பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/பொன்னன் கதை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பொன்னன் கதை!


பொன்னன் ஒருநாள் தெருவழியே
போய்க்கொண் டிருந்தான்; அவன்முன்னே
நன்னன் வந்தான்; அவன் இவனை
நாடகம் பார்க்கக் கூப்பிட்டான்!

இருவரும் நாடகம் பார்த்தார்கள்!
இரவில் வீடு திரும்புகையில்
ஒருவன் வந்தான், "பொன்னா! உன்
உறவினர் ஒருவர் இறந்தாராம்;

செய்தியைக் கேட்டே உன்பெற்றோர்
செங்கற் பட்டு சென்றுள்ளார்;
பொய்யிலை, உன்னை என்னோடு
புறப்பட் டங்கே வரச்சொன்னார்;

எடு எடு போவோம்" என்றழைத்தான்!
இவனைத் தெரியான் அவனெனினும்
விடுவிடு என்றே நன்னனையும்
வீட்டிற் கனுப்பிப் புறப்பட்டான்!

பெற்றோர் பொன்னனைக் காணாமல்
பெரிதும் வருந்தினர்; அங்கங்கே
உற்றார் உறவினர் ஊரிலெல்லாம்
ஓடினர்; தேடினர்; பயனில்லை!

நாட்கள் மூன்று நடந்தனவே!
நன்னனும் செய்தியை அவர்க்குரைத்தான்!
ஆட்கள் பலரும் திசைக்கொருவர்
அவனைத் தேடி அலைந்தனரே!

இப்படி யிருக்கையில் ஒருநாளில்
எங்கிருந் தோஒரு மடல்வரவே
அப்பா அம்மா பிரித்தார்கள்!
அதிலே பொன்னன் வரைந்திருந்தான்!

பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf

"அப்பா என்னை உயிரோடே
அழைத்துப் போக வேண்டுமெனில்
தப்பா மல்ஆ யிரம்உருபா
தரங்கம் பாடிக் கடற்கரையில்

வரும்ஞா யிற்றுக் கிழமையிலே
வைத்திட வேண்டும்; இச்செய்தி
ஒருவரும் அறிந்திடக் கூடாதே!
அறிந்தால் உயிரும் இருக்காதே"

-என்றே எழுதி விடுத்திருந்தான்!
இதனைப் படித்த பெற்றோர்கள்,
அன்றே நகைகளை விற்றார்கள்
அந்தத் தொகையைச் சேர்த்தார்கள்!

பொன்னன் குறித்த அந்நாளில்
போனார் தந்தை தொகையோடு!
பொன்னன் வந்தான்; ஆயிரமும்
போனது போனது வீணாக!

பொன்னனைப் போலப் பிள்ளைகளும்
போவதும் எவர்பின், எங்கென்றே
முன்னறி வின்றிப் போவார்கள்!
முடிவில் தொல்லையும் வைப்பார்கள்!

வந்தவன் பின்னே சென்றதனால்
வந்தது தீங்கு! பெற்றோரும்
நொந்தனர்! ஆயிரம் உருபாவும்
நொடியில் பறந்து போனதன்றோ?

படிப்பறி விருந்தால் போதாது;
பட்டறி வோடே உலகறிவும்
படிப்பறி வோடு பயன்படுமாம்
பாடம் பொன்னன் கதையாகும்!

பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf