பக்கம்:Humorous Essays.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

41

இனி “சனி நீராடு” என்பதை எடுத்து ஆராய்ந்து பார்ப்போம்; இதற்கு சனிக்கிழமை தோறும் ஸ்நானம் செய் என்று அர்த்தமாகும். இதனால் நாம் நமது முன்னோர்கள் வாரத்திற்கு ஒரு தரம்தான் குளித்தார்கள் என்று அர்த்தம் செய்து விடலாகாது. சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானம் செய்தார்கள் என்று நாம் அறிய வேண்டும்.

“அரணை மறவேல்” (அரனை மறவேல்) என்பதற்கு சாதாரணமாக தமிழ் ஆராய்ச்சி செய்யாதவர்கள் ஏதோ தவறாக அர்த்தம் செய்கிறார்கள். அதற்குச் சரியான அர்த்தம் என்னவென்றால், அரணையெனும் பூச்சியை, அது சிறியதாயிருந்தாலும் நீ மறக்காதே, என்பதாம். அதை சிறு பாம்பு என்று நினைத்து சிலர் அதைக் கொல்கிறார்கள். அது பெரும் தவறாகும். ‘அரணையைக் கொன்றால் மரணம்’ என்னும் பழமொழி இந்த சந்தர்ப்பத்தில் கவனிக்கத் தக்கது. சில பூர்வீக சாஸ்திர ஆராய்ச்சிக்காரர்கள் திராவிட தேசத்தில் பூர்வகாலத்தில் குதிரைகள் கிடையாது, வெளிநாடுகளிலிருந்து வந்தன, என்று சொல்கிறார்கள். அவ்வெண்ணம் தவறு என்று நாம் ஆத்திச்சூடியைக் கொண்டு ரூபிக்கலாம். “கொள்ள விரும்பேல்” என்பதை எடுத்துக் கொள்வோம். இதற்கு கொள்ளு என்னும் தானியத்தை நீ விரும்பாதே-சாப்பிடாதே-என்று அர்த்தமாகும். கொள்ளு என்னும் தானியம் குதிரைகள் தான் முக்கியமாகப் புசிக்கின்றன என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அந்த கொள்ளை நாம் சாப்பிட்டு விட்டால், குதிரைகள் பாபம் என்ன செய்யும்? ஆகவே கொள்ளை நீ விரும்பாதே என்று ஒளவையார் சொன்னார்கள். ஆகையினால் ஒளவையார் காலத்தில் குதிரைகள் தமிழ்நாட்டில் இருந்திருக்க வேண்டுமென்பதற்குச் சந்தேகமில்லை.

“தையல் சொற் கேளேல்” என்பதற்கு சில பாமரர்கள் பெண்கள் சொற்களைக் கேளாதே என்று அர்த்தம் செய்கின்றனர். ஒளவையார் ஒரு ஸ்திரீயாயிருந்து கொண்டு பெண்கள் சொல்லைக் கேளாதே என்று உபதேசிப்பார்களா? மாட்டார்கள். இதற்கு அர்த்தம் முதலில் எனக்கு புலப்படாமலிருந்தது. பிறகு மிகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/47&oldid=1359859" இலிருந்து மீள்விக்கப்பட்டது