பஞ்ச தந்திரக் கதைகள்/அன்பரான அரக்கனும் கள்ளனும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

7. அன்பரான அரக்கனும் கள்ளனும்

ஓர் அந்தணன் வீட்டில் ஒரு பசு இருந்தது. அதைக் களவு செய்வதற்காக ஒரு திருடன் இருளில் வந்தான். வழியில் ஓர் அரக்கன் அவனைக் கண்டான். 'நீ யார்?’ என்று அரக்கன் திருடனைப் பார்த்துக் கேட்டான். பதிலுக்குத் திருடனும் அரக்கனைப் பார்த்து 'நீ யார்?’ என்று கேட்டான்.

“எட்டுத் திக்கிலும் எவரும் கண்டு நடுங்கும் பிரம்மராட்சசன் தான்!” என்று அரக்கன் கூறினான்.


'செல்வர்களின் வீட்டில் குவிந்திருக்கும் பணத்தைக் கன்னமிட்டுக் கொள்ளையடிக்கும் கள்ளன் நான்!' என்றான் திருடன்.

‘இன்றிரவு நீ என்ன கருதிப் புறப்பட்டாய்?” என்று அரக்கன் கேட்டான்.

‘நீ எதற்குப் புறப்பட்டாய்? அதை முதலில் சொல் என்றான் கள்ளன்.

‘இந்த வேதியன் உடலைத் தின்ன வந்தேன்’ என்றான் அரக்கன்.

'நான் இவன் பசுவைத் திருட வந்தேன்’ என்றான் திருடன்.

'அப்படியானால் இருவரும் ஒன்றாய்ப் போவோம்’ என்று பேசிக் கொண்டு இருவரும் வீட்டு முன் வாசலுக்கு வந்து சேர்ந்தனர்.

அரக்கன் திருடனைப் பார்த்து, நீ இங்கேயே இரு. முதலில் நான் போய் அந்தணனைத் தின்று விட்டு வந்துவிடுகிறேன்’ என்றான்.

‘இல்லை, நான்போய் முதலில் பசுவை அவிழ்த்து ஓட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்' என்றான் திருடன்.

'ஏதாவது ஓசை கேட்டால் அந்தணன் விழித்துக் கொள்வான். அவன் விழித்துக் கொண்டு விட்டால், நான் அவனைச் சாப்பிட முடியாது' என்றான் அரக்கன்.

நேரமானால் யாராவது வந்து விடுவார்கள். யாராவது வந்தால் நான் பசுவைத் திருட முடியாது. என்றான் கள்ளன்.

நான் முந்தி, நீ முந்தி என்று இருவருக்கும் சச்சரவு அதிகமாகியது. இவர்கள் சண்டையிட்டுக் கொண்ட சத்தத்திலேயே அந்தணன் விழித்துக் கொண்டு விட்டான். அவன் தன் பிள்ளைகளையும் எழுப்பிக் கொண்டு வந்து, வாசல் கதவைத் திறந்தான்.

'அந்தனரே! உங்களைக் கொல்ல வந்தான் இவன்' என்று திருடன் அரக்கனைக் குற்றம் சாட்டினான்.

'ஐயா, உம் பசுவைக்களவாட வந்தான் இவன்' என்று அரக்கன் கள்ளனைக் குற்றவாளியாக்கினான்.

இருவரும் கூறியதைக் கேட்ட அந்தணன் 'இரண்டும் நடக்காதது பற்றி மகிழ்ச்சி இருந்தாலும் நீங்கள் வந்தவர்கள் சும்மா திரும்பிப் போக வேண்டாம். ஏதாவது பெற்றுக் கொண்டு போங்கள்’ என்று சொல்லி அவர்கள் இருவக்கும் சில பொருள்களை வெகுமதியாகக் கொடுத்தனுப்பினான்.

அவர்கள் அந்தணனின் நல்ல குணத்தைப் பாராட்டி, அன்று முதல் அவன் நண்பர்களாக மாறி அவனுக்குப் பல உதவிகள் செய்து வந்தார்கள்.

பகைவர்களிடம் அன்பு காட்டினால் அவர்களும் நண்பர்களாக மாறி விடுவார்கள்.