பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/288

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

சங்க இலக்கியத்தில் மடலேற்றம்[தொகு]

ஆண் ஒருவன் பெண் ஒருத்தியைக் களவுடனோ, களவின்றியோ அடையும் முறையாக மடலேறுதலைக் குறிப்பிடலாம். காமம் மிக்க தலைவன் பனை மடலால் குதிரையைப் போல் ஓர் உருவம் அமைத்து அதன் கழுத்தில் மணி மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும், தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையில் ஏந்தி, அதன் மேல் யாவரும் அறிய ஊர்ந்து வருதலை மடலேறுதல் என்பர். அங்ஙனம் அவன் வருதலைக் கண்ட ஊரினர் இன்னவளுக்கும் அவனுக்கும் நட்பு உண்டு என்பதனை அறிந்து அதனை வெளிப்படக் கூறிப் பழிப்பர். அது கேட்டுத் தமர் மணம் புரிவிப்பர். இதுவே மடலேறுதல் ஆகும்.

மேலும் சங்க இலக்கியத்தில் மடலேற்றம் குறித்துக் காண

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 15:00, 21 பிப்ரவரி 2023 (UTC)

குறுந்தொகை பாடல் : 173[தொகு]

தலைவன் கூற்று

(பாங்கியிற் கூட்டத்தின்கண் தலைவன் தோழியிடம் குறையிரப்ப, அவள் மறுத்தாளாக, “இனி மடலேறும் பரிகார மொன்று இருத்தலால், அது செய்ய நினைந்து நான் செல்கின்றேன்” என்று அவன் கூறியது.)

“பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
 பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
 பூண்மணி கறங்க ஏறிநாண் அட்டு
 பழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப
 இன்னவள் செய்தது இதுஎன முன்நின்று
 அவள் பழி நுவலும் இவ்வூர்
 ஆங்குணர்ந்தமையின் இங்கு ஏகுமாறு உள்ளே”

-குறுந். 173


என்பது குறை மறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது.

   (குறை - தலைவியைக் காணல் வேண்டுமென்ற காரியம்.)

மதுரைக் காஞ்சிப் புலவன்.

