பக்கம்:Humorous Essays.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

9

திரும்பிப் பார்த்தேன். முதலில் கண்ணுக்குத் தென்பட்டதென்ன வென்றால் அந்த வண்டியில் "இதில் பத்து பேர் உட்கார இடமுண்டு" என்று ஆங்கிலத்திலும், தமிழிலும், தெலுங்கிலும், இந்துஸ்தானியிலும் எழுதப்பட்டிருந்ததேயாம். உடனே இந்த வண்டியில் எத்தனை பெயர்கள் ஏறியிருக்கிறார்கள் என்று கணக்கிட, பெரியவர்கள் 32-பேரும் குழந்தைகளில் 15-ம் இருந்தனர். குறித்த தொகைக்குமேல் ஒவ்வொரு வண்டியிலும் இம்மாதிரியாக நாலு மடங்கு ஜனங்களை ஏற்றியதற்காக ரெயில்வேக்காரர்களுக்கு அபராதம் போடுவதானால் இந்தப் பத்து ரூபாய் டிக்கட்டு விற்றதினால் அவர்களுக்கு வந்த லாபத்தையெல்லாம் அவர்கள் அபராதமாய்க் கட்ட வேண்டி வரும் என்பதற்கு ஐயமில்லை. (இந்தப் பத்து ரூபாய் டிக்கட்டு 40,000 விற்றதாகக் கேள்விப்படுகிறேன்.)

சில நிமிஷங்களுக்கெல்லாம் ரெயில் வேகமாய்ப போக, வண்டிக்குள் கொஞ்சம் காற்று வீச ஆரம்பித்தது. அதனால் சிறிது ஆனந்தமடைந்தவனானேன். “சும்மா காலம் கழிப்பானேன்; நம்மோடு வண்டியிலிருப்பவர்களுடன் ஏதாவது பேசிக் கொண்டு போனால் கொஞ்சம் கஷ்ட நிவாரணமா யிருக்கும்” என்று எண்ணி, அந்த வண்டியிலிருந்தவர்களை யெல்லாம் ஏறக்குறைய ஒவ்வொருவராக “நீங்கள் எங்கே போகிறீர்கள்?-நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று பிரயாணிகள் வழக்கப்படி கேட்க ஆரம்பித்தேன். இந்த விசாரணையின் முடிவில் பெரும்பாலோர் என்னைப் போல் சென்னைக்குப் போவதாக தெரிவித்தார்கள். பன்னிரண்டு பெயர்கள் மாத்திரம் கூடூரில் இறங்குவதாகச் சொன்னார்கள். சரி, இப்பன்னிரண்டு பெயர்களும் கூடூரில் இறங்கினால் பிறகு நமக்குக் கொஞ்சம் செளகரியமுண்டாகுமென்று நினைத்து, அந்தக் கூடூர் ஸ்டேஷனுக்கு எப்பொழுது ரெயில் போய்ச் சேருகிறது என்று ரெயில்வே கால அட்டவணையை எடுத்துப் பார்க்க, மறுநாள் காலை போய்ச் சேருவதாகத் தெரிய வந்தது. என்னையும் மற்றெல்லோரையும் அது வரையில் காப்பாற்றும்படியாகக் கடவுளைப் பிரார்த்தித்தேன். இந்தப் பிரார்த்தனை செய்யும் ஆனந்தத்தை எனக்கு ஜன்மத் துவேஷிகள் யாராவது இருந்தால் அவர்களும் அனுபவிக்க வேண்டாமென்று கோருவேன்.



  2
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/15&oldid=1352397" இலிருந்து மீள்விக்கப்பட்டது