பயணம்
“இன்னும் நீங்க குளிக்கப் போகல்லியா? அறை வாசற் படியிலிருந்து அதட்டலான குரல் வந்தது.
அறையில் சுவர் ஓரமாய்ப் பழைய நார்மடிப் புடவை ஒன்றை விரித்து சுருண்டு படுத்திருந்த நாகுப் பாட்டி குரல் வந்த திசையைப் பார்த்தாள். பார்வதியின் ஸ்தூல சரீரம் நிழற்படமாகத் தெரிந்தது. எழுந்திருக்காமலேயே இதோ போகிறேன் என்றாள். கிணத்தடி ஒழிஞ்சிருக்கா?"
“எல்லாம் ஒழிஞ்சிருக்கு. நீங்க எழுந்திருங்கோ என்றாள் பார்வதி சிடுசிடுப்புடன்.
“அப்ப சரி'” என்று நாகுப் பாட்டி எழுந்தாள். தலைமாட்டிற்கு வைத்திருந்த துண்டை எடுத்துக் கொண்டு சுவரோரமாய் இருந்த கைத்தடியுடன் நடந்தாள்.
“என்ன மணி ஆறது?"
“ஒன்பதரை. "
“'ஒன்பதரைதானே?
“என்ன 'தானே?' நீங்க ஒண்ணரை நாழிகுளிச்சு, அதுக்கப்புறம் ஜபதமுன்னு சொன்னதையே சொல்லிண்டு சுத்திச் சுத்தி சாப்பிட வரதுக்குள்ளாற பன்னண்டு மணியாயிடறது ஒரு நாளைப் போல. இன்னிக்கு எனக்கும், காமுக்கும் கடைக்குப் போகணும், சாப்பாட்டுக் கடை ஆனவுடனே!
“சரிதான், என்ன வாங்கணும்?"
இந்தக் கிழத்திற்கு எல்லாம் சொல்லியாகணும்'. “என்னவோ வாங்கணும். பெண்ணைப்பார்க்க நாளைக்கு அவ பம்பாய்க்குக் கிளம்பறா; எத்தனையோ இருக்கும் வாங்க. நீங்க தினம் போல மசமசன்னு நேரமாக்கினேள்னா....
“இல்லேடி இல்லே. இதோ போறேன், நேரமாக்க மாட்டேன்.”
நாகுப்பாட்டி மெல்ல கூடத்தைத் தாண்டி நடையைக் கடந்து கொல்லைப்புறத்துக்கு வந்தாள்.
கிணற்றடியில் பட்டம்மாதுணிகளை அலசிக் கொண்டிருந்தாள்.
“ஏண்டி பட்டம்மா, இன்னும் வேலை முடியல்லே? கிணத்தடி ஒழிஞ்சிருக்குன்னாளே பார்வதி?"
“ஏய் பட்டு, சீக்கிரம் அங்கே இடத்தைக் காலி பண்ணு! சொன்ன தும் இன்னிக்கு எழுந்துண்டு வந்திடுத்து கிழம். நல்ல வேளையா குளிக்கட்டும். எனக்கு வெளியிலே போற வேலையிருக்கு.
“இதோ ஆச்சும்மா! ஒரு நிமிஷம் கழுவி விட்டுடுறேன். சோப்புத்தண்ணி இருக்கில்லே? எங்கேயாவது வழுக்கி விழுந்து மண்டையைப் போட்டாங்கன்னா.
“போட்டா ஒண்ணும் மோசமில்லே. வேற தினுசா அது போகும்னு தோணல்லே.
பட்டம்மாள் சட்டென்று நிமிர்ந்து நாகுப் பாட்டியைப் பார்த்தாள்.
பார்வதியின் பேச்சு காதிலேயே விழாதது போல் பாட்டி நின்றிருந்தாள்.
“ஆச்சா பட்டம்மா? என்றாள் இயல்பாக.
தென்னந் துடைப்பத்தால் பரபரவென்று நீரைத் தள்ளிவிட்டு, “ஆச்சு!” என்று நிமிர்ந்து பாட்டிக்காக ஒதுங்கி நின்றாள் பட்டு.
பாட்டி சர்வ ஜாக்கிரதையாக நடந்து கிணற்றடியை அடைந்தாள்.