   (பி-ம்) 3-4.‘நானப் பழிபடருண்ணோய்’, ‘நாணடப்பழி’;5.‘இன்னாள்’; 7. தமையினீரேகு மாறுளனே.
   (பதவுரை.) பொன் நேர் ஆவிரை புதுமலர் மிடைந்த - பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக்கட்டிய, பல் நூல் மாலை - பலவாகிய நூல்களையுடைய மாலைகளை அணிந்த, பனை படு கலிமா - பனங்கருக்கால் உண்டாக்கப்பட்ட மனச் செருக்கையுடைய குதிரையை, பூண் மணி கறங்க ஏறி - அதன் கழுத்திற் பூட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து, நாண் அட்டு - நாணத்தைத் தொலைத்து, அழி படர் உள் நோய் - மிக்க நினைவையுடைய உள்ளத்தேயுள்ள காமநோய், வழிவழி சிறப்ப - மேலும் மேலும் மிகுதியாக, இன்னள் செய்தது இது என - இன்னாளால் உண்டாக்கப்பட்டது இக்காம நோயென்று யான் கூற, இ ஊர் - அக்கோலத்தைக் கண்ட இவ்வூரி லுள்ளார், முன் நின்று - எல்லோர்க்கும் முன்னே நின்று, அவள் பழிநுவலும் - தலைவியினது பழியைக் கூறுவர். ஆங்கு உணர்ந்தமையின் - அங்ஙனம் உள்ளதொரு பரிகாரத்தை அறிந்திருத்தலால், ஈங்கு - இவ்விடத் தினின்றும், ஏகுமார் உளென் - போகும் பொருட்டு உள்ளேன்.
   (முடிபு) கலிமா ஏறி நாண் அட்டு நோய் சிறப்ப இன்னள் செய்தது இதுவென, இவ்வூர் அவள் பழி நுவலும்; ஆங்கு உணர்ந்தமையின் ஏகுமாருளென்.
   (கருத்து) நான் இனி மடலேறுவேன்.
   (விரிவுரை.) மடலேற்றத்தைப் பற்றிய செய்திகளை இந்நூல் 14, 17-ஆம் செய்யுட்களின் விசேடவுரை முதலியவற்றால் உணரலாகும்.
    மடலேறுவார், அம் மடன் மாவிற்கு ஆவிரம் பூ அணிவர். கலிமா வென்றது சாதியடை. நாண் - செய்யத்தகாதனவற்றின் கண் உள்ளம் ஒடுங்குதல் (தொல். பொருள்.53, ந.); “இழிவாயின செய்தற்கண் விலக்குவது’(குறள், 1133, உரை) என்பர் பரிமேலழகர். அழி படர் - மிக்க படர்; “அழிபசி” (குறள், 226) என்பதற்கு ‘மிக்க பசி’ என்றெழுதிய உரையைக் காண்க; ஆண்மையையும் நாணையும் அழிக்கும் படரென்பதும் பொருந்தும்; “நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்று டையேன், காமுற்றா ரேறு மடல்” (குறள், 1133) எனக் கூறுதல் காண்க. வழி வழி - மேன்மேலும் ( அகநா. 47:1, உரை.)
   தலைவனே தன் நோய் இன்னாளால் வந்ததெனக் கூறும் செய்தியைக் கலித்தொகை, 138, 139, 140, 141-ஆம் செய்யுட்களிற் பரக்கக் காணலாகும். இன்னாள் செய்த திதுவென இவ்வூர் பழி நுவலுமென்று கூட்டிப் பொருள் கோடலும் பொருந்தும்; “நல்லோள் கணவ னிவனெனப், பல்லோர் கூற” (குறுந், 14) என்று முன் வந்தமை உணர்க.
   அத்தகைய பரிகார மொன்றுண்மையின் நீ மறுத்தமையாற் கவலாது செல்லத் துணிகின்றே னென்றான்; இதனால், தான் மடலேறித் தன் குறையை முடித்துக் கொள்ளுந் துணிபுடைய னாதலைப் புலப்படுத்தினான்.
   ஒப்புமைப் பகுதி 1. பொன்னேர் ஆவிரை மலர்: “பொலமல ராவிரை”, “அடர்பொன் னவிரேய்க்கு மாவிரங் கண்ணி” (கலி. 138:18, 140:7.)
   2. நூன் மாலை மா: “மணிப்பீலி சூட்டிய நூலொடு”, “பிடியமை நூலொடு பெய்ம்மணி கட்டி “ (கலி. 138:8, 140:6.) பனை படு கலிமா; குறுந். 17:1. ஒப்பு. 182:1.
   1-2. மடன்மாவிற்கு ஆவிரம் பூ அணிதல்: “அணிப்பூளை யாவிரை யெருக்கொடு பிணித்தியாத்து”, “அணியலங் காவிரைப் பூவோ டெருக்கின், பிணையலங் கண்ணி மிலைந்து” (கலி. 138:9, 139:8-9);“பனிவா ராவிரை பன்மலர் சேர்த்தி” (குணநாற்பது.)
   3. மடல் மாவிற்கு மணி கட்டுதல்: “மணியணி பெருந்தார் மரபிற்பூட்டி” (குறுந். 182:2); “சிறுமணி தொடர்ந்து .. உண்ணா நன்மாப்பண்ணி” (நற். 220:1-3); “மணியார்ப்ப, ஓங்கிரும் பெண்ணை மடலூர்ந்து”, “பெய்ம்மணி கட்டி” (கலி. 139:9-10, 140:6.)
   மடலேறும் தலைவன் நாணத்தை நீத்தல்: “பெருநா ணீக்கி”(குறுந். 182:4); “அறிவுநம் மறிவாய்ந்த வடக்கமு நாணொடு, வறிதாக”(கலி. 138:3-4); “நோனா வுடம்பு முயிரு மடலேறும், நாணினை நீக்கி நிறுத்து’ (குறள், 1132.)
   4. அழிபடர்: குறுந். 185:8; அகநா. 255:8, 285:2, 297:2. வழிவழி சிறத்தல்: மதுரைக். 194; அகநா. 47:1.
   5. இன்னள்: குறுந். 98:1, 185:3, 296:7.
   2-6. குறுந். 17:1-3, ஒப்பு. 

மூலம் : குறுந்தொகை பாடல்-173

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 07:30, 22 பிப்ரவரி 2023 (UTC)