பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

225

(ஆ)விலங்குகள், ஊர்திகள், படகுகள் ஆகியவற்றின் மீதான வரிகள்;
(இ) ஒர் அங்காடிக்குள் பண்டங்களை விற்பனைக்காகக் கொண்டு செல்வதன் மீதான வரிகள்; தோணிகளில் ஏற்றிச் செல்லப்படும் பயணிகள், பண்டங்கள் மீதான சுங்கவரிகள்; மற்றும்
(ஈ)பள்ளிகளை, மருந்தகங்களை அல்லது சாலைகளைப் பேணிவருவதற்கான வரிகள்.

(4) வட்டார மன்றம் அல்லது, நேர்வுக்கேற்ப, மாவட்ட மன்றம், இந்தப் பத்தியின் (2), (3) ஆகிய உள்பத்திகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள வரிகள் எவற்றையும் விதித்து ஈட்டுவதற்கு வகைசெய்வதற்கான ஒழுங்குறுத்தும்விதிகளை வகுக்கலாம்; மேலும், அத்தகைய ஒழுங்குறுத்தும்விதி ஒவ்வொன்றும் உடனடியாக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும்; மேலும், அவரால் ஏற்பிசைவளிக்கப்படும் வரையில் அவை செல்திறம் பெறுவதில்லை.

[1]9. கனிமங்களைக் கண்டறிவதற்கான அல்லது அவற்றைப் பிரித்தெடுப்பதற்கான உரிமங்கள் அல்லது குத்தகைகள் :

(1) ஒரு தன்னாட்சி மாவட்டத்திற்குள் உள்ள வரையிடம் எதிலும், கனிமங்களைக் கண்டறிவதற்காக அல்லது பிரித்தெடுப்பதற்காக, மாநில அரசாங்கத்தினால் வழங்கப்படும் உரிமங்களிலிருந்து அல்லது குத்தகைகளிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் வந்தடைகின்ற உரிமத் தொகைகளில், மாநில அரசாங்கமும் அத்தகைய மாவட்டத்தின் மாவட்ட மன்றமும் இடையே ஒப்பியவாறான பங்கு, அந்த மாவட்ட மன்றத்திற்கு வழங்கப்படுதல் வேண்டும்.

(2) ஒரு மாவட்ட மன்றத்திற்கு மாற்றி வழங்கப்பட வேண்டிய அத்தகைய உரிமத்தொகைப் பங்கு பற்றி பூசல் எதுவும் எழுமாயின், அது பற்றித் தீர்மானம் செய்வதற்காக அது ஆளுநருக்குக் குறித்தனுப்பப்படுதல் வேண்டும்; மேலும், ஆளுநரால் அவரது உளத்தேர்வின்படி தீர்மானிக்கப்படும் தொகை, இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியின்படி மாவட்ட மன்றத்திற்கு வழங்கப்பட வேண்டிய தொகையாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; இதில் ஆளுநரின் முடிபே அறுதியானது ஆகும்.

[2]10. பழங்குடியினர் அல்லாதவர் வட்டித் தொழில் செய்வதையும், வணிகம் செய்வதையும் கட்டாள்கை செய்வதற்கான ஒழுங்குறுத்தும்விதிகளை வகுக்க மாவட்ட மன்றத்திற்குள்ள அதிகாரம் :

(1) ஒரு தன்னாட்சி மாவட்டத்தின் மாவட்ட மன்றம், அந்த மாவட்டத்தில் குடியிருக்கிற பட்டியலில் கண்ட பழங்குடியினர் அல்லாத பிறர், அந்த மாவட்டத்திற்குள் வட்டித் தொழில் அல்லது வணிகம் செய்வதை ஒழுங்குறுத்துவதற்கும் கட்டாள்கை செய்வதற்குமான ஒழுங்குறுத்தும்விதிகளை வகுக்கலாம்.

(2) குறிப்பாகவும் மேலே கண்ட அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்குக் குந்தகம் இன்றியும், அத்தகைய ஒழுங்குறுத்தும்விதிகள்—

(அ) வட்டித் தொழிலை, அதற்கென வழங்கப்பட்ட உரிமம் ஒன்றைக் கொண்டிருப்பவரைத் தவிர, பிறர் எவரும் நடத்தலாகாது என வகுத்துரைக்கலாம்;
(ஆ) வட்டித் தொழில் நடத்துபவர் ஒருவரால் விதிக்கப்படும் அல்லது பெறப்படும் மேல்வரை வட்டி வீதத்தினை வகுத்துரைக்கலாம்;


  1. திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு ஆறாம் இணைப்புப்பட்டியல் பொருந்துறுமாறு 9 ஆம் பத்தியானது 1988, ஆம் ஆண்டு அரசமைப்பு (திருத்தம்) சட்டத்தின் (67/1988) 2 ஆம் பிரிவினால் (2) ஆம் உள்பத்திக்குப் பின்னர், பின்வரும் உள்பத்தியைப் புகுத்துவதன் மூலம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது:- "(3) இந்தப் பத்தியின்படி மாவட்ட மன்றத்திற்கு வழங்கப்பட வேண்டிய உரிமத்தொகைப்பங்கு, (1) ஆம் உள்பத்தியின்படி செய்துகொள்ளப்படும் உடன்பாடு எதனின் அல்லது, நேர்வுக்கேற்ப, (2) ஆம் உள்பத்தியின்படி செய்யப்படும் தீர்மானம் எதனின் தேதியிலிருந்து ஓராண்டுக் காலஅளவுக்குள், அந்த மன்றத்திற்கு வழங்கப்படுதல் வேண்டும் என்று ஆளுநர் ஆணையின்வழி பணிக்கலாம்."
  2. திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு ஆறாம் இணைப்புப்பட்டியல் பொருந்துறுமாறு, 10 ஆம் பத்தியானது, 1988 ஆம் ஆண்டு அரசமைப்பு (திருத்தம்) சட்டத்தின் (67/1988) 2 ஆம் பிரிவினால், பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது:-
    (அ) தலைப்பில் “பழங்குடியினர் அல்லாதவர்” என்ற சொற்கள் விட்டுவிடப்படும் :
    (ஆ) (1)ஆம் பத்தியில் “பட்டியலில் கண்ட பழங்குடியினர் அல்லாத பிறர்" என்ற சொற்கள் விட்டுவிடப்படும் :
    (இ) (2)ஆம் பத்தியில், (ஈ) கூறுக்கு மாற்றாகப் பின்வரும் கூறு அமைக்கப்படும்:-
    "(ஈ) அந்த மாவட்டத்தில் குடியிருக்கிற எவரும், அந்த மாவட்ட மன்றத்தினால் இதற்கென வழங்கப்படும் உரிமத்தின்படி அல்லாமல் மொத்தமாகவோ சில்லறையாகவோ வணிகம் எதனையும் செய்தலாகாது என வகுத்துரைக்கலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/251&oldid=1466506" இலிருந்து மீள்விக்கப்பட்டது