பக்கம்:Siva Temple Architecture etc..pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

மண்டபம் 1774௵ தென்னாட்டு வள்ளல் பச்சையப்ப முதலியாரால் கட்டப்பட்டது. கோயிலுக்கு எதிரிலுள்ள பெரிய பதினாறுகால் மண்டபம் 1030௵ கட்டப்பட்டதாம். இங்கு முன்பே கூறியபடி அம்மனுக்கு மூலஸ்தானம் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.

திருவொற்றியூர் கோயில்: -இக்கோயிலைப்பற்றி சிறிது ஆராய்வோம். இதுவும் தேவார காலத்தில் இருந்த கோயிலாம்; பழய மரக்கோயில் மாற்றப்பட்டு, தற்கால கர்ப்பக் கிரஹ விமானம் 1012-1042 வருடங்களில் ஆண்ட ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது; இக்கர்ப்பக்கிரஹம் கஜப்பிருஷ்ட ஆகிருதி யுடையது. தென்பாரிசத்தில் இருக்கும் கௌளீஸ்வரர் கோயில் என வழங்கப்படுகிற சிறு கோயில், வீரராஜேந்திரர் காலத்தில் (1067-1068) கட்டப்பட்டதாகும். அம்மன் சந்நிதி பிற்காலத்தில் உண்டானதென்பதற்குச் சந்தேகமில்லை. தியாகராஜர் சந்நிதியும் அதற்குப் பிற்காலத்தில் உண்டானதாகும். கோயிலின் உட்பிராகாரத்தில், மிகவும் பூர்வீகமான வட்டபலிநாய்ச்சியார் எனும் துர்க்கையின் கோயிலிருப்பது கவனிக்கத்தக்கது; இது பூமியின் மட்டத்திற்கு கீழ் இருக்கிறது. தற்காலத்திய கர்ப்பக்கிரஹம் கட்டப்பட்ட காலத்திலேயே இது இருந்திருக்கவேண்டும். ஆதியில் இக்கோயிலுக்கு கோபுரமே இல்லாம லிருந்தது. சென்ற நூற்றாண்டின் கடைசியில் எல்லப்ப செட்டியார் என்பவரால், பழய கருங்கல் அஸ்திவாரத்தின்மீது, கோபுரம் செங்கல் கட்டிடமாகக் கட்டப்பட்டது. வடமேற்கு மூலையில் சென்ற இருபதாண்டுக்குள் ஸ்ரீமான் இராமசாமி பிள்ளையவர்களால் ஒரு சிவாலயம் புதிதாய்க் கட்டப்பட்டிருக்கிறது.

(இன்னும் ம்ற்ற சிவாலயங்களைப்பற்றி அறிய விரும்புவோர், நான் தற்காலம் அச்சிட்டுவரும் "சிவாலயங்கள்- இந்தியாவிலும் அப்பாலும்" எனும் புஸ்தகத்தில் கண்டு கொள்க).

சிவாலய ஜீரனோத்தாரணம்

இதுவரையில் சிவாலயங்கள் கட்டப்பட்டதைப்பற்றி சிறிது எழுதினேன் ; இனி சிவாலயங்களை ஜீர்ணோத்தாரணம் செய்வதைப்பற்றி கொஞ்சம் எழுத விரும்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/35&oldid=1294658" இலிருந்து மீள்விக்கப்பட்டது