என்று கருதியிருக்கிறார்கள். அவர்கள் திருக்குறள்-பரிமேலழகருரை-ஆறுமுக நாவலர் பதிப்புக்குக் கொடுத்துள்ள சிறப்புச் செய்யுள்களில் ஒன்றில் ‘ஏட்டுவரைந் தெடுத்துணர்ந்து வருநாளி லெங்கணுஞ்சா லெழுத்துக்குற்றம்,

vi