“அவளுடைய அலுப்பு அவளுக்கு! என்று மெல்ல முணு முணுத்தாள். “நானும் முப்பது வருஷமாக காத்திருக்கேண்டி பட்டம்மா, எடுத்துண்டு போக மாட்டேங்கறானே எமன்?
“அவன் லிஸ்டிலே உங்க பேர் விட்டுப் போயிருக்கும். "
புடவையை இளக்கிக் கொண்டு நிமிர்ந்தபோது பேத்தி காமு நின்றிருந்தாள். பார்வதியின் கடுகடுப்பு இவளிடம் இல்லை.
““உட்காருங்கோ. தண்ணி ஊத்தறேன்!
பாட்டியின் முகத்தில் மெலிதான பிரசன்னம் படர்ந்தது. கீழே குந்தியபடி 'ஊத்து' என்றாள்.
கிணற்றிலிருந்து நீரை இழுத்துத் தலையில் காமு ஊற்றுகையில் “பெண்ணைப் பார்க்க போயிண்டிருக்கியா? என்றாள் பாட்டி இதமாக.
“ஆமாம் பாட்டி நாளைக்குக் கிளம்பறேன். இடைச்சன் பிரசவத்துக்கு எங்கிட்ட வந்துடுன்னு சொன்னேன். வர செளகர்யப் படாதுன்னு பம்பாயிலேயே தங்கிட்டாளே. குழந்தை பிறந்து மூணு மாசமாறது. என்னாலேயும் போக முடியல்லே!
“நீ எப்படிப் போவே? அப்பத்தான் உன்ஆம்படையான் காலை ஒடிச்சிண்டு படுத்திருந்தானே!"
“பாட்டிம்மாவுக்கு எல்லாம் எப்படி நினைவிருக்கு பாத்தீங்களா!
“காமு, கிழத்துக்கிட்டே பேச்சுக் கொடுத்திண்டு நின்னியானா நாம்ப இன்னிக்கு கடைக்குப் போனாப்பலேதான்!
“போறுமா பாட்டி ?'” என்றாள் காமு.
போறும்டியம்மா. மடிப்புடவையைக் கொண்டு வந்து வச்சிருக்கியா?"
“வெச்சிருக்கேன்.
கம்பில் அவள் நீட்டிய நார்மடிப் புடவையை உருவிக்கொண்டு பாட்டி நிதானமாகப் புடவையை ஜாதிக் கட்டாக உடுத்துகையில் தொலைவிலிருந்து பட்டம்மாள் சொன்னாள்:
“நாளைக்கு அம்மட்டனைக் கூட்டியாரவாம்மா?
“ஆமாண்டி, நானே சொல்லணும்னு நினைச்சேன். படுத்தா முள் முள்ளா குத்தறது. அரிச்சிப் பிடுங்கறது. நாள், கிழமை, அம்மா சைன்னு ஒத்திப் போட்டாச்சு.”
“பாட்டி, உங்க ஜபத்தை முடியுங்கோ, வாங்கோ!"
“இதோ வரேண்டி என்று முணுமுணுத்தபடி பாட்டி நகர்ந்தாள். கொல்லைமுற்றத்து வெயிலிலிருந்து உள் நடைக்கு வந்ததும் இருட்டாக இருந்தது. தட்டுத் தடுமாறி சுவரில் இருந்த மின் விளக்கு ஸ்விட்சைத் தட்டி பூஜை அறைக்குப் பாட்டி சென்றாள்.
இந்தப் பட்டணத்துக் குச்சு வீடு இன்னும் பழக்கமாகல்லே. இவர் இருக்கிற வரைக்கும் கிராமத்து நாலு கட்டு வீட்டிலே கால் வீசி' நடந்த பழக்கம்தான் நினைவிலே இருக்கு. பெரிய மிராசு அரண் மணைன்னே பேரு. எல்லா கட்டுலேயும் வெளிச்சத்துக்குப் பஞ்ச மில்லே. இப்படிப் பகல் வேளையிலே கூட விளக்கைப் போடும் படியாக இருக்காது. அப்பல்லாம் வேற காலம், ராணி மாதிரி வளைய வந்த காலம். இந்தப் பார்வதி எதிர நிக்கவே பயப்படுவாளே! இவர் மகாராஜனா முன்னாடி கிளம்பிப் போயிட்டார் மரியாதையைக் காப்பாத்திண்டு...
