பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224


(2) ஆளுநர் மாவட்ட மன்றம் ஒன்றன் இசைவுடன், வேளாண்மை, கால்நடைப் பேணுகை, சமூக நலத் திட்டங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், சமுதாய நலப்பாடு, ஊரமைப்புத் திட்டம் அல்லது மாநிலத்தின் ஆட்சித்துறை அதிகாரம் அளாவுகின்ற பிற பொருட்பாடுகள் தொடர்பான செயற்பணிகளை, அந்த மன்றத்திடம் அல்லது அதன் அலுவலர்களிடம், வரைக்கட்டுடனோ வரைக்கட்டின்றியோ ஒப்படைக்கலாம்.

7. மாவட்ட மற்றும் வட்டார நிதியங்கள் :

(1) தன்னாட்சி மாவட்டம் ஒவ்வொன்றிற்கும் ஒரு மாவட்ட நிதியமும், தன்னாட்சி வட்டாரம் ஒவ்வொன்றிற்கும் ஒரு வட்டார நிதியமும் ஏற்படுத்தப்படும்; இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு இணங்க, அத்தகைய மாவட்டத்தின் அல்லது, நேர்வுக்கேற்ப, வட்டாரத்தின் நிருவாகத்தின்போது, முறையே அந்த மாவட்டத்திற்கான மாவட்ட மன்றத்தினாலும் அந்த வட்டாரத்திற்கான வட்டார மன்றத்தினாலும் பெறப்படும் பணம் அனைத்தும், அந்தந்த நிதியத்தில் வரவு வைக்கப்படும்.

(2) ஆளுநர், மாவட்ட நிதியத்தை அல்லது, நேர்வுக்கேற்ப, வட்டார நிதியத்தை மேலாண்மை செய்வதற்காகவும் மேற்சொன்ன நிதியத்தில் பணம் செலுத்துவதையும், அதிலிருந்து பணம் எடுப்பதையும் அதிலுள்ள பணத்தைக் கையடைவில் கொள்ளுவதையும், மேற்கூறப்பட்ட பொருட்பாடுகளுக்குத் தொடர்புடைய அல்லது துணைமையான பொருட்பாடுகளையும் பொறுத்துப் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறை குறித்து, ஆளுநர் பிற விதிகளை வகுக்கலாம்.

(3) மாவட்ட மன்றத்தின் அல்லது, நேர்வுக்கேற்ப, வட்டார மன்றத்தின் கணக்குகள், குடியரசுத்தலைவரின் ஒப்பேற்புடன் இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர் வகுத்துரைக்கும் படிவத்தில் வைத்து வரப்படுதல் வேண்டும்.

(4) கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர், மாவட்ட மற்றும் வட்டார மன்றங்களின் கணக்குகளைத் தாம் பொருத்தமெனக் கருதுகிற முறையில் தணிக்கை செய்விப்பார்; மேலும், அத்தகைய கணக்குகள் தொடர்பாக, கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையரின் அறிக்கைகளை ஆளுநருக்கு அனுப்புவார்; அவர் அவற்றை மன்றத்தின் முன்பு வைக்குமாறு செய்வார்.

8. நில வருவாயை மதிப்பீடு செய்வதற்கும் ஈட்டுவதற்கும் வரிகளை விதிப்பதற்குமான அதிகாரங்கள் :

(1) ஒரு தன்னாட்சி வட்டாரத்திற்கான வட்டார மன்றம் அத்தகைய வட்டாரத்திற்குள் உள்ள நிலங்கள் அனைத்தையும் பொறுத்து ஒரு தன்னாட்சி மாவட்டத்திற்கான மாவட்ட மன்றம், அந்த மாவட்டத்திற்குள் வட்டார மன்றங்கள், எவையேனுமிருப்பின், அவற்றின் அதிகாரத்தின் கீழுள்ள வரையிடங்களில் உள்ளவை நீங்கலாக, அந்த மாவட்டத்திற்குள் உள்ள நிலங்கள் அனைத்தையும் பொறுத்து அந்த மாநிலத்தில் பொதுவாக நில வருவாய் நோக்கத்திற்காக நிலங்களை மதிப்பீடு செய்வதில் மாநில அரசாங்கத்தினால் அப்போதைக்குப் பின்பற்றப்பட்டுவரும் நெறிகளுக்கு இணங்கியவாறு, அத்தகைய நிலங்களைப் பொறுத்து வருவாயை மதிப்பீடு செய்வதற்கும் ஈட்டுவதற்கும் அதிகாரங்கள் உடையன ஆகும்.

(2) ஒரு தன்னாட்சி வட்டாரத்திற்கான வட்டார மன்றம், அத்தகைய வட்டாரத்திற்குள் உள்ள வரையிடங்களைப் பொறுத்தும் ஒரு தன்னாட்சி மாவட்டத்திற்கான மாவட்ட மன்றம், அத்தகைய மாவட்டத்திற்குள் வட்டார மன்றங்கள், எவையேனுமிருப்பின், அவற்றின் அதிகாரத்தின் கீழுள்ள வரையிடங்கள் நீங்கலாக, அந்த மாவட்டத்திற்குள் உள்ள அனைத்து வரையிடங்களைப் பொறுத்தும் நிலங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றின் மீதான வரிகளையும் அத்தகைய வரையிடங்களுக்குள் குடியிருப்பவர்களின் மீதான சுங்க வரிகளையும் விதிக்கவும் ஈட்டவும் அதிகாரம் உடையது ஆகும்.

(3) ஒரு தன்னாட்சி மாவட்டத்திற்கான மாவட்ட மன்றம், அந்த மாவட்டத்திற்குள்ளே பின்வரும் வரிகள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும், விதிக்கவும் ஈட்டவும் அதிகாரம் உடையது ஆகும்; அவையாவன-

(அ)விழைத்தொழில்கள், வணிகங்கள், கொள்பணிகள், வேலையமர்த்தங்கள் ஆகியவற்றின் மீதான வரிகள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/250&oldid=1466505" இலிருந்து மீள்விக்கப்பட்டது