பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/718

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

பெரும்பாணாற்றுப்படை பாடல் 356-370[தொகு]

“துறைபிறக் கொழியப் போகிக் கறையடிக்
 குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும்
 வண்டோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த
 மஞ்சண் முன்றின் மணநாறு படப்பைத்
 தண்டலை யுழவர் தனிமனைச் சேப்பிற்355

 தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்
 வீழி றாழைக் குழவித் தீம்நீர்க்
 கவைமுலை யிரும்பிடிக் கவுண்மருப் பேய்க்குங்
 குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழந்
 திரளரைப் பெண்ணை நுங்கொடு பிறவுந்360

 தீம்பஃ றார முனையிற் சேம்பின்
 முளைப்புற முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயன்
 மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகின்
 புடைசூழ் தெங்கின் முப்புடைத் திரள்கா
 யாறுசெல் வம்பலர் காய்பசி தீரச் 365

 சோறடு குழிசி யிளக விழூஉம்
 வீயா யாணர் வளங்கெழு பாக்கத்துப்
 பன்மர நீளிடைப் போகி நன்னகர்
 விண்டோய் மாடத்து விளங்குசுவ ருடுத்த
 வாடா வள்ளியின் வளம்பல தரூஉம்“370

351-355 : கறையடி .................. சேப்பின்

பொருள் : கறையடிக் குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும் வண் தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த - உரல் போன்ற அடியினையுடைய மலையோடு மாறுபடுகின்ற யானையின் உடம்பை ஒக்கும் வளவிய தோட்டினையுடைய தெங்கினது வற்றிய மடலினை வேய்ந்த மஞ்சள் முன்றில் மணநாறு படப்பை - மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணங் கமழ்கின்ற பூந்தோட்டங்களையும் உடைய, தண்டலையுழவர் தனிமனை சேப்பின் - தோப்புக் குடிகளுடைய தனித்தனியாக அமைந்த மனைகளிலே தங்கின்;

கருத்துரை : யானையின் உடம்பு போன்ற சருச்சரையுடைய தெங்கின் வாடிய மடலாலே வேயப்பட்டனவும், மஞ்சளையுடைய முற்றத்தையுடையனவும், மணங் கமழ்கின்ற பூந்தோட்டங்களை யுடையனவும், தோப்புக்கடோறும் தனித்தனி இருப்பனவும் ஆகிய தோப்புழவர் மனைகளிடத்தே சென்று தங்குவீராயின் என்பதாம்.

அகலவுரை : கறையடி - உரல் போன்ற அடி. குன்றுறழ் -மலையை ஒத்த. யானையின் உடல் சருச்சரையுடைமையால் தெங்கின் வாடு மடலுக்கு உவமை என்க. தென்னைக்கே உவமை என்பர் நச்சினார்க்கினியர். வாடுமடல் யானைத் தோலின் நிறத்தோடே சருச்சரையும் உடைத்தாதலைக் கண்டறிக. வாடுமடல் என்றது, தெங்கம் பழுப்பினை, அப்பழுப்பைக் கிடுகாக வலந்து வீடு வேய்தல் இன்றுங் கண்டது.

குடிகள் மருதநிலத்து உழவரல்லர் என்பார் தண்டலையுழவர் என்றார். இவர்கள் மனை தெருவாக இல்லாமல் தோப்புக்கடோறும் தனித்தனியாக உளதாதலை இன்றுங் காணலாம். தெருமனையின்றித் தனிமனையில் வாழ்வார் என்றதற்குத், தனிமனைச் சேப்பின் என்றார்.

நச்சினார்க்கினியர் தனிமனை என்றதற்கு ஒப்பில்லாத மனை என்று பொருள் கூறியுள்ளார். இவர்கள் தென்னந் தோப்புக்களை உழுது பண்படுத்தும் தொழிலுடையர் ஆதல்பற்றி மருதநில மாக்களாகிய உழவரல்லர் எனத் தெரித்தோதுவார், தண்டலையுழவர் என்றார்.

