பல்லவர் வரலாறு/8. சிம்ம விஷ்ணு - (கி.பி. 575-615)

விக்கிமூலம் இலிருந்து

8. சிம்ம விஷ்ணு

சிம்மவிஷ்ணு காலம்

இவனே புகழ்பெற்ற பிற்கால அரசருள் முதல்வன் ஆவன். இவன் இடைக்காலப் பல்லவர் பட்டியலில் உள்ள மூன்றாம் சிம்மவர்மன் மகன்; முதல் நந்திவர்மனுடைய (ஒன்று விட்ட) உடன் பிறந்தான் மகன். (காசக்குடி, வேலூர் பாளையம் ஒப்பு நோக்கிக் காணின், இப் பிற்காலப் பல்லவர் முதல்வனான சிம்ம விஷ்ணு நந்திவர்மனுக்குப் பின்பட்டம் பெற்றவள் ஆவன்.) இவனுக்குப் பீமவர்மன் என்றொரு தம்பி இருந்தான். அவன் இவனது ஆட்சியில் வட பகுதியை ஆண்டுவந்தான் போலும் சிம்மவிஷ்ணு காலத்துப் பட்டயம் எதுவும் கிடைத்திலது. முற்கூறிய அவந்தி சுந்தரி கதையினால் இவன் கால்ம் அறிதல் முடிகிறது. ‘சிம்ம விஷ்ணு கங்க அரசானான துர்விநீதன், சாளுக்கிய விஷ்ணு வர்த்தனன் இவர் தம் காலத்தவன்’ என்று அந்நூல் கூறுகிறது. துர்விநீதன் கி.பி. 605இல் பட்டம் பெற்றவன்.[1] விஷ்ணுவர்த்தனன் கி.பி. 614இல் பட்டம் பெற்றவன்.[2] இவர்கள் அரசராக இருந்தபொழுது சிம்மவிஷ்ணுவும் அரசனாக இருந்தான் என்று மேற்சொன்ன நூல் கூறலால் சிம்மவிஷ்ணு குறைந்தது கி.பி. 615 வரையேனும் அரசானக இருந்திருத்தல் வேண்டும்.

சிம்மவிஷ்ணு சிறப்பு

இவன் மகனான முதலாம் மகேந்திரவர்மன், தான் இயற்றிய மத்தவிலாசத்தில் தன் தந்தையைச் சிறப்பித்துள்ளமை காண்க; “சிம்மவிஷ்ணு பல்லவகுலம் என்ற உலகைத் தாங்கும் குலமலை போன்றவன். அவன் நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் உடையவன்; பல நாடுகளை வென்றவன்; வீரத்தில் இந்திரனைப் போன்றவன்:செல்வத்தில் குபேரனைஒத்தவன்.அவன்அரசர் ஏறு.”[3]

போர்ச்செயல்கள்

மூன்றாம் நந்திவர்மன் காலத்திய வேலூர்ப் பாளையப் பட்டயத்தில் சிம்மவிஷ்ணுவைப் பற்றிச் சில குறிப்புகள் காணப்படுகின்றன; “இவனது புகழ் உலகெலாம் பரவியுள்ளது. இவன் காவிரி பாயப்பெற்ற செழிப்பான சோழ நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான்.”[4] இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசக்குடிப் பட்டயத்தில், “...பிறகு இப் பூவுலகில் சிங்கம்போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான். அவன் பகைவரை அழிப்பதில் ஈடுபட்டிருந்தான், களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றிகொண்டான்”[5] என்பது காணப்படுகின்றது.