பூஜை அறைக்குள் சென்று மேடை மேல் இருந்த சம்புடத்தி லிருந்து சுருங்கிய மெல்லிய விரல்களால் விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ளும் போது-
“எனக்கின்னும் வேளை வரல்லியே! என்றாள்.
மணையில் அமர்ந்து 'சுக்லாம் பரதரம்' குட்டிக் கொண்டதும் மேற்கொண்டு எந்த அட்சரமும் நினைவுக்கு வரவில்லை.
“அவன் லிஸ்டிலே உங்க பெயர் விட்டுப் போயிருக்கும்.
அப்படித்தான் இருக்கணும். எமன் வாசலுக்கு வராம இல்லே. காஞ்ச சருகா நா வாசல்லேயே அவனுக்காக உட்கார்ந்திருக்கிறது அவன் கண்ணுக்குப் படல்லே. கனியாத பழத்தையும், பூவையும், பிஞ்சையும் உள்ளேர்ந்து வாரிண்டு போயிண்டிருக்கான். என் வயித்தெரிச்சலைக் கொட்ட எத்தனை பேர்? சுப்பிணியிலேருந்து ஆரம்பிச்சது...
எப்படியிருப்பான் சுப்பிணி. வீட்டுக்குத் தலைப்பிள்ளையா, லட்சணமா, ராஜா மாதிரி வளைய வருவானே. வக்கீலா ரெண்டு கையாலையும் வாரிக் கொட்டினானே! புருஷனைப் பார்த்துப் பார்த்துப் பார்வதியே மயங்கி நிப்பா. அத்தனை பெருமையும் கோர்ட்டுக் கச்சேரியிலே வாதாடிண்டிருக்கச்சையே பொசுக்குனு மாரடைப்பிலே அவிஞ்சு போச்சு.
அந்த அதிர்ச்சியிலே இவரும் போய்ச் சேர்ந்தார். நான்தான் இடிச்ச புளியாட்டம் நகராம உட்கார்ந்திருக்கேன். வரிசையா பாலா, மீனு, வெங்கிட்டு, எச்சு, ரமேஷ் - எல்லோரும் நன்னாயிருக்கிற உடம்போடு எச்சரிக்கையே இல்லாம ஏமாத்திட்டுக் கிளம்பிப் போறதைப் பார்த்துண்டு, மூலையிலே, வாசத் திண்ணையிலே பாவியா உட்கார்ந்திருக்கேன். ஒவ்வொரு தடவையும் பாடையைத் தூக்கிண்டு கிளம்பறதைப் பார்க்கும்போது மனசு பதறிப் போறது. ஐய்யோ, நான்னா அதிலே இருக்கணும்னு துடிச்சுப்போறது.
பார்த்துண்டு உட்காரறதைத் தவிர ஒண்ணும் செய்ய முடியல்லே. கண் பார்வை இன்னும் நன்னாயிருக்கு, காது நன்னாக் கேக்கறது. எல்லாத்தையும் பாரு, எல்லார் பேச்சையும் கேளுன்னு யாரோ சபிச்சாப்பலே, மனசுதான் சுரணையத்துப் போச்சு. இல்லேன்னா சுப்பிணி செத்தன்னிக்கோ, அவன் பிள்ளை ரமேஷ் செத்தன்னிக்கோ உசிரு விர்ருனு கிளம்பியிருக்கணுமே பார்வதி பேசின பேச்சுக்கு...
பாட்டி ஜபத்தை முடிச்சாச்சா?'"
“யாருக்காகக் கிழம் ஐபத்தைப் பண்றதோ தெரியல்லே. அதோட வயசுதான் நீண்டுண்டு போறதே தவிர, குடும்பத்துக்கு எந்தப் பலனையும் காணல்லே.
“சும்மா இரும்மா, பாவம். தொண்ணுத்தெட்டு வயசிலே யாரையும் தொந்திரவு செய்யாம இந்த மட்டும் கெட்டி முட்டியா இருக்காளே பாட்டி.”