இத்தண்டலையுழவரின் தனிமனைகளைக் கடற்கரையருகே உள்ள தெங்கந் தோட்டங்களில் இன்றுங் காணலாம்.


தண்டலை உழவர் விருந்தோம்பற் சிறப்பு

356-342 : தாழ்கோட்பலவின் ................ ஆர்குவிர்

பொருள் : தாழ் கோள் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம் - தாழ்ந்த குலைகளையுடைய பலாவினது சக்கை சூழாது சுளையே சூழ்ந்த பெரிய பழத்தையும்; வீழ் இல் தாழைக் குழவித் தீநீர் - விழுதில்லாத தாழையாகிய தெங்கினது இளைதாய இனிய நீரையும், கவைமுலைக் குறும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் - கவைத்த முலையையுடைய குறிய பிடியினுடைய கவுளிடத்துக் கொம்புகளை ஒக்கும், குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம் - குலையிடத்தே இருந்து முதிர்ந்த வளைந்த வெள்ளிய பழத்தையும், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும் தீம்பல் தாரம்-திரண்ட அடியினையுடைய பனையினது நுங்கோடே வேறும் இனிய பல பண்டங்களையும், முனையின் - வெறுப்பின், முளைப்புற முதிர்கிழங்கு ஆர்குவிர் - முளையைப் புறத்தேயுடைய வள்ளி முதலிய கிழங்குகளைத் தின்பீர்;

கருத்துரை : தாழ்ந்த குலைகளையுடைய பலாவினது சக்கையின்றிச் சுளையே சூழ்ந்த பெரிய பழத்தையும், தெங்கிளநீரையும், பிடியின் கொம்மையொத்த குலையிலே இருந்து முதிர்ந்த வளைந்த வெள்ளிய வாழைப்பழத்தையும், பனையின் நுங்கையும் பிறவும் இனிய பண்டங்கள் பலவற்றையுந் தின்றுதின்று வெறுப்பீராயின் முளையைப் புறத்தே யுடைய முதிர்ந்த கிழங்குகளைத் தின்பீர்கள் என்பதாம்.

அகலவுரை : எனவே, பலாவும், தெங்கும், வாழையும், பனையும் இன்னோரன்ன பிறவும் முதிர்முளைக் கிழங்கும் அவர் தம் தண்டலைக் கண்ணுள்ளன என்பதும், விருந்தினரைக் கண்டபோது அவையிற்றைப் பெரிதும் வழங்குவர் அத்தண்டலையுழவர் என்பதும் கூறியவாறாதலறிக.

பலாமரம் அடிப்பகுதியினும் வேரினும் குலைவிடுதலால் தாழ் கோட்பலா என்றார். தாழ்கோள்குலை -தாழ்ந்த குலையுடைத்தாகலான் நீயிரே பறித்துண்ணலாம் என்றவாறுமாம். சூழ் சுளை என்பதனைச் சுளை சூழ் என மாறுக. உண்போர் விரும்பிச் சூழும் சுளை என்பர் நச்சினார்க்கினியர்.

விழுதுடைத் தாழையின் விலக்குதற்கு வீழில் தாழை என்றார். இவரே, மணன் முன்றில் வீழ்த்தாழை எனப் பட்டினப்பாலையில் வீழுடைத் தாழையை ஓதுதல் காண்க. வீழ்த்தாட் டாழை (நற்-78-4) என்றும், வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை (குறுந்-228:1) என்றும், பிறரும் ஓதுப.

பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவும் அமையு மோரறி வுயிர்க்கே  (தொல்-மர-24)

என்பதோத்தாகலான், தெங்கிளங்காயைக் குழவி என்றார். காயாக வெட்டிப் புதைத்துக் கனிவித்தலும் உண்டாகலான் இவை குலையிடத்தேயிருந்து முதிர்ந்தன வென்பார் குலைமுதிர் வெண்பழம் என்றார். கூனி -வளைவுடையது. வெண்பழம் என்றார், அவை நுமக்கு உரித்து வழங்கப்படும் என்பதுபட. உரித்த வெண்பழத்திற்கே பிடிமருப்பு உவமை என்க. முளையுடையதாய முதிர்ந்த கிழங்கு உண்ணற்கு இனிதாகலின் முளைப்புற முதிர்கிழங்கு என்றார். ஆர்குவிர் என்பது, வயிறு புடைக்கத் தின்பீர் என்னும் பொருள்பட நின்றது. சேப்பின் பழத்தையும் நீரையும் பழத்தையும் நுங்கோடே பல பண்டங்களையும் முனையிற் கிழங்கு ஆர்குவிர் என்க.

ஆற்றினது இயல்பு

362-371 : பகற்பெயல் ..................... பின்றை

பொருள் : பகற் பெயல் மழை வீழ்ந்தென்ன மாத்தாள் கமுகின் - பகற்பொழுதிலே பெய்தலையுடைய மழை கால் விழுந்தாலொத்த பெரிய தண்டினையுடைய கமுகுகளின், புடைசூழ தெங்கின் முப்புடைத் திரள்காய் - பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப்பினையுடைய திரண்ட காய், ஆறு செல் வம்பலர் காய்பசி தீர-வழிச்செல்கின்ற புதியோருடைய மிக்க பசி தீரும்படியும், சோறு அடுகுழிசி இளக - அவர் சோற்றை ஆக்குகின்ற பானை அசையும்படியும், விழூஉம் வீயா யாணர் வளங்கெழு பாக்கத்து - வீழாநின்ற கெடாத புதுவருவாயினை யுடைய செல்வம் பொருந்தின பாக்கத்திடத்தே, பல் மரம் நீள் இடைப் போகி - பல மரங்கள் வளர்ந்த இடத்திலே போய், நன்னகர் விண்தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த -நல்ல நகரங்கள்தோறும் விண்ணைத் தீண்டும் மாடங்கட்கு விளங்கா நின்ற மதில்சூழப்பட்ட, வாடா வள்ளி வளம்பல தரூஉம் -வள்ளிக்கூத்தினை ஆடுதற்குக் காரணமான வளங்கள் பலவற்றையும் நாடாதே தருகின்ற, நாடு பல கழிந்த பின்றை - நல்ல நாடுகள் பலவற்றையும் போனபின்பு;

கருத்துரை : பகற்காலத்தே பெய்தலையுடைய மழை கால் விழுந்தாலொத்த பரிய தண்டினையுடைய கமுகுகளின் பக்கத்தே சூழ்ந்த தெங்கினது மூன்று புடைப்பினையுடைய திரண்டகாய், வழிச்செல்வாருடைய மிக்க பசி தீரும்படியும், அவர்கள் சோறடும் பானை அசையும்படியும், வீழாநின்ற இடையறாத புது வருவாயினையுடைய செல்வம் பொருந்தின பாக்கத்திடத்தே, பல மரங்களும் வளர்ந்த இடத்திலே சென்று, நல்ல நகரங்களிடத்து விண்ணுயர் மாடங்களை விளக்கும் மதில்கள் சூழப்பட்டனவும் வள்ளிக் கூத்தாடுதற்குக் காரணமான பல்வேறு செல்வங்களைத் தருவனவுமாகிய இடைக்கிடந்த நாடுகள் பலவற்றையும் போன பின்பு என்பதாம்.

அகலவுரை : மழை கால் வீழ்ந்திருத்தல் கமுகந்தண்டிற்கு உவமை. சேய்மையில் மழை வரிவரியாகக் கால் வீழ்த்திருத்தல் கமுகந் தோட்டத்தைப்போன்று காணப்படுதலை நோக்கியறிக. மழைக்கால் பகற்பொழுதிலே தோன்றுமல்லது இராப்பொழுதிற் றோன்றாமையால் பகற்பெயல் மழை என்றார். மாத்தாள் - பருத்த தண்டு. புடை-பக்கம். கமுகந் தோட்டத்தைச் சூழத் தெங்கந் தோட்டம் உளவாம் என்றவாறு.

