பக்கம்:Humorous Essays.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஹாஸ்ய வியாசங்கள்

மான வரியைக் குறைக்கும் பொருட்டு தங்களிடமுள்ள பொருளை உண்மையாக உரைப்பதில்லை போலும்.

“ஊக்கமது கைவிடேல்” என்பதை எடுத்துக் கொள்வோம். இதற்கு பெரும்பாலர், ஊக்கம் + மது + கைவிடேல் என்று அர்த்தம் செய்கின்றனர், அதாவது ஊக்கத்தைத் தரும்படியான மதுவைக் கைவிடலாகாதென்று! நமது எல்லாமுணர்ந்த ஒளவையார் மது பானம் செய்யும்படி நமக்கு உபதேசிப்பார்களா? மாட்டார்கள். ஆகவே ஊக்கம் + அது.+கைவிடேல் என்று இதைப் பிரித்து அர்த்தம் செய்ய வேண்டும். ஆயினும் இந்த ஊக்கம் எனும் பதத்திற்கு என்ன அர்த்தம் என்று ஆலோசித்துப் பார்த்தேன். நமது சென்னை கலா சங்கத்தார் அச்சிட்ட லெக்சிகன் என்னும் அகராதியைத் திருப்பிப் பார்த்தேன். அதில் உக்கம் என்கிற பதம் அகப்பட்டது. உடனே இதற்கு அர்த்தம் ஸ்பஷ்டமாகி விட்டது. உக்கம் என்றால் கட்டித் தூக்கியெடுக்கும் கயிறு! உக்கம் எனும் பதம் “ஆதி நீடல்” எனும் சூத்திரப்படி ஊக்கம் என்றாயது! இப்பொழுது அர்த்தம் சுலபமாய்த் தெரியலாம். ஏதாவது ஒரு வஸ்துவைக் கட்டித் தூக்கும் கயிற்றைக் கைவிட்டால், அது உடனே கீழே விழுந்து உடைந்து போகுமல்லவா? ஆகவே ஊக்கமது கைவிடேல்! என்று ஒளவையார் கூறியுள்ளார்!

பிறகு “கண்டொன்று சொல்லேல்” என்பதை எடுத்துக் கொள்வோம். கண்டு+ஒன்று+சொல்லேல்= எதையாவது ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்த்தால், அதை ஒருவரிடமும் சொல்லாதே என்ற பொருள்படும், அதாவது நாம் பார்க்கும்படியான சமாசாரங்களை யெல்லாம் இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்-வாய் திறந்து ஒருவரிடமும் கூறலாகாது. இதைத்தான் தெய்வப்புலமை திருவள்ளுவ நாயனாரும் “யாகாவராயினும் நாகாக்க” என்று கூறியுள்ளார், அதாவது வாயைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்-வாய் திறந்து எதுவும் பேசலாலாகாதென்று! இந்த நீதியைக் கடைப்பிடித்துதான் சில பெரிய மனிதர்கள், நியாயஸ்தலங்களில் தாங்கள் கண்ணாரக் கண்டதை ஒன்றும் சொல்லுவதில்லை போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/46&oldid=1359691" இலிருந்து மீள்விக்கப்பட்டது