அதாலெ யாருக்கு என்னடி பிரயோசனம்? இத்தனை வயசு பூமிக்கு பாரமா உட்கார்ந்து என்ன லாபம்? கட்டக்கடுங்காளை வயசிலே நா பிள்ளையை வாரிக் கொடுத்த வயித்தெரிச்சலை எங்கே கொட்டட்டும்? இது போயிருக்கலாமோல்லியா?
“அதுக்கென்னம்மா செய்ய முடியும்?”
“அப்படிச் சொல்லாதே! பாபாத்மா இது! இது உசிரோட இருக்கிறவரை எல்லாரும் வயித்தில நெருப்பைக் கட்டிண்டு உட்கார்ந்திருக்கணும்.
“போம்மா, இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன்.”
நாகுப் பாட்டி எழுந்திருந்தாள். நடையின் விளக்கை யாரோ அணைத்திருந்தார்கள். இருட்டுக்குப் பழக்கப்பட்டுப் போன பார்வையுடன் பாட்டி மெல்ல நடந்து சமையலறையை எட்டிப் பார்த்தாள். காமு ஏதோ வேலையாய் இருந்தாள்.
“வாங்கோ, உங்களுக்கு இலை போடறேன் என்றாள்.
"நீ சாப்பிடலையா?"
“நானும் அம்மாவும் சேர்ந்து சாப்பிடறோம். "
“பார்வதி எங்கே காணும்?"
“வாசல்லே கறிகாய்காரன் வந்திருக்கான்.
“சரிதான். "'
இலையில் விழுந்த பதார்த்தங்களைப் பாட்டி நிதானமாக நாகுக்காகச் சாப்பிட ஆரம்பித்தாள்.
“வாழைத் தண்டு மோர்க் கூட்டா? நீயா சமைச்சே காமு?"
“ஆமாம் பாட்டி, எப்படியிருக்கு?"
“அமிர்தமா இருக்கு. "
“சாப்பிடறதெல்லாம் அமிருதமாத்தான் போயிண்டிருக்கணும் உங்களுக்கு என்றபடி பார்வதி உள்ளே நுழைந்து கறிகாய்க் கூடையை மூலையில் வைத்தாள். அம்மாவும் பெண்ணும் ஒருவரை யொருவர் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்தார்கள்.
நாகுப் பாட்டி அதைக் கவனிக்கவே கவனிக்காமல் வாழைத் தண்டு கறியை விரல் நுனியால் நசுக்கி சாதத்துடன் கலந்து வாயில் போட்டுக் கொண்டாள்.
வெளியறையிலிருந்த டெலிபோன் ஒலிக்கிறாற் போல் இருந்தது.
காமு அலுப்புடன் எழுந்தாள். இதோட மூணு தடவை மணி அடிச்சு அடிச்சு எடுக்கறதுக்குள்ளே நின்னு போறது!"
“பம்பாயிலோ்ந்து பத்மா பண்றாளோ என்னவோ! வெளியூர்லேந்து வரதெல்லாம் லேசிலே கிடைக்காது. '
பேசியபடியே வட்டிலில் சாதத்தை எடுத்து வந்த பார்வதியிடம்- '
“கழக்கோடியளவு போட்டு மோர் விடு என்றாள் பாட்டி.
பரிமாறியபடி பார்வதி கூடத்துப் பக்கம் குரல் கொடுத்தாள்.
““பத்மாவா இருந்தா, இங்கேந்து என்ன சாமான் வேணும்னு ஞாபகமாக்கேளு!"'
மோரை விட்டுப் பிசைகையில் காமுவின் உயர்ந்த குரல் கூடத்திலிருந்து வெடித்தது.
“யாரு? என்னது? பத்மாவா? ஐய்யய்யோ, எப்போ? என்ன மாப்பிள்ளை இது, பெரிய இடியாப் போடறேள்?"'
அடி வயிற்றில் திக்கென்றது. நாகுப் பாட்டி பீதியுடன் பார்வதியை நிமிர்ந்து பார்த்து அலங்க மலங்க விழித்தாள்.
பார்வதி சரேலென்று அறையை விட்டுக் கூடத்துக்கு விரைந்தாள்.
என்னடி, என்னடி காமு சமாச்சாரம்?"
காமு 'ஓ'வென்று ஓலமிடுவது கேட்டது.
