பஞ்ச தந்திரக் கதைகள்/யானையை வென்ற வெள்ளை முயல்

விக்கிமூலம் இலிருந்து

3. யானையை வென்ற வெள்ளை முயல்

ஒரு பயங்கரமான காட்டில் ஒரு பெரிய யானைக் கூட்டம் வாழ்ந்து வந்தது. ஒரு முறை அந்தக் காட்டில் மழையில்லாமல் அங்கிருந்த நீர்ச் சுனைகள் எல்லாம் வற்றி விட்டன. தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமாகி விட்டது. ஆகவே அந்த யானைகளின் அரசன் தன் ஒற்றர்களை ஏவி, குடிதண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிப்பார்த்து வரும்படி கட்டளையிட்டது.

அந்த யானைகள் எங்கும் தேடிப் பார்த்து சிறிது தொலைவில் ஒரு நீர்நிலை தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருப்பதாக வந்து கூறின. உடனே எல்லா யானைகளும் அந்த நீர் நிலையை நோக்கி நடந்தன.

அந்த நீர் நிலையைச் சூழ்ந்த இடத்தில் ஒரு முயல் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த முயல்களுக்கு, யானைகள் வந்து சேர்ந்தது பெருந்தொல்லையாக இருந்தது. யானைகளைக் காணவே பயமாயிருந்தது. அவற்றின் அருகில் நெருங்கவோ மனம் நடுங்கியது. யானைகள் இருக்கும் நேரத்தில் நீர்நிலைப் பக்கம் போகவே துணிச்சல் இல்லை. இந்த யானைகள் இருக்கும் வரை தாங்கள் அமைதியாக வாழ முடியா தென்று முடிவுக்கு வந்தன. அந்த முயல்களின் அரசன் தன் அமைச்சர்களை அழைத்து இதற்குத் தகுந்த ஆலோசனை கூற வேண்டும் என்று கேட்டது. ‘இன்று வரை நாம் இந்த நீர் நிலையைச் சுற்றியுள்ள இடத்தில் சுதந்திரமாக வாழ்ந்து வந்தோம். இன்று நம் சுதந்திரத்திற்குக் கேடுவந்தது போல் இந்த யானைகள் வந்து சேர்ந்தன. இனி நாம் இங்கு முன்போல் உரிமையோடு கவலையில்லாமல் நடமாட முடியாது. வேறோர் இடத்திற்குப் போகலாம் என்றால், நமக்குத் தகுந்த இடம் எதுவும் இல்லை. மேலும் இந்த இடத்தில் நாம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். இதைவிட்டுப் போகாமல் இருக்கவும், அந்த யானைகளை இவ்விடத்தினின்று அகற்றவும் நீங்கள் ஒரு வழி சொல்ல வேண்டும்’ என்று அரச முயல் கேட்டது.

அந்த அமைச்சர்களிலே மிகவும் திறமை வாய்ந்த வெள்ளை முயல் ஒன்று உடனே எழுந்து, ‘அரசே, இந்த யானைகளை வெல்வது அப்படியொன்றும் பெரிய செயலல்ல. தாங்கள் விடை தாருங்கள். நான் இப்போதே புறப்பட்டுப் போய் வெற்றியோடு திரும்பி வருகிறேன்’ என்றது.

அவ்வாறே அரச முயல் அந்த வெள்ளை முயலை ‘வெற்றியோடு திரும்பி வருக' என்று வாழ்த்தியனுப்பியது.

வெள்ளை முயல், தங்கள் மறைவிடத்தை விட்டுப் புறப்பட்டது. வேழக் கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றது. தொலைவில் அந்த யானைகளைக் கண்டபோதே அதற்கு மன நடுக்கம் ஏற்பட்டது.

‘இந்த யானைகளின் கையில் அகப்பட்டால், நம்மைப் பந்தடித்து விளையாடியே கொன்று விடும். ஒரத்தில் ஒதுங்கி நின்றால் கூட வந்து அடிக்கத் தொடங்கி விடும். இவற்றின் கண்ணில் படுவதே தவறு” என்று அந்த முயல் பயந்தது.

இவற்றின் கையில் அகப்பட்டுக் கொள்ளாமல் நாம் வேலையை முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, அது, பக்கத்திலிருந்த ஒரு மேட்டின் மேல் ஏறி நின்று கொண்டது.

மேட்டில் இருந்தபடியே, அந்த வெள்ளை முயல் யானை அரசனை நோக்கி,`ஏ, தும்பி! நலமாக இருக்கிறாயா?' என்று நலம் விசாரித்தது. வியப்புடன் திரும்பிப் பார்த்த அந்த யானை மேட்டின் உச்சியில் நின்ற முயலைப் பார்த்து, `நீ யார்?” என்று கேட்டது. ‘உலகம் எங்கும் நிலவொளி பாய்ச்சும் திங்கள் அரசருடைய தூதன் நான். எங்கள் அரசருடைய கட்டளையை உன்னிடம் கூற வந்தேன்!” என்று கம்பீரமான குரலில் அந்த வெள்ளை முயல் கூறியது.

