பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266


[1]பத்தாம் இணைப்புப்பட்டியல்

[102 (2), 191(2) ஆகிய உறுப்புகள்]

கட்சிமாறுதல் காரணமாக விளையும் தகுதிக்கேடு குறித்த வகையங்கள்

1. பொருள்கோள் :

இந்த இணைப்புப்பபட்டியலில், தறுவாயின் தேவை வேறானாலன்றி,-

(அ)"அவை" என்பது, நாடாளுமன்ற, ஈரவைகளில் ஒன்று அல்லது மாநிலச் சட்டமன்றப் பேரவை அல்லது, நேர்வுக்கேற்ப, மாநிலச் சட்டமன்ற ஈரவைகளில் ஒன்று என்று பொருள்படும்;
(ஆ) "சட்டமன்றக் கட்சி" என்பது, 2ஆம் பத்தியின் அல்லது [2][*****] 4ஆம் பத்தியின் வகையங்களுக்கு இணங்க அரசியல் கட்சி எதனையும் சேர்ந்துள்ள அவை உறுப்பினர் ஒருவரைப் பொறுத்தவரை, மேற்சொன்ன வகையங்களுக்குக்கிணங்க அப்போதைக்கு அந்த அரசியல் கட்சியைச் சேர்ந்துள்ள அவை உறுப்பினர்கள் அனைவரையும் கொண்டிருக்கிற குழுவம் என்று பொருள்படும்;
(இ) "முதல் சார்பு அரசியல் கட்சி" என்பது, அவை உறுப்பினர் ஒருவரைப் பொறுத்தவரை, 2ஆம் பத்தியின் (1) ஆம் உள்பத்தியின் நோக்கங்களுக்காக அவர் சார்ந்துள்ள அரசியல் கட்சி என்று பொருள்படும்;
(ஈ) "பத்தி" என்பது, இந்த இணைப்புப்பட்டியலில் உள்ள ஒரு பத்தி என்று பொருள்படும்.

2. கட்சிமாறுதல் காரணமாக விளையும் தகுதிக்கேடு :

(1) [3][4, 5 ஆகிய பத்திகளின்] வகையங்களுக்கு உட்பட்டு, அரசியல் கட்சி எதனையும் சார்ந்தவரான அவை ஒன்றின் உறுப்பினர்—

(அ)அத்தகைய அரசியல் கட்சியில் தமக்குள்ள உறுப்பினர் பதவியைத் தம்விருப்பாக விட்டிருப்பாராயின், அல்லது
(ஆ) தாம் சார்ந்துள்ள அரசியல் கட்சியோ இதன்பொருட்டு அக்கட்சியினால் அதிகாரமளிக்கப்பெற்ற நபரோ அமைப்போ பிறப்பிக்கும் பணிப்புரை எதற்கும் மாறாக, அந்த அரசியல் கட்சியின், நபரின் அல்லது அமைப்பின் முன் இசைவைப் பெறாமல், அந்த அவையில் வாக்களித்தார் அல்லது வாக்களிக்காதிருந்தார் என்றால், அவ்வாறு வாக்களித்த அல்லது வாக்களிக்காமலிருந்த செயல், அந்த அரசியல் கட்சியினாலோ நபராலோ அமைப்பினாலோ அவ்வாறு வாக்களித்த அல்லது வாக்களிக்காமலிருந்த தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள்ளாக மன்னிக்கப்படவில்லையாயின்

அந்த அவை உறுப்பினராக இருப்பதற்குத் தகுதிக்கேடுற்றவர் ஆவார்.

விளக்கம்.- இந்த உள்பத்தியினைப் பொறுத்தவரை,–

(அ) தேர்ந்தெடுக்கப்பெற்ற அவை உறுப்பினர் எவரும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கு அவரைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி வைத்த அரசியல் கட்சி, ஏதேனுமிருப்பின், அக்கட்சியைச் சார்ந்துள்ள உறுப்பினர் எனக் கொள்ளப்பெறுவார்;
(ஆ)நியமனம் செய்யப்பெற்ற அவை உறுப்பினர் எவரும்,

(i)அத்தகைய உறுப்பினராக அவர் நியமனம் செய்யப்பெற்ற தேதியன்று அரசியல் கட்சி ஒன்றன் உறுப்பினராக அவர் இருக்கிறவிடத்து, அந்த அரசியல் கட்சியைச் சார்ந்துள்ளவர் எனக் கொள்ளப்பெறுவார்;


  1. 1985ஆம் ஆண்டு அரசமைப்பு (ஐம்பத்திரண்டாம் திருத்தம்) சட்டத்தின் 6ஆம் பிரிவினால் (1-3-1985முதல் செல்திறம் பெறுமாறு) சேர்க்கப்பட்டது.
  2. 2003ஆம் ஆண்டு அரசமைப்பு (தொண்ணூற்று ஒன்றாம் திருத்தம்) சட்டத்தினால் விட்டுவிடப்பட்டது.
  3. 2003ஆம் ஆண்டு அரசமைப்பு (தொண்ணூற்று ஒன்றாம் திருத்தம்) சட்டத்தினால் மாற்றாக அமைக்கப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/292&oldid=1466500" இலிருந்து மீள்விக்கப்பட்டது