பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

223


5. 1908ஆம் ஆண்டு உரிமையியல் நெறிமுறைத் தொகுப்புச்சட்டம், 11898 ஆம் ஆண்டு குற்றவியல் நெறிமுறைத் தொகுப்புச்சட்டம் ஆகியவற்றின்படி குறித்த சில உரிமை வழக்குகளையும் பிற வழக்குகளையும் குற்றச்செயல்களையும் விசாரிப்பதற்காக வட்டார மற்றும் மாவட்ட மன்றங்களுக்கும் குறித்தசில நீதிமன்றங்களுக்கும் அலுவலர்களுக்கும் அதிகாரங்கள் வழங்குதல் :

(1) ஒரு தன்னாட்சி மாவட்டம் அல்லது வட்டாரம் எதிலும் செல்லாற்றலிலுள்ளதும், ஆளுநரால் இதற்கெனக் குறித்துரைக்கப்பட்டுள்ளதுமான சட்டம் எதிலிருந்தும் எழுகின்ற உரிமைவழக்குகளை அல்லது பிற வழக்குகளை விசாரிப்பதற்காக அல்லது இந்தியத் தண்டனைத் தொகுப்புச்சட்டத்தின்படி அல்லது அத்தகைய மாவட்டத்திற்கு அல்லது வட்டாரத்திற்கு அப்போதைக்குப் பொருந்துறும் பிறிதொரு சட்டத்தின்படி மரண தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது ஐந்தாண்டுக் காலத்திற்குக் குறையாத சிறைத் தண்டனை விதித்துத் தண்டிக்கப்படுவதாகும் குற்றச்செயல்களைப் பற்றி விசாரிப்பதற்காக அல்லது அத்தகைய மாவட்டத்தின் அல்லது வட்டாரத்தின் மீது அதிகாரம் உடைய மாவட்ட மன்றத்திற்கோ வட்டார மன்றத்திற்கோ அத்தகைய மாவட்ட மன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிமன்றங்களுக்கோ ஆளுநரால் அமர்த்தப்பெற்ற அலுவலருக்கோ, ஆளுநர், 1908 ஆம் ஆண்டு உரிமையியல் நெறிமுறைத் தொகுப்புச்சட்டத்தின் அல்லது, நேர்வுக்கேற்ப, [1][1898 ஆம் ஆண்டு குற்றவியல் நெறிமுறைத் தொகுப்புச்சட்டத்தின்படி] உள்ள அதிகாரங்களில் தாம் பொருத்தமாகுமெனக் கொள்ளுகிறவற்றை வழங்கலாம்; அதன் மேல், அந்த மன்றம், நீதிமன்றம் அல்லது அலுவலர், அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செலுத்தி அந்த உரிமைவழக்குகளை, பிற வழக்குகளை, அல்லது குற்றச்செயல்களை விசாரணை செய்தல் வேண்டும்.

(2) மாவட்ட மன்றத்திற்கோ வட்டார மன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ அலுவலருக்கோ இந்தப் பத்தியின் (1)ஆம் உள்பத்தியின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களில் எதனையும், ஆளுநர் விலக்கிக்கொள்ளலாம் அல்லது மாற்றமைவு செய்யலாம்.

(3) இந்தப் பத்தியில் தெளிவுற வகைசெய்யப்பட்டவாறல்லாமல், இந்தப் பத்தியின் வகையங்கள் பொருந்துறுகிற தன்னாட்சி மாவட்டம் ஒன்றில் அல்லது தன்னாட்சி வட்டாரம் எதிலுமுள்ள உரிமை வழக்குகள், பிற வழக்குகள் அல்லது குற்றச்செயல்கள் எவற்றையும் விசாரணை செய்வதற்கு, 1908 ஆம் ஆண்டு உரிமையியல் நெறிமுறைத் தொகுப்புச்சட்டமும், [1][1898 ஆம் ஆண்டு குற்றவியல் நெறிமுறைத் தொகுப்புச்சட்டமும்] பொருந்துறுவதில்லை.

(4) தன்னாட்சி மாவட்டம் அல்லது தன்னாட்சி வட்டாரம் எதன் தொடர்பாகவும், 4 ஆம் பத்தியின் (5) ஆம் உள்பத்தியின்படி குடியரசுத்தலைவர் குறித்திட்ட தேதியன்றும் அது முதற்கொண்டும், இந்தப் பத்தியில் அடங்கியுள்ள எதுவும், அந்த மாவட்டத்திற்கோ வட்டாரத்திற்கோ பொருந்துறுகையில், மாவட்ட மன்றத்திற்கோ வட்டார மன்றத்திற்கோ மாவட்ட மன்றத்தினால் அமைக்கப்பட்ட நீதிமன்றங்களுக்கோ இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியில் சுட்டப்பட்டுள்ள அதிகாரங்களில் எதனையும் வழங்க ஆளுநருக்கு அதிகாரமளிப்பதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

6. தொடக்கப் பள்ளிகள் முதலியனவற்றை அமைக்க மாவட்ட மன்றத்திற்குள்ள அதிகாரங்கள்:

(1) ஒரு தன்னாட்சி மாவட்டத்திற்கான மாவட்ட மன்றம், அந்த மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகள், மருந்தகங்கள், அங்காடிகள், கால்நடைப் பட்டித் தொழுவங்கள், தோணித் துறைகள், மீனளங்கள், சாலைகள், சாலைப் போக்குவரத்து, நீர்வழிகள் ஆகியவற்றை அமைக்கலாம், கட்டலாம் அல்லது மேலாண்மை செய்யலாம்; மேலும், ஆளுநரின் முன் ஒப்பேற்புடன், அவற்றை ஒழுங்குறுத்துவதற்காகவும் கட்டாள்கை செய்வதற்காகவும் ஒழுங்குறுத்தும் விதிகளைச் செய்யலாம்; குறிப்பாக அந்த மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி கற்பிக்கப்படவேண்டிய மொழியையும் முறையையும் வகுத்துரைக்கலாம்.


  1. 1.0 1.1 இப்போது, 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நெறிமுறைத் தொகுப்புச் சட்டத்தைக் (சட்ட எண் 2/1974) காண்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/249&oldid=1467246" இலிருந்து மீள்விக்கப்பட்டது