'திங்கள் அரசன் தனக்குத் தூது விடுப்ப தென்றால் ஏதோ தீமையான செய்தியாகத் தான் இருக்க வேண்டும்’ என்று பயந்து அந்த யானை அரசு, ‘நிலாவின் தூதனே, நீ வந்ததென்ன?’ என்று கேட்டது.

யானையின் நடுக்கத்தைக் கண்டவுடன், வெள்ளை முயலுக்கு வீறாப்பும் ஊக்கமும் மிகுதியாயின.

எங்கள் நிலாவரசரும் அவருடைய தேவிமார்களும் நீராடுவதற்தென்று இந்தக் கானகத்தில் ஓர் அருமையான சுனையை ஏற்படுத்தினோம். இரவு முழுவதும் அவர்கள் இந்தச் சுனையில் நீராடிக் களிப்பார்கள். பகலில் யாரும் இதில் இறங்காதபடி பார்த்துக் கொள்ள எங்களைக் காவல் வைத்திருக்கிறார்.

'தேவர்களானாலும் இந்தச் சுனையில் இறங்கக் கூடாதென்பது எங்கள் அரசர் ஆணை. ஆனால், இப்பொழுது, நீ உன் கூட்டத்தாருடன், இந்தச் சுனை நீரையருந்துவதற்கு வந்திருக்கிறாய் என்று தெரிந்து, நீ போய் அவனைத் தடு’ என்று கூறி என்னை அனுப்பி வைத்துள்ளார். 

‘தூது செல்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால், தாம் சொல்லுகின்ற செய்தி கேட்கின்றவர்களுக்குக் கோபத்தை யுண்டாக்கக் கூடியதாக இருந்து, அவர்கள் வாளையுருவிக் கொண்டு தம் மேற் பாய வந்தாலும், பதைப்படையாமல், கூறவேண்டியதைக் கூறி முடித்தே ஆக வேண்டும். தூதுவர்கள் என்ன கூறினாலும், அவர்கள் பகையரசர்களுடைய ஆட்களாயிருந்தாலும், மிகுந்த அறிவுடைய அரசர்கள் அவர்கள்மேற் கோபம் கொள்ளக் கூடாது.

'உடல் வலி தனக்கு இருக்கிறது என்பதற்காக பெரியவர்களோடு பகைத்துக் கொண்டால், பின் அவர்களால் வெல்லப்பெற்று உயிரையும் இழக்க நேரிடும். முதலிலேயே அவர்களைப் பகைத்துக் கொள்ளாமல் வணங்கிப் போற்றினால், உயிர் பிழைத்துக் கொள்ளலாம். மூன்று கடவுள்களிலும் முதல் கடவுளான சிவபெருமானுடைய திருமுடியில் வாழும் எங்கள் நிலாவரசரின் பகைமையைத் தேடிக் கொள்ளாமல், நீ இந்தச் சுனையை விட்டுப் போய் விடுவதே நன்று. நீ வீணாக எங்கள் அரசருடைய கோபத்துக்கு இலக்காகக் கூடாதே என்பதற்காக நான்தான் இவ்வளவு கூறினேன். நிலாவரசர் உன் மேல் கொண்டிருக்கும் கோபம் கொஞ்சநஞ்சமல்ல. நீ இப்பொழுதே உன் யானைக் கூட்டங்களுடன் திரும்பப் போய்விட்டால், தான் அவருடைய கோபத்தை ஆற்றப் பாடுபடுகிறேன்” என்று பல வாறாக உரைத்தது அந்த வெள்ளை முயல்.

இதைக் கேட்ட அரச யானை, நிலாவரசர் எப்போது இங்கு புனலாட வருவார் ஏன்று சொல். நான் நேரில் வந்து அவரிடம் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போகிறேன்’ என்று சொல்லிற்று.

சரி, அவ்வாறே செய்கிறேன்” என்று சொல்லி முயல் அன்றிரவு யானையைக் கூட்டிக் கொண்டு அந்த நீர் நிலைக்கு வந்தது. தெளிந்த நீரின் இ டையே தோன்றிய நிலவின் சாயையைக் காட்டி, அதோபார்!” என்றது.

அத்தச் சாயையைத் திங்கள் என்றும், அதைச் சுற்றித் தெரிந்த விண்மீன்களின் சாயையை, நிலா வரசனின் மனைவிமார் என்றும் எண்ணிக் கொண்ட யானை,' நிலாவரசே! எனக்கு இது தெரியாது. தாங்கள் புனலாடும் சுனையென்று தெரிந்திருந்தால் இங்கு வந்திருக்கவே மாட்டேன். தெரியாமல் வந்த என் பிழையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இப்போதே நான் என் இனத்தாரோடு திருப்பிப் போய் விடுகிறேன்’ என்று துதிக்கையைத் தூக்கி வணக்கமிட்டது. பிறகு அது மற்ற யானைகளை அழைத்துக் கொண்டு வேறு சுனையைத் தேடிச் சென்றுவிட்டது.

அதன் பின் முயல்கள் யாவும் முன்பு போல் சுதந்திரமாகவும் இன்பமாகவும் அந்தக் கானகத்தில் வாழ்ந்து வந்தன.