பக்கம்:Humorous Essays.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

ஹாஸ்ய வியாசங்கள்

வாசிக்க ஆரம்பித்தான்! அங்கிருந்த அநேகம் இந்துக்களுக்கு இந்த மர்மம் தெரியாது. சில வெள்ளைக்காரர்கள் இதென்ன கோரம் என்று அதன் விவரத்தைக் கூறிய பின்தான் அங்கிருந்தவர்கள் பாண்டுகாரனுக்கு புத்தி சொல்லி அதைத் தடுத்தனர். அந்த பாண்டுகாரனுக்கு அந்தப் பாட்டு தெரியுமேயொழிய எந்த சந்தர்ப்பத்தில் அதை வாசிப்பது, என்று தெரியாது; என்ன செய்வான் பாபம்! (7) ஒரு சமயம் ஒரு நாடக சபையில் சீதா கல்யாணம் எனும் நாடகமானது வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. அந்நாடகத்தில் ஸ்ரீராமராக வேடம் பூண்ட இளைஞன் நல்ல சாரீர சம்பத்துடையவன், அன்றியும் அவன் ஸ்வராஜ்ய கட்சியைச் சார்ந்தவன், அநேகம் ஸ்வராஜ்ய பாட்டுகளை நன்றாய்ப் பாடும் திறமையுடையவன். சீதா கலியாண நாடகத்தில் ஸ்ரீராமர், வில்லை ஒடித்த காட்சி ஆடிய பொழுது, வில் முறிந்தவுடன் சீதை ராமருக்கு மணமாலை சூட்டிய உடன், ஏதோ மங்களகரமான ஓர் பாட்டை மேற்கண்ட ஆக்டர் பாடினான். அது முடிந்தவுடன், கரகோஷம் செய்த ஜெனங்கள், அவனை “பண்டிட் மோதிலால்” பாட்டைப் பாடும்படி ஒரே கோஷ்டமாய்க் கூச்சலிட்டார்கள் அதற்கிசைந்து ஸ்ரீராமர் சீதையிட்ட மணமாலையுடன் பண்டித மோதிலாலைப் பறி கொடுத்தோமே, என்று அழுது கொண்டே பாடினான்! எனக்கு வேறொன்றுமில்லை, சந்தர்ப்பத்திற்கேற்றபடி வேறு எப்பாட்டையாவது பாடச் சொல்லாது, மணமகனை மடிந்தவர்க்காக அழச் சொல்லத்தானா கேட்க வேண்டுமென்பதுதான்! (8) தென் இந்தியாவில் “ஜெய்” கோஷம் போடும் வழக்கம் சில வருஷங்களுக்கு முன்பு கிடையவே கிடையாது. மஹாத்மா காந்தியவர்களின் பெயர் இங்கு பிரபலமான பிறகுதான் “மஹாத்மா காந்திக்கு ஜெய்!” என்கிற சப்தம் பரவி, இங்கு ஜெய கோஷமும் பரவியது. இக்கோஷம் மன்னர்களுக்கோ அல்லது பெரியார்க்கோ ஜெயமுண்டாகுக! என்கிற சந்தர்ப்பத்தில் சாதாரணமாய் வட் நாட்டில் வழங்குவதாம். இதை அறிந்தோ அறியாமலோ “கிளாவர் பீடிகி ஜெய்!” “இஸ்பெட் பீடிகி ஜெய்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/28&oldid=1352415" இலிருந்து மீள்விக்கப்பட்டது