பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/கண்ணாம்பூச்சிப் பாட்டு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
கண்ணாம்பூச்சிப் பாட்டு!

(மழலை நடை)

அங்கயற் கண்ணி வந்தாளாம்;
அப்பா துண்டைக் கண்டாளாம்!
இடுப்பு நிறையக் கொசுவம் வச்சே
எடுத்துக் கட்டிக் கொண்டாளாம்!

பட்டுப் பூச்சி, சேலை கட்டிப்
பார்த்துப் பார்த்துச் சிரிக்குதாம்!
சிட்டுக்குருவி, கொண்டை போட்டுச்
சிரித்து சிரித்து மகிழுதாம்!

எல்லோரும் வாருங்க!
இந்தப் பொண்ணைப் பாருங்க!
பல்லோரந் தெரிகின்ற
பழச்சிரிப்பைக் காணுங்க!

எங்க பொண்ணு அரசி;
எந்த அரசன் வருவான்?
சிங்கப்பூரு போயி வந்த
சிற்றரசன் வருவான்!

வரட்டும்; வரட்டும்!
வட்ட வட்டப் பொண்ணைத்
தரட்டும் தரட்டும்
தாவிப் பிடிக்கட்டும்!

கண்ணாம் கண்ணாம் பூச்சி!
காட்டு மரப் பூச்சி!
பொண்ணுக் கேத்த மாப்பிளையைப்
போய்ப் பிடிச்சுக் கூட்டிவா!