பாண்டியன் நெடுஞ்செழியன்/தலையாலங்கானத்துப்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
3. தலையாலங்கானத்துப் பெரும் போர்

அரசன் போருக்குப் புறப்பட்டுவிட்டான். இவ்வளவு இளம் பிராயத்தில் யார் போருக்குச் சென்றிருக்கிறார்கள்? இளமையில் அரசுகட்டில் ஏறிய அரசர்கள் உண்டு. ஆனால் இவன் இன்னும் பிள்ளைப் பருவம் தாண்டவில்லை; அதற்குள் வில்லை ஏந்திக்கொண்டான். என்ன வீரம்! என்ன வீரம்!

‘இவனுடைய அறிவையும் குலப் பெருமையையும் எப்படிப் பாராட்டுவது! இவன் முன்னோர்கள் போருக்குப் புறப்பட்டால் இதோ இந்த நகரத்தின் வாசலில் உள்ள குளிர்ந்த பொய்கையில் மூழ்குவார்கள். வேப்பந்தளிரைச் சூடிக்கொள்வார்கள். இவனும் அந்த மரபு தவறாமல் செய்கிறானே! மூதூர் வாயிலிற் பணிக் கயத்தில் மூழ்கினான். பொதுவிடத்தில் உள்ள வேம்பின் தளிரை அணிந்தான். மத்த யானை புறப்பட்டது போலப் புறப்பட்டுவிட்டானே! இவனை எதிர்க்க வந்த பகைவர்கள் ஒருவரா, இருவரா? பலர் அல்லவா? அவர்கள் அனைவரையும் இன்றைப் போதுக்குள் இவன் அழித்துவிட முடியுமா? சிலர் எஞ்சுவார்களோ!’ என்று புலவர்கள் பாராட்டினார்கள். இடைக்குன்றூர் கிழார் என்னும் புலவர் இந்த நிகழ்ச்சிகளை அப்படியே கவியில் வைத்துப் பாடினார்.

மூதூர் வாயிற் பனிக்கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ? பகல் தவச் சிறிதே![1]

“போரைப்பற்றி எவ்வளவோ செய்திகளை அறிந்திருக்கிறோம். பல போர்களைப்பற்றிக் கேட்டிருக்கிறோம். ஆனால் இதற்கு முன் இத்தகையதொரு போரைப்பற்றிக் கேட்டதே இல்லை” என்றார் இடைக் குன்றூர் கிழார்.

அயலில் நின்ற புலவர், “எதை எண்ணிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஓர் அரசனை மற்றோர் அரசன் தாக்குவது உண்டு. ஒருவனை ஒருவன் எதிர்த்து அழிதலும் உண்டு. அது புதுமையன்று; உலகத்தில் எங்கும் நடக்கும் இயற்கை. ஆனால் இதற்கு முன் இந்த மாதிரி நடந்ததைