பக்கம்:Humorous Essays.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ஹாஸ்ய வியாசங்கள்

முகத்தில் நான் இனி விழிக்கவே மாட்டேன்” என்று கூறினார். அவர் முன்னாளிரவு தன் சம்சாரத்துடன் ஏதோ சச்சரவிட அந்த அம்மாள், கோபித்துக் கொண்டு, அவ்வூரின் ஒரு மூலையிலுள்ள தன் தாய் தந்தை வீடு போய்ச் சேர்ந்தாளாம். அங்கிருந்த தன் மாமனார், ஆட்டு இடையனிடம் ஒரு ஆட்டுக் குட்டியைப் பரிசாகக் கொடுத்து, தன் புரோகிதரையும், வைத்தியரையும் மத்யஸ்தமாக அனுப்பினார் என்று தலையாரி எண்ணிக் கொண்டார். அவர்கள் மூவர் என்ன சொல்லியும், இவர் “என் பேச்சைக் கேளாத பெண்சாதி முகத்தில் நான் முழிக்கவே மாட்டேன்” என்று கூச்சலிடத் தொடங்கினார். முன்பு மூவர் கூச்சலாயிருந்தது, இப்பொழுது நால்வர் கூச்சலாச்சுது. இச்சமயம் அவ்வூர் சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து ஏதோ வேலையாய், ஹெட்கான்ஸ்டபில், தலையாரி வீட்டிற்கு வர, மேற்சொன்ன எல்லோரும் அவனிடம் தங்கள் தங்கள் கதையைச் சொல்லி முறையிட்டனர். அந்த செவிட்டு ஹெட்கான்ஸ்டபில் இந்த நால்வரையும் இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனான். போகும் போது, அவ்வூர் ஜனங்கள் இதேதோ வேடிக்கையென்று ஐந்தாறு பேர் கூடக் கும்பலாய்ச் சென்றனர். ஹெட்கான்ஸ்டபில், இன்ஸ்பெக்டரிடம் மேற்சொன்ன நால்வரும் ஒரு வீதியில் துர்பாஷையாய்த் திட்டிக் கொண்டிருந்தனர் என்று பிராது கொடுத்தான். அதன் பேரில் அடியுடன் காது கேளாத இன்ஸ்பெக்டர், வேடிக்கை பார்க்க வந்தவர்களையும் சேர்த்து பத்துப் பெயராகிறது; ஆகவே 10 பேர்களையும், கலகம் செய்து கொண்டிருந்தனர் என்று அவ்வூர் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் தாவா செய்தார்!

அவ்வூர் மாஜிஸ்டிரேட் ஒரு சாயபு. அவர் கொஞ்சம் அபின் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, அன்றைத் தினம் மேற்படி கேசை விசாரித்து அடியிற் கண்டவாறு தீர்மானித்தார்.

“கேஸ் என்னமோ ருஜுவாகி விட்டது. ஆகவே, முந்திய தினம் வாதி பக்கம் தீர்மானம் செய்தோம்; நேற்று பிரதிவாதி. பக்கம் தீர்மானித்தோம்; இன்று சாட்சியின் பக்கம் தீர்மானம் செயகிறோம்” என்று முடிவு கூறினார்!


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/22&oldid=1352404" இலிருந்து மீள்விக்கப்பட்டது