பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

221


4. தன்னாட்சி மாவட்டங்களிலும் தன்னாட்சி வட்டாரங்களிலும் நீதி நிருவாகம் :

(1) ஒரு தன்னாட்சி வட்டாரத்திற்கான வட்டார மன்றம், அத்தகைய வட்டாரத்திற்குள் உள்ள வரையிடங்களைப் பொறுத்தும், ஒரு தன்னாட்சி மாவட்டத்திற்கான மாவட்ட மன்றம், அந்த மாவட்டத்திற்குள் வட்டார மன்றங்கள், எவையேனுமிருப்பின், அவற்றின் அதிகாரத்தின் கீழுள்ள வரையிடங்கள் நீங்கலாக அந்த மாவட்டத்திற்குள் உள்ள பிற வரையிடங்களைப் பொறுத்தும், அத்தகைய வரையிடங்களிலுள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினர் மட்டுமே தரப்பினர்களாகவுள்ள, இந்த இணைப்புப்பட்டியலின் 5ஆம் பத்தியின் (1)ஆம் உள்பத்தியின் வகையங்கள் பொருந்துறும் உரிமைவழக்குகளும் பிற வழக்குகளும் அல்லாத பிற உரிமைவழக்குகளையும், வழக்குகளையும் விசாரணை செய்வதற்காக, அந்த மாநிலத்திலுள்ள பிற நீதிமன்றங்களை விலக்கும் வகையில் ஊராட்சி மன்றங்களை அல்லது ஊர் நீதிமன்றங்களை அமைக்கலாம்; மற்றும், தக்கவர்களை அத்தகைய ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாகவோ அத்தகைய நீதிமன்றங்களின் தலைமை வகிக்கும் அலுவலர்களாகவோ அமர்த்தலாம்; மேலும், இந்த இணைப்புப்பட்டியலின் 3ஆம் பத்தியின்படி இயற்றப்பட்ட சட்டங்களை நிருவகிப்பதற்குத் தேவைப்படும் அலுவலர்களையும் அமர்த்தலாம்.

(2) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், ஒரு தன்னாட்சி வட்டாரத்திற்கான வட்டார மன்றமோ வட்டார மன்றத்தால் அதற்கென அமைக்கப்பட்ட நீதிமன்றமோ, ஒரு தன்னாட்சி மாவட்டத்திலுள்ள வரையிடம் எதற்கும் ஒரு வட்டார மன்றம் இல்லாதிருப்பின், அத்தகைய மாவட்டத்திற்கான மாவட்ட மன்றமோ, மாவட்ட மன்றத்தால் அதற்கென அமைக்கப்பட்ட நீதிமன்றமோ, இந்த பத்தியின் (1)ஆம் உள்பத்தியின்படி அத்தகைய வட்டாரத்திற்குள் அல்லது, நேர்வுக்கேற்ப, வரையிடத்திற்குள் அமைக்கப்பட்ட ஊராட்சி மன்றம் அல்லது ஊர் நீதிமன்றம் ஒன்றினால் விசாரணை செய்யத் தகுவதான, ஆனால், இந்த இணைப்புப்பட்டியலின் 5ஆம் பத்தியின் (1) ஆம் உள்பத்தியின் வகையங்கள் பொருந்துறுவனவாக அல்லாத உரிமைவழக்குகள், வழக்குகள் அனைத்தையும் பொறுத்து, ஒரு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிகாரங்களைச் செலுத்தி வரும்; மேலும், அத்தகைய உரிமைவழக்குகள் அல்லது வழக்குகள் பொறுத்து, உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தவிர, பிற நீதிமன்றம் எதுவும் அதிகாரம் உடையது ஆகாது.

(3) இந்தப் பத்தியின் (2) ஆம் உள்பத்தியின் வகையங்கள் பொருந்துகிற உரிமைவழக்குகளின் மீதும் பிற வழக்குகளின் மீதும், ஆளுநர், அவ்வப்போது ஆணையின் வழிக் குறித்துரைக்கும் அதிகாரவரம்பினை உயர் நீதிமன்றம் கொண்டதாகி, அதனைச் செலுத்திவரும்.

(4) ஒரு வட்டார மன்றம் அல்லது, நேர்வுக்கேற்ப, மாவட்ட மன்றம், ஆளுநரின் முன் ஒப்பேற்புடன், பின்வருவனவற்றை ஒழுங்குறுத்துவதற்கான விதிகளைச் செய்யலாம்:-

(அ)ஊராட்சி மன்றங்களையும் ஊர் நீதிமன்றங்களையும் அமைத்தல்; இந்தப் பத்தியின்படி அவற்றால் செலுத்தப்படவேண்டிய அதிகாரங்கள்;
(ஆ) இந்தப் பத்தியின் (1)ஆம் உள்பத்தியின்படி, உரிமைவழக்குகளையும் பிற வழக்குகளையும் விசாரணை செய்கையில் ஊராட்சி மன்றங்களாலும் ஊர் நீதிமன்றங்களாலும் பின்பற்றப்படவேண்டிய நெறிமுறை;
(இ)இந்தப் பத்தியின் (2) ஆம் உள்பத்தியின்படி மேன்முறையீடுகளிலும் பிற நடவடிக்கைகளிலும், வட்டார மன்றத்தால் அல்லது மாவட்ட மன்றத்தால் அல்லது அத்தகைய மன்றத்தால் அமைக்கப்படும் நீதிமன்றம் எதனாலும் பின்பற்றப்படவேண்டிய நெறிமுறை;
(ஈ) அத்தகைய மன்றங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் முடிபுகளையும் ஆணைகளையும் செல்லுறுத்துதல்;
(உ)இந்தப் பத்தியின் (1), (2) ஆகிய உள்பத்திகளின் வகையங்களை நிறைவேற்றுவதற்காக உள்ள பிற சார்வுறு பொருட்பாடுகள் அனைத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/247&oldid=1467243" இலிருந்து மீள்விக்கப்பட்டது