சிம்மவிஷ்ணு வேறு அரசருடன் போர் செய்தமைக்கு உரிய சான்றுகள் கிடைத்தில. ஆதலின், இவன் தென்னாட்டு அரசருடன்றான் பெரும்போர் செய்து வென்று, காவிரியாறு வரையுள்ள தமிழ்நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது. இவனுக்கு முற்பட்ட நந்திவர்மன் முன்னோரும் இவருடைய முன்னோரும் காஞ்சியில் இருந்தமைக்குரிய சான்று இன்மையாலும், அவர்கள் அனைவரும் ஆந்திர நாட்டிலிருந்தே பட்டயங்களை வெளியிட்டிருத்தலாலும், இரண்டாம் குமார விஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினன் எனக் கூறலாலும், அவன் ஒருவனே காஞ்சியி லிருந்து பட்டயம் விடுத்ததாகத் தெரிவதாலும் இடைக்காலப் பல்லவர் ஆட்சியில் காஞ்சிபுரம் வாகாடகரிடமிருந்து மீட்கப்பெற்ற பின்னரும் கைமாறியதோ என்று எண்ண வேண்டுவதாக இருக்கிறது. இந்தச் சிம்ம விஷ்ணுவுக்கு முற்பட்டவர் காஞ்சியில் இருந்திலர் என்பதாலும், சிம்ம விஷ்ணு ஒருவனே சோழர் களப்பிரர் முதலிய தென்னாட்டரசரை வென்று காவிரியாறு வரை பல்லவப் பேரரசை நிறுத்தினான் என்பதனாலும், இவனது ஆட்சித் தொடக்கத்தில் சாளுக்கியப்போர் இன்மையாலும், இவன் காலத்தில் காஞ்சி களப்பிரரிடமிருந்து[6] கைப்பற்றப்பட்டது என்று நினைக்கலாம். காஞ்சியைக் கைப்பற்றாமல் இவன் காவிரிவரையுள்ள நாட்டைப் பிடித்துக் காஞ்சியைத் தலை நகராகக்கொண்டு அரசாளுதல் இயலாதன்றோ? இவன் காஞ்சியைக் கைப்பற்றினான் என்பதை இலக்கியச் சான்றும் உறுதிப்படுத்துகின்றது.[7]

“பல்லவர் மரபில் சிம்மவிஷ்ணு என்பவன் தோன்றினான்; கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப்பகைமையை அறவே நீக்கினான். அவன் தன்வீரத்தாலும்பெருந்தன்மையாலும் பகை அரசர்களுடைய அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும் தனக்கு உரிமை ஆக்கிக்கொண்டான்” (அவந்தி சுந்தரி கதா சாரம்). இக் குறிப்புக் காசக்குடிப் பட்டயச் செய்தியைப் போன்று இருத்தல் காணத்தக்கது. ‘கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப் பகைமையை என்பது கவனிக்கற்பாலது. ‘கற்றவர் கூட்டம் இருக்கும் இடத்தினின்று (காஞ்சிபுரத்தினின்று) இறுதியாகப் பகைவரை நீக்கினான்’ என்பதே இதன் பொருள். சத்தியசேனன் என்னும் அரசரிடமிருந்து இருபிறப்பாளரது கடிகாவை இரண்டாம் கந்தவர்மன் மீட்டான் என்றபோதும், இருபிறப்பாளரது கடிகா (கல்லூரி) இருந்த காஞ்சீபுரத்தை என்றே பொருள் கொள்ளப்பட்டது.[8] எனவே, இங்குக் ‘கற்றவர் கூட்டம்’ என்பது காஞ்சிமா நகரைக் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. ‘காஞ்சியைக் கைப்பற்றியதால் சிம்மவிஷ்ணு கற்றவரைப் பகைவரிடமிருந்து காப்பாற்றினான்’ என்று மேற்கூறிய வடமொழி நூல் கூறுகின்றது.[9]

கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர்ப் பட்டயத்தில் ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’[10] என்பது காணப்படுகிறது. மேலும், சிம்மவிஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் புதுக்கோட்டைச் சீமையில் உள்ள சித்தன்ன வாசலில் குகைக் கோயில் அமைத்துள்ளான். அவன் தமிழ்நாட்டின் எப்பகுதியை யாயவது பிடித்தான் என்பதற்குச் சான்றில்லை. அவன் காலத்தில் தென்னாட்டில் போரே இல்லை. ஆதலின் புதுக்கோட்டை வரையுள்ள சோழநாட்டைச் சிம்ம விஷ்ணுவே வென்று அடிப் படுத்தினவன் ஆவான்.[11]

