பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

229

(ஆ)ஆளுநர், பொது அறிவிக்கை வாயிலாக, இந்த உள்பத்தியின் (அ) கூறின் வகையங்கள் பொருந்துறாத மிசோரம் மாநிலச் சட்டமன்றச் சட்டம் எதுவும், அந்த மாநிலத்தில் உள்ள தன்னாட்சி மாவட்டத்திற்கு அல்லது தன்னாட்சி வட்டாரத்திற்குப் பொருந்துறாது என்றோ அந்த அறிவிக்கையில் அவர் குறித்துரைக்கும் விதிவிலக்குகளுக்கு அல்லது மாற்றமைவுகளுக்கு உட்பட்டு, அத்தகைய மாவட்டம் அல்லது வட்டாரம் அல்லது அதன் பகுதி எதற்கும் பொருந்துறும் என்றோ பணிக்கலாம்;
(இ)குடியரசுத்தலைவர், நாடாளுமன்றச் சட்டம் எதனையும் பொறுத்து, அறிவிக்கை வாயிலாக, மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒரு தன்னாட்சி மாவட்டத்திற்கு அல்லது தன்னாட்சி வட்டாரத்திற்கு அது பொருந்துறாது என்றோ அந்த அறிவிக்கையில் அவர் குறித்துரைக்கும் விதிவிலக்குகளுக்கு அல்லது மாற்றமைவுகளுக்கு உட்பட்டு, அத்தகைய மாவட்டத்திற்கு அல்லது வட்டாரத்திற்கு அல்லது அதன் பகுதி எதற்கும் பொருந்துறும் என்றோ பணிக்கலாம்; மேலும், அத்தகைய பணிப்புரை எதுவும் முன்மேவு செல்திறம் பெறுமாறு இடப்படலாம்.

13. தன்னாட்சி மாவட்டங்களைச் சார்ந்த மதிப்பீட்டு வரவு செலவினம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தனித்தனியாகக் காட்டப்படுதல் வேண்டும் :

ஒரு தன்னாட்சி மாவட்டத்தைச் சார்ந்ததாகவும் மாநிலத்தின் திரள் நிதியத்தில் செலுத்தப்பட அல்லது திரள்நிதியத்திலிருந்து செய்யப்பட வேண்டியதாகவும் உள்ள மதிப்பீட்டு வரவு செலவினம், முதலில் மாவட்ட மன்றத்தின் முன்பு கலந்தாய்வுக்கு வைக்கப்பட்டு, அத்தகைய கலந்தாய்வுக்குப் பின்பு, 202ஆம் உறுப்பின்படி மாநிலச்சட்டமன்றத்தின் முன்பு வைக்கப்பட வேண்டிய மாநில ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தனித்தனியாகக் காட்டப்படுதல் வேண்டும்.

14. தன்னாட்சி மாவட்டங்கள், தன்னாட்சி வட்டாரங்கள் ஆகியவற்றின் நிருவாகம் பற்றி விசாரணை செய்யவும், அறிக்கை அளிக்கவும் ஆணையத்தை அமர்த்துதல் :

(1) ஆளுநர், எச்சமயத்திலும், மாநிலத்திலுள்ள தன்னாட்சி மாவட்டங்கள், தன்னாட்சி வட்டாரங்கள் ஆகியவற்றின் நிருவாகம் தொடர்பாக இந்த இணைப்புப்பட்டியலில் 1ஆம் பத்தியின் (3)ஆம் உள்பத்தியின் (இ), (ஈ), (உ), (ஊ) ஆகிய கூறுகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்பாடுகள் உள்ளடங்கலாக அவரால் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடு எதனையும் விசாரணை செய்து அறிக்கை அளிப்பதற்கென ஓர் ஆணையத்தை அமர்த்தலாம் அல்லது பொதுவியலாக அந்த மாநிலத்தில் உள்ள தன்னாட்சி மாவட்டங்கள், தன்னாட்சி வட்டாரங்கள் ஆகியவற்றின் நிருவாகம் பற்றியும், குறிப்பாக-

(அ)அத்தகைய மாவட்டங்களிலும் வட்டாரங்களிலும் கல்வி-மருத்துவ வசதிகளுக்கும் தொடர்பு இணைப்புகளுக்கும் செய்யப்படும் ஏற்பாடு,
(ஆ) அத்தகைய மாவட்டங்களை அல்லது வட்டாரங்களைப் பொறுத்து, புதிய அல்லது தனியுறு சட்டம் எதற்குமான தேவைப்பாடு,
(இ)மாவட்ட மற்றும் வட்டார மன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்கள், விதிகள், ஒழுங்குறுத்தும்விதிகள் ஆகியவற்றின் நிருவாகம்

இவற்றைப் பற்றியும் விசாரணை செய்யவும் அவ்வப்போது அறிக்கை அளிக்கவும் ஓர் ஆணையத்தை அமர்த்தலாம்; மேலும், அத்தகைய ஆணையத்தால் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறையை வரையறை செய்யலாம்.

(2) அத்தகைய ஒவ்வோர் ஆணையத்தின் அறிக்கையும், [1][************,] மாநில அரசாங்கம் அதன்மீது மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை பற்றிய ஒரு விளக்கக் குறிப்புரையுடன், உரிய அமைச்சரால் மாநிலச் சட்டமன்றத்தின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்.


  1. 1995 ஆம் ஆண்டு அரசமைப்பு ஆறாம் இணைப்புப்பட்டியலுக்கான (திருத்தம்) சட்டத்தினால் விட்டுவிடப்பட்டது (42/1995).
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/255&oldid=1466512" இலிருந்து மீள்விக்கப்பட்டது