பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-11.pdf/37

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

அப்பரடிகள் கொள்கைப்படி செல்வத்தை உடைமையாகப் பெற்றவனுக்குத் தான் மட்டுமே துய்க்கும் உரிமை இல்லை; ஏரிகளுக்குத் தண்ணீரைத் துய்க்கும் உரிமை இல்லை; தன்னிடத்தில் உள்ள தண்ணீரைக் காத்து கழனிகளுக்கு வழங்கும் உரிமையே உண்டு. அதனால் இறைவன் “ஏரி நிறைந்தனைய செல்வ”னாகக் காட்சியளிக்கின்றான். செல்வத்தை ஒருவனிடத்தில் இறைவன் இட்டு வைத்திருப்பது இல்லாதவர்களுக்குக் கொடுக்கத்தான்.

தமிழ் வழக்கில் செல்வத்திற்கு “மருந்து” என்று ஒரு பெயருண்டு. செல்வம் வறுமைப் பிணிக்கு மருந்து. மருந்தை வைத்திருப்பவரே மருந்தை உண்பதில்லை; உண்ணவும் கூடாது; நோயுடையாரே மருந்தை உண்ண வேண்டும்.