நாகுப் பாட்டிக்குக் கையும், காலும் வெலவெலத்துப் போயிற்று.
யாரு இப்ப?
“பத்மா இன்னிக்குக் காலமே ஷாக் அடிச்சு செத்துப் போயிட்டாளாம்மா!
“ஐய்யய்யோ! அடிப்பாவி!"
அது என்ன அலறல்! அது என்ன ஓலம், லோகத்து துக்க மெல்லாம் பிரளயமாப் பொங்கினாப்பலே!
நாகுப் பாட்டிக்கு துக்கத்திற்கு மேல் பீதியேற்பட்டது. இலை யின் முன் சோற்றைப் பிசையும் குத்துக் கல்லாய் தான் உட்கார்ந் திருப் பது ஏதோ குற்றம் செய்தாற்போல் உடம்பு நடுங்கி கூசிற்று. மூளை மரத்து செயலிழந்து நின்றது, வரப்போகிற தாக்குதலை எதிர்பார்த்து...
பத்திரகாளி ஸ்வரூபமாய் ஆவேசத்துடன் பார்வதி உள்ளே நுழைந்தாள். நாகுப் பாட்டிக்கு நெஞ்சு உறைந்து போயிற்று. சுப்புணி செத்ததும், ரமேஷ் செத்ததும் ஞாபகத்துக்கு வந்தது. .
“என்னை விட்டுட்றீ... என்னை....
பார்வதி கிடுகிடுவென்று அடுப்படிக்குச் சென்று வெண்கலப் பானையை எடுத்து,
“இந்தாங்கோ, கொட்டிக்குங்கோ! என்று கர்ஜித்தபடி தலைகீழாய் நாகுப் பாட்டியின் இலையில் பானையைக் கவிழ்த்தாள். குடான அன்னப் பருக்கைகள் பாட்டியின் புறங்கையில் சரீர் என்று தெறித்தன. பாட்டி விடுக்கென்று பின்னுக்கு நகர்ந்தாள்.
விக்கித்துப் போய் பயந்த நிலையில் நா உலர்ந்தது. அநத வெண்கலப் பானையையும் ஆவி கக்கும் மலை போல இருந்த அன்னக் குவியலையும் பார்த்து விழித்தாள்.
“எல்லாரையும் வாரி வாரி அனுப்பத்தானே இப்படி ஆணி அறைஞ்சாப்பலே உக்காந்திருக்கே! இன்னும் எத்தனை நாள் உனக்குக் கொட்டிக்கணும்? உன்னை அந்தச் சண்டாளப்பாவி எமன் தூக்கிண்டு போகமாட்டேங்கறானே. பிஞ்சையும், மொட்டையும் பறிச்சிண்டு போறானே!"
பார்வதியின் வார்த்தைகள் எதுவும் நாகுப்பாட்டியின் செவியில் விழவில்லை. அந்த ரெளத்திரமும், வெறுப்பும், கொலை வெறியும் மொத்த உருக்கொண்டு விசுவருபமாய் பயமுறுத்திற்று.
பேத்தி செத்த துக்கத்தைவிட இவளுக்கு எம்மேல் இருக்கிற வெறுப்புத்தான் ஜாஸ்தி. அடுத்தாப்பலே அந்த அரிவாமணையை எடுத்து என் மண்டையிலே போட்டாலும் போட்டுடுவே, போட்டுற்ரீ அப்படியாவது நா ஒழிஞ்சு போறேன்...
வாசற்கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள். பார்வதி க்ரோதத்துடன் பாட்டியைப் பார்த்துவிட்டு,
“பத்மா போயிட்டாளாம்! தளதளன்னு இருந்த இருபத்தி நாலு வயசுக் குழந்தை என்றாள் அடிக் குரலில்.
"மனசு குளிர்ந்ததோ இல்லையோ? எல்லாத்தையும் கொட்டிக்கோ ஒரு பருக்கை விடாமெ! என்று தொடர்ந்து உறுமிவிட்டு வெளியேறினாள்.
திகைப்புடன் நாகுப் பாட்டி இலையைப் பார்த்தாள். நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள் மூன்று பேர்கள் சாப்பிடலாம். இன்னும் ஆவி பொங்கிக் கொண்டிருந்தது. இலையில் ஓரமெல்லாம் கூட்டில் பழுப்பாகிப் போயிருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க இனம்புரியாத அதிர்வலைகள் உடல் முழுவதும் பரவி நடுங்கின.
