பக்கம்:Humorous Essays.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஹாஸ்ய வியாசங்கள்

இந்த ஆட்டு மந்தையை நான் வீட்டுக்குப் போய் வரும் வரையில் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் தயவு செய்து” என்று சொன்னான். நமது பிராம்மணன் ஜெபம் செய்யும் சமயம்; அதிலும் முன்னமே குறித்தபடி முழுச் செவிடு; ஆகவே இடையன் சொன்னதைக் கேளாமல் தான் ஜபம் செய்து கொண்டிருந்தான். அப்படி ஜெபம் செய்யும் பொழுது கையால் ஜலத்தை எடுத்துப் புரோட்சணம் செய்ய வேண்டிய கையைச் சுற்ற, இடையன் இதை ‘அப்படியே ஆகட்டும், நீ வீட்டுக்குப் போய் வா’, என்று சொல்கிறார் சைகையினால், என்று நினைத்துக் கொண்டு தன் வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு, திரும்பி வந்தான். திரும்பி வந்து தன் ஆட்டுக் கூட்டத்தை எண்ணிப் பார்த்து சரியாக இருக்கக் கண்டு சந்தோஷித்தவனாய், அந்த பிராமணனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று நினைத்து, தன் மந்தையிலிருந்த இடது கால் கொஞ்சம் ஒடிந்த ஒரு ஆட்டுக் குட்டியைத் தூக்கிக் கொண்டு போய் பிராமணன் எதிரில் வைத்து, “சாமி, இத்தனை நேரம் என் மந்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்ததற்காக, இக்குட்டியை எடுத்துக் கொள்ளுங்கள்; இது பெரியதானால் நன்றாய் பால் கொடுக்கும்; கொஞ்சம் கால் நொண்டுகிறது என்று யோசியாதீர்கள்”: என்று அதன் காலைக் காண்பித்தான். இவன் சொன்ன வார்த்தைகள் சற்றும் செவியிற் புகாத அந்த செவிட்டு பிராமணன், தான் தான் அவ்வாட்டுக் குட்டியின் காலை ஒடித்ததாக இடையன் கூறுகிறான் என்றெண்ணி, “நான் இதன் காலை ஒடிக்கவில்லையப்பா” என்று முதலில் சமாதானமாய்ச் சொல்லிப் பார்த்தான்.

செவிட்டு இடையன், பிராம்மணன் கூறுவதை அறியாதவனாய் “என்ன சாமி, கொஞ்சம் நேரம்தானே என் மந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். இதற்கு இந்தக் குட்டியாடு போதாதா? முழு ஆடு வேண்டுமா? என்னால் துட்டு கொடுக்க முடியாது” என்று கத்த ஆரம்பித்தான், அதன் பேரில் பிராமணன், “நான் காலை ஒடிக்கவில்லையென்று எத்தனை முறை சொல்வது? இதற்கு நான் ஏன் துட்டு கொடுக்க வேணும்” என்று கத்தினான். “இல்லை எப்படியாவது நீங்கள் இந்த ஆட்டுக்குட்டியைத்தான் ஏற்றுக் கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/20&oldid=1352389" இலிருந்து மீள்விக்கப்பட்டது