தமிழ் வேந்தருள் மலவர் (மலையர்) என்பவர் மலாடு என்னும் நாட்டினர். மலாடு தென் ஆர்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கோவலூர் முதலிய இடங்களைக் கொண்ட நடுநாடாகும். இந்நடு நாட்டினர் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலும் சிற்றரசராக இருந்தமை தெளிவு. சிம்ம விஷ்ணுவோடு போர் செய்த தமிழ் வேந்தருள் மலாடரும் சேர்ந்தனர் என்பதில் வியப்பில்லை.

‘சிம்ம விஷ்ணு’ என்னும் பெயரைக் கொண்டே இவன் வைணவன் என்பதை நன்குணரலாம். இரண்டாம் நந்திவர்மன் காலத்திய உதயேந்திரப் பட்டயம் இவனைப் ‘பக்தி ஆராதித்தவிஷ்ணு-சிம்ம விஷ்ணு’[12] என்று குறிப்பிடுதலை நோக்க, இவன் பரம பாகவதனாக இருந்தவன் என்பது தெளிவு. இவன் சீயமங்கலத்தில் உள்ள குகைக்கோவிலை அமைத்திருக்கலாம். சிங்க உருவங்களும் மகேந்திரன் கல்வெட்டும் உடைய அக் குகைக் கோவில் சிம்ம விஷ்ணுவின் காலத்ததாக இருக்கலாம்.[13]

ஆதிவராகர் கோவில்

மகாபலிபுரத்தில் ஆதிவராகர் கோவில் இருக்கின்றது. அக் கோவிலில் இரண்டு உருவச்சிலைகள் உள்ளன. இவற்றைக் கர்னல் மக்கன்ஸி, பெர்கூசன், பர்கஸ் முதலிய அறிஞர் கண்டு தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இவை இன்னாரைக் குறிப்பன என்பதை அவர்கள் கண்டறியக் கூடவில்லை. இச் சிலைகள் 1913இல் கண்ட இராவ்பகதூர் கிருஷ்ண சாஸ்திரிகளும் முதலில் இவையாரைக் குறிப்பன என்பதை உணரவில்லை. பின்னர் 1922இல் புதைபொருள் ஆராய்ச்சியாளர் இச் சிலைகளின் மேல் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைக்கண்டு பிடித்தனர். பின்னரே, இவை சிம்ம விஷ்ணுவையும் அவன் மகனான முதலாம் மகேந்திரவர்மனையும் குறிப்பன என்பது வெளிப்பட்டது.[14] பின்னர்க் கிருஷ்ண சாஸ்திரிகள் அக் கல்வெட்டுகளை நன்கு பார்வையிட்டுத் தம் கருத்துக்களை வெளியிட்டனர். கல்வெட்டுகள் பல்லவ-கிரந்த எழுத்துக்கள் கொண்டவை. ஆதிவராகர் குகைக் கோவிலுள்ள வடபுறப் பாறையில் ‘ஸ்ரீ சிம்மவிஷ்ணு போதாதிராஜன்’ என்பது பொறிக்கப் பட்டுள்ளது. அதன் அடியில் ஓர் ஆண் உருவம் உட்கார்ந்த நிலையிலுள்ளது. அதன் நிலைமீது உயர்ந்த முடி (கீரீடம்)உள்ளது. மார்பிலும் கழுத்திலும் அணிகள் காணப்படுகின்றன. அவ்வுரு வத்திற்கு இருபுறங்களிலும் முடியணிந்த பெண்மணிகளின் உருவங்கள் நின்ற நிலையில் காணப்படுகின்றன. அவை சிம்ம விஷ்ணுவின் மனைவியரைக் குறிப்பனவாகும். அவ்வுருவங்கட்கு நேர் எதிரே தென்புறப் பாறைமீது ‘ஸ்ரீ மகேந்திர போதாதிராஜன்’ என்பது பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அடியில், முடியும் அணிகளும் அணிந்த மகேந்திரன்நின்றிருப்பதாக உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவன் வலக்கை உட்கோவிலைச் சுட்டியபடி உள்ளது. இடக்கை முதல் இராணியின் வலக்கையைப் பற்றியபடிஉள்ளது; அவனுடைய இராணிமார் ஒருவர் உருவங்களும் நின்ற கோலத்தில் காணப் படுகின்றன.

அக் குகைக் கோவிலில் சிம்ம விஷ்ணுவின் உருவம் காணப் படலால், அஃது அவனால் கட்டப்பட்டதென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். சிம்மவிஷ்ணு சிறந்த வைணவர்பக்தன் ஆதலாலும், காஞ்சியையும் சோழநாட்டையும் கைப்பற்றிய பெருவீரன் ஆதலாலும் தன்னைப் பற்றிய நினைப்பும் பக்தியின் சிறப்பும் நிலைத்திருக்க இக் குகைக்கோவிலை அமைத்தான் எனக்கூறுவதில் தவறில்லை; மேலும், அவன் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவன்; ஆதலால் தமிழ் நாட்டிற்கே புதிய குகைக் கோவிலை மாதிரியாக அமைத்து மகிழ்ந்தான் என்பது நம்பத் தக்கதே. இதனைக் கண்ட பின்னரே மகேந்திரவர்மன் பல குகைக் கோவில்களை அமைக்கத் தொடங்கினான் என்று கொள்ளுதலும் சாலப் பொருத்தமுடையதே. மேலும், மகேந்திரன் அமைத்த குகைக்கோவில் தூண்களைப் போல இக் குகைக்கோவில் தூண்கள் செம்மையுற்றன அல்ல.[15]

வாகாடகர் அசந்தாக்குகைகளில் வியத்தகு வேலைப்பாடுகளைச் செய்தனர். அவற்றைக் கண்டு அவருடன் கொள்வனைகொடுப்பனை வைத்திருந்த விஷ்ணு குண்டர் என்னும் மரபினர் கிருஷ்ணையாற்றங்கரையில் பல குகைக் கோவில்களை அமைத்தனர். அவற்றை எல்லாம் சிம்ம விஷ்ணுவும் அவன் மகன் மகேந்திரவர்மனும் பார்வையிட்டிருத்தல் கூடியதே. அந்நினைவு கொண்டே அவர் மாமல்லபுரத்திலும் பிற இடங்களிலும் குகைக் கோவில்களை அமைத்திருநத்தல் வேண்டும்.[16]

சிம்மவிஷ்ணு வைணவன் ஆதலால் இவன் உருவச்சிலை ஆதிவராகர் கோவிலில் இருத்தல் வியப்பன்று. ஆனால், முதலில் சமணனாகவும் பிறகு வைவனாகவும் மாறிய மகேந்திரவர்மன் சிலை அங்கு இருத்தலே எண்ணத்தக்கதாகும். அவன் இளவரசானக இருந்தபொழுதுதன்தந்தையுடன் வைணவக்கோவிலுக்குப்போதல் மரபாக இருந்திருக்கலாம். அவன் பட்டம் பெற்ற பிறகே சமணனாக மாறி இருக்கலாம். எனவே, இக்கோவில் சிம்மவிஷ்ணு காலத்திற்றான் அமைக்கப்பட்டது எனக் கோடல் பொருத்தமானதே.[17]

சிம்மவிஷ்ணு கலைவல்லவன்

சிம்மவிஷ்ணு அவையிற் சிறந்த புலவராக இருந்தவர் வடமொழி வல்லுநரான தாமோதரர் எனப் பெயர் கொண்ட பாரவி என்பவர். இவர் எங்ஙனம்பல்லவன் அவையை அடைந்தார் என்பதை இவர் மரபில் வந்த தண்டி என்னும் வடமொழிப் புலவர் தமது அவந்தி சுந்தரி கதையில் வரைந்துள்ளார். அது கீழ் வருமாறு:

“தென் நாட்டில் பல்லவப் பேரரசனான சிம்மவிஷ்ணு ஆண்டு கொண்டிருந்தான். அவன் புலவர்க்குப் புரவலனாக இருந்தான். ஒருநாள் புதியவன் ஒருவன் அவன் அவைக் களத்திற்கு வந்து, நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய பெருமாள் துதி ஒன்ற்ை வடமொழியிற் பாடினான். அச் செய்யுளில் இருந்த சொல்லழகும் பொருள் அழகும் அரசனை ஈர்த்தன. உடனே அவன் பாடகனை நோக்கி, ‘இதனைச் செய்தவர் யாவர்?’ என்று ஆவலோடு கேட்டான். பாடகன், ஐயனே, வடமேற்கே ஆரியநாடு என வரும் ஒரு நாடு உண்டு. அதில் அனந்தபுரம் என்பது ஒர் ஊர். அஃது ஆரிய நாட்டின் தலைமணி ஆகும். அப்பதியில் கெளசிக மரபிற் பிறந்த பிராமணர் சிலர் இருந்தனர். அவர்கள் அதனை விட்டு அசலபுரத்திற்[18] குடியேறினர். அப் பிராமணருள் ஒருவர் நாராயணசாமி என்பவர். அவர் மைந்தர் தாமோதரன் என்பவர். அவர் சிறந்த வடமொழிப் புலவராகிப் பாரவி எனப்பட்டார். அப் புலவர் (கீழைச் சாளுக்கிய) விஷ்ணுவர்த்தனுக்கு நண்பர் ஆனார். ஒருநாள் அவர் அவ்வரசனைத் தொடர்ந்து காட்டிற்குச் சென்றார். அரசன் வேட்டையாடி விலங்கிறைஞ்சி தின்றான். புலவரையும் தூண்டித் தின்னச் செய்தான். அப்பாவத்தைத் தொலைக்க அப் புலவர் புறப்பட்டுப் பல இடங்கட்கும் சென்றார். இறுதியில் (கங்க அரசனான) துர்விநீதன் அவையைஅடைந்தார். இப்பொழுது அங்கு இருந்தவருகிறார். நான் பாடிய பாடல் அப் பெரும் புலவர் பாடியதே ஆகும்’ என்றான்.”

புலவர் புரவலன்

உடனே சிம்மவிஷ்ணு ஆட்களைப் போக்கிப் பாரவியைத் தன் அவைக்கு வருமாறு பலமுறை தூண்டினான். பாரவி காஞ்சி நகரம் வந்து சேர்ந்தார். அரசன் அவருக்கு நல்ல விடுதி ஒன்றை அளித்துப் பிற வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்தான். பாரவி தம் புலமையால் அரசனை மகிழ்வித்து, ஓய்வு நேரங்களில் பாக்கள் இயற்றிக்கொண்டிருந்தார்.[19]

இவன் காலத்து அரசர்

சாளுக்கியநாட்டில் கி.பி.509இல் அரியணையேறிய இரண்டாம் புலிகேசி அரசனாக இருந்தான்; அவன் கி.பி. 642 வரை ஆண்டான். கங்க நாட்டைத் துர்விநீதன் (கி.பி. 605-650) என்பவன் ஆண்டு வந்தான். தெற்கே மாறவர்மன் அவனி சூளாமணி என்ற பாண்டியன் (கி.பி. 600-625) பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். நாசிக்கிலும் வேங்கி நாட்டிலும் விஷ்ணுவர்த்தனன் என்பவன் (கி.பி.614-635) ஆண்டு வந்தான்.


  1. Dr.V. Venkataramanayya’s article on “Durvinita and Vikaramadiytal’ (Triveni).
  2. Same Scholar’s article on “Mahendravarman and pullikects II, Miscellany of Paper’s published byGVR Pantulu’s 70th Birthday Celebration Committee.
  3. Mattavilasam (Sanskrit), P3.
  4. S.I.I. Vol.II p.510.
  5. Ibid.p.346.
  6. களப்பிரர் இவரைப்பற்றி முன்னரே கூறப்பட்டுள்ளது. இவர் தொண்டைநாட்டில் ஒரு பகுதியையும் சோழ நாட்டின் பெரும்பகுதியையும் ஆண்டு வந்தனர்.
    சோழர் - களப்பிரர் ஆட்சிக்குப்பட்டும் படாமலும் சிறிதளவு நிலப் பாகத்தை ஆண்டவர். இவர்நிலைமை கி.பி.880 வரை இங்ஙனமே இருந்தது. இவர் தலைநகரம் உறையூர்.
    மழவர் இவர்கள் மழ (மலை) நாட்டினர்; ‘மலாடர்’ என்றும் கூறப்படுவர். இவர்கள் திருக்கோவலூர் முதலிய மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர். மெய்ப்பொருள் நாயனார் மலாடர் (மழவர்) அரசர் ஆவர்.
    பாண்டியருள் கி.பி. 250-550 வரை களப்பிரர்க்கு உட்பட்டுக் கிடந்த பாண்டிய நாட்டை மீட்ட கடுங்கோன் அல்லது அவன் மகன் மாறவர்மன் அவனி சூளாமணி சிம்ம விஷ்ணுவை எதிர்த்திருக்கலாம்.
  7. 1. ‘கொங்குதேச ராசாக்கள் வரலாற்றைக் கானின், துர்விநீதன் காஞ்சி உள்ளிட்ட திராவிடத்தை வென்றான் என்பது காணப்படுகிறது” என (Swell’s List of the antiquarian Remains in the Madras Presidency’ p,177) கூறல், காண்க.

    2. “சாளுக்கிய இரணராகன், முதல் புலிகேசி இவர்கள் காலத்திற் சாளுக்கிய பல்லவர் போர்கள் நடந்தன. முதற் புலிகேசி எல்லோரையும் தான் அடக்கியதாகக் கூறிக்கொண்ட கி.பி. 560இல் பரிவேள்வி செய்தான்” என அறிஞர் (Mr. V.K. Rao’s “Ganges of Talakad’, p.38) கூறல் காண்க.

    எனவே, குமார விஷ்ணுவுக்குப் பிறகு காஞ்சிகளப்பிரர் கைப்பட்டதோ, கங்கர் கைப்பட்டதோ, சாளுக்கியர் கைப்பட்டதோ தெரியவில்லை. கி.பி. 475 முதல் 515 வரை அரசாண்டகதம்ப அரசனான இரவிவர்மன், தான்காஞ்சி அரசனை (சண்டதண்டனை) அழித்தான் என்று ஹல்சி பட்டயம் கூறலால், காஞ்சி கதம்பர் கைக்கு மாறியதோ என்பது ஐயமாக இருக்கிறது. இது நன்கு ஆராயவேண்டும் செய்தியாகும். பிற சான்றுகள்கிடைத்தாற்றான்.இஃது ஒரு முடிவுக்கு வருதல் கூடும்.
  8. R. Gopalan’s Pallavas of Kanchi, p. 13.
  9. Heras’s Studies in Pallava History, p.20.
  10. திருவொற்றியூரை அடுத்த மணல் என்னும் கிராமம் அக் காலத்தில் ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’ என்றே பெயர் பெற்றிருந்தது. 211 ணிஞூ 1912.
  11. Ibid.p.21.
  12. S.I.I. Vol., p.74.
  13. Prof. Dubrell’s “Pallava Antiquities’, vol.Ip.40
  14. Archaeological Report 1922 - 3, p.94.
  15. Heras’s “Studies in Pallava History p.75.
  16. Prof Dubreil’s “The Pallavas’, P35.
  17. Dr. S.K. Aiyangar’s “The Antiquities of Mahabalipuram, p.31
  18. அசலபுரம் நாசிக் என்பதற்கருகில் உள்ளது. கி.பி. 614இல் விஷ்ணுவர்த்தனன் அப்பகுதியை இளவரசனாக இருந்து ஆண்டான்.
  19. Dr. N. Venkataramanaayya’s article on “Mahendravarman I and pulikesin II’ M.E R. 1921, p.48.