என்னடி பண்ணுவேன் இதை? எச்சக்கலையிலே இத்தனை அன்னத்தைக் கொட்டிருத்கியே... உங்க மாமனார் இன்னிக்கு உசிரோடு இருந்தார்னா இத்தனை தைர்யம் வந்திருக்குமா உனக்கு?
'சிவ சிவா, அவர் போயிட்டதே நல்லது. இதையெல்லாம் தாங்கிக்க நா ஒருத்தி இருக்கிறது போறாதா?'
இப்ப இதை என்ன பண்றது?' கூடத்திலிருந்து கல் ஒப்பாரி கேட்டது.
வெண்கலப் பானை இன்னும் சுட்டது. அதை சிரமப்பட்டுப் பாட்டி நிமிர்த்தினாள். கொஞ்சம் கொஞ்சமாய் சோற்றுப் பருக்கை களை அதற்குள் போட்டாள். கை அசந்து போயிற்று. “எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டிருப்பேன்! ஏண்டி, இப்படி அன்னத்தை வீணாக்கறது அடுக்குமா' என்று முணுமுணுத்துக் கொண்டாள். ஒருவழியாக அதை நிரப்பியதும் பாட்டி எழுந்திருந்தாள். கம்பைப் பிடித்துக்கொண்டு நடக்கையில் மிகவும் தள்ளாமையாக இருந்தது. உடம்பு கனத்துப் பெரிய பாரத்தை இழுப்பது போல் இருந்தது. கொல்லைக் குழாயில் கை கழுவி, வாயைக் கொப்பளித்து விட்டுக் கூடத்துப் பக்கம் செல்ல பாட்டி தயங்கி நின்றாள். அந்தக் குழந்தை காமுவை சமாதானப்படுத்த வேண்டாமோ...
பாட்டி வேறு யோசனையில்லாமல் கூடத்துக்குள் காலடி வைத்தாள். கூடம் நிரம்பியிருந்தாற்போல் இருந்தது. அதுக்குள்ளே தெருப் பொம்மனாட்டிகள்ளாம் வந்துட்டாளா என்ன?
பாட்டியின் பார்வையில் யாரும் படவில்லை. புடவைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டு மற்ற பெண்களின் பிடிக்கு அடங்காமல் புலம்பி அழுது கொண்டிருந்த காமுவை நோக்கி மெல்ல நடந்து அவளெதிரில் லேசாகக் குனிந்து மெல்லிய நடுங்கும் குரலில், “அம்மா காமு, என்னடி குழந்தே இது அநியாயம்? என்றாள்.
காமு முகத்திலிருந்த கையை விலக்கி சுரீரென்று பாட்டியைப் பார்த்தாள்.
துக்கத்தோட க்ரோதமும்னா தெரியறது பார்வையிலே! இவ பார்வதியா, காமுவா?
ரத்தஅணுக்கள் எல்லாம் உறைந்து போயிற்று நாகுப் பாட்டிக்கு.
குபீரென்று காமு பாய்ந்து எழுந்தாள். அம்மா சொல்றது சரிதான். நம்மளைப் பாவியாக்கறவ இந்தக் கிழவி! இவ ஒரு குன்யக்காரி! வீட்டிலே இருக்கிற அத்தனை பேரையும் அனுப்பிச் சுட்டுத்தான் இவ நகரப் போறா இங்கேந்து!"'
காமுவா? காமுவா இப்படிப் பேசறா? நாகுப் பாட்டிக்குக் குலை நடுங்கிற்று. சுற்றிலும் இருப்பவர்கள் எல்லார் பார்வையும் குற்றம் சாட்டுகிறாற் போல் இருந்தது.
“என்னடி பண்ணட்டும்? என்றாள் பலவீனமாக, என்னைக் கொண்டுபோக மாட்டேங்கரானே?
“எப்படிப் போவான்? என்று பார்வதி சீறினாள். 'இரும்புன்னா உன் மனசு? ராஜா மாதிரி இருந்த பிள்ளை போயி, மாப்பிள்ளை போயி, பின்னாலே பொண்ணு, பேரன் - பேத்தி, இப்பக் கொள்ளுப் பேத்தி எல்லோரும் கிளம்பிப் போறதை ஜெரிச்சுண்டு நீ உட்கார்ந்திருக்கியே, நீ மனுஷிதானா?
அவள் சொல்வதையெல்லாம் அங்கீகரிப்பது போல ஒரு மெளனம் அங்கே பரவியிருந்தது.
நா என்னடி பண்ணட்டும்? என்று பார்வதி பழித்துக் காட்டினாள். “போ, குளத்திலேயோ குட்டையிலேயோ விழு.”
“என்ன மாமி நீங்க! இது கண்றாவி துக்கம்தான். ஆனா கிழவி என்ன பண்ணுவா பாவம்?"
“உனக்குத் தெரியாது சரோஜா, என் வயிறு எரியறது! என்று பார்வதி அழுகையுடன் வெடித்தாள். பொசுக்கு பொசுக்குன்னு ஒவ்வொருத்தரா போறதும் பழி வாங்கிற மாதிரி இந்தக் றம் உட்காந்திருக்கிறதும். "
பகபகவென்று பார்வதியிடமிருந்து அழுகை வெடித்தது. “பாட்டி, நீங்க உள்ளே போங்கோ! என்றாள் எவளோ ஒருத்தி சமயோசிதமாக.
நாகுப் பாட்டி தலையைக் குனிந்தபடி நகர்ந்தாள். தன் அறை வந்ததும் மெளனமாக நார்மடி விரிப்பு விரித்திருந்த தன் இடத்தில் அமர்ந்தாள்.
காமுவின் எப்பவும் குளிர்ந்த முகம் விகாரமாகிப் போன விந்தையும் வார்த்தைகளும் நினைவில் நின்று குழப்பின.
'நீயும் வேண்டாண்டி. விட்டுட்றீ...'
நாகுப் பாட்டி மெல்ல எழுந்தாள். பின் பக்கமாக ஓசைப்படாமல் சுவரைப் பிடித்தபடி நடந்து சமையல் அறையை அடைந்தாள். இன்னும் அவளுடைய எச்சில் இலையும், வெண்கலப் பானை சாதமும் அப்படியே இருந்தன. பாட்டி நிதானமாக அமர்ந்து வெண்கலப் பானையிலிருந்து அன்னத்தை வாயில் திணிக்க ஆரம்பித்தாள்...
கொல்லைப் பக்கம் வந்த சரோஜா அரக்கப் பரக்கக் கூடத்துக்கு ஓடினாள்.
“ஐய்யய்யோ மாமி, அந்தக் கிழவிக்கு மூளை கலங்கித்தான் போச்சு! இழவு வீடுன்னு தெரியும். வெண்கலப் பானையோடு எடுத்து இலையிலே வெச்சுண்டு சோத்தை அள்ளி அள்ளிப் போட்டுக்கறா, சமையற் கட்டிலே உட்கார்ந்துண்டு....!
“இது என்ன கண்றாவி?"
“சாதாரண மனுஷி இல்லைடீ அவ!"
“நூறு வயசுக் கிழவி எப்படி வெண்கலப் பானையைத் தூக்கினா?"
“அதான் பாரேன் அதிசயத்தை!"
பார்வதி விருக்கென்று ஆங்காரத்துடன் எழுந்தாள்.
"இன்னிக்கு விடப் போறதில்லே! என் பிராணனை எடுக்கத்தான் இருக்கு கிழம்....!
அவளைத் தொடர்ந்து மற்ற பெண்களும் வேடிக்கை பார்க்கச் சென்றார்கள்.
வெண்கலப் பானை உருண்ட நிலையில் கிடந்தது. இன்னும் பாதிக்கு மேல் அன்னம் இருந்தது. நாகுப் பாட்டியின் வாயிலும், தொண்டையிலும் திணிக்கப்பட்ட மிகுதிப் பாதி அவள் மூச்சை அடைத்திருந்தது.
சுவரில் சாய்ந்திருந்த பாட்டியின் உடலை மெல்லத் தரையில் கிடத்திய சரோஜா-
“இது மூளைக் கலக்கம்தான், வேற ஒண்ணும் இல்லை"! என்றாள்.