தேங்காய் முதிர்ந்தால் அடிப்பகுதி மூன்றாகப் புடைத்தல் இயல்பாகலின் முப்புடைத் திரள்காய் என்றார். திரள்காய் என்றது, நிலவளந் தெரிக்கும் குறிப்பேதுவாய் நின்றது. ஆறுசெல் வம்பலர் - வழிப்போக்கர். வழிப்போக்கர் காய்பசி வந்துற்றபொழுது அக்கமுகந் தோட்டத்தே சோறடுவார் என்பதும், அவர் சோறட்டுப் பசிதீர்தற்கு முன்பே தெங்குகள் தம் முதிர்காயை வீழ்த்து அவர் பசியைப் போக்கும் என்பதும், அக்காய் வீழ்கின்ற அதிர்ச்சியாலே சோறடும்பானை அசையும் என்பதும் கூறியவாறு. எனவே ஆண்டுள்ள ஓரறிவுயிரும் தம்பால் வந்த விருந்தினரை ஓம்பும் மாண்புடையன என்பதாம்.

நச்சினார்க்கினியர், பசிதீர என்பதனைச் சோறடுதற்கு ஏதுவாக்கியும் குழிசி இளக என்றதற்குப் பானைவீழும்படி என்றும் கூறினர். வீயாத - இடையறாத; கெடாத. யாணர் - புதுவருவாய். பாக்கம் - ஊர்கள். இது, நீர்ப்பாயற்றுறையினின்றும் கச்சிக்குச் செல்லும் வழியியல்பு கூறி, அவ்வழியே போமின் எனக் குறித்தவாறாதல் காண்க. பன்மர நீளிடைப் போகி என்றது, அவ்வழிதானும் தருக்கள் நீண்டு நிழல் தரும் வழி என ஆற்றினிமை கூறியவாறாம். இப்பாக்கங்களின் இடையே நகரங்கள் பலவும் இருத்தலால், அவற்றின் ஊடேயும் போய் என்பார், நன்னகர், நாடுபலவும் என்றார். நல்ல நகரங்களின் அகத்தேயுள்ள மாடங்கள் தனித்தனி மதிலாற் சூழப்பட்டுள்ளன என்பார், விண்டோய் மாடத்து விளங்குசுவர் உடுத்த நாடு என்றார். வாடா வள்ளிவளம் என்றது, வள்ளிக் கூத்தாடி மகிழ்தற்குக் காரணமான வளம் என்றவாறு. வாடாவள்ளி - வள்ளிக் கூத்திற்கு வெளிப்படை. வாடா வள்ளி வயவர் ஏத்திய (புற-5) என ஆசிரியர் தொல்காப்பியனார் சூத்திரஞ் செய்தவாறே இவரும் வாடாவள்ளி என அச்சொற்றொடரை எடுத்தாளுலறிக. வாடும் கொடியல்லாத வள்ளி என்றவாறு. வளமிக்க நாட்டின்கண் மக்கள் பசியும் பிணியும் அறியாது மகிழ்ந்து ஆடுதல் இயல்பாகலின், மக்கள் கூத்தாடி மகிழ்தற்கேற்ற வளநாடு என்பார், வாடாவள்ளி வளம்பல தரூஉம் நாடு என்றார்.

தேடிவருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகாமையின் இந் நாடுகள் தேடிவருந்தாவண்ணம் தங்கண் வாழ்வார்க்குச் செல்வம் சுரந்தளிக்கும் நன்னாடுகள் என்பார், வளந்தரூஉம் நாடு எனத் தருதற்றொழிலை நாட்டின் மேற்றாக்கிக் கூறினார். என்னை?

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு (குறள். 739)

மூலம் : [பெரும்பாணாற்றுப்படை]

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 07:45, 25 மார்ச் 2023 (UTC)