பக்கம்:Humorous Essays.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

ஹாஸ்ய வியாசங்கள்

அபிஷேகம் நமக்குக் கிடைக்காமல் தப்பினோமே என்று ஆனந்தப் பட்டேன்.

இந்தப் பத்து ரூபாய் டிக்கட்டினால் நான் அடைந்த மற்றொரு ஆனந்தத்தைக் கூறி இதை முடிக்கிறேன். பெஜவாடா ஸ்டேஷனில் அவ்வூர் ஸ்டேஷன் மாஸ்டர் சிபாரிசு செய்ய, ஓர் ஆளை எங்கள் வண்டிக்குள் ஏற விட்டோம். ஓர் ஆள்தானே, போனால் போகிறான் என்று நாங்கள் முன்பிருந்ததை விடக் கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, புதிதாய் வந்த மனிதனுக்கு இடம் விட, அவன் உட்கார்ந்த பின், போர்ட்டர் ஒருவனிடம் சொல்லித் தன் சாமான்களைக் கொண்டு வரச் செய்து, அவைகளை யெல்லாம் வண்டியில், சந்து பொந்திலெல்லாம் நிரப்பினான் ஆளை உள்ளே விட்ட பின் அவன் சாமான்களை எப்படி வேண்டாமென்று சொல்வது? அவன் கறிகாய் வியாபாரியாம். அவன் கொண்டு வந்த மூட்டைகளில் ஒன்று கத்தரிக்காய் மூட்டை. அதை மாத்திரம் மற்றவர்கள் மிதித்து விடப் போகிறார்களேயென்று தன் மடி மீது வைத்துக் கொண்டான். நெல்லூர் ஸ்டேஷனில் அம்மூட்டையைத் தான் உட்கார்ந்திருந்தவிடத்தில் வைத்து விட்டு ஒரு காரியமாகக் கொஞ்சம் வெளியே போக வேண்டுமென்று கூற, நான், “அப்படிச் செய்யாதே; போனால் இடம் போய் விடும்” என்று சொன்னேன். அப்படிச் சொல்லியும் கேட்காமல் இறங்கிப் போனான். அச்சமயம் அந்த இடம் காலியாயிருக்கிறதென்று எண்ணி, ஒரு ஸ்தூல சரீரமுடைய ஆள் வண்டிக்குள் ஏறி அஜாக்கிரதையாக அம்மூட்டையின் மீது உட்காரவே, சுத்தரிக் காய்களெல்லாம் சட்னியாகப் போயின. உடனே மூட்டையின் சொந்தக்காரன் வந்து பார்க்க, தன் இடமும் போய்க் கத்தரிக்காயும் சட்னியாய்ப் போனதைக் கண்டு கூக்குரலிட ஆரம்பித்தான். பிறகு நான் அவனைப் பார்த்து, “போனால் போகிறது, கத்தரிக்காய்த் துகையலாகச் சுலபமாகச் செய்து சாப்பிட்டு விடலாம்; நன்றாக இருக்கும்” என்று சமாதானம் செய்தேன். அதனால் அவன் சமாதானம் அடைந்தானோ என்னவோ, எனக்குத் தெரியாது. மற்றவர்களெல்லாம் இதைக் கேட்டுச் சிரித்து ஆனந்தம் அடைந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/18&oldid=1352393" இலிருந்து மீள்விக்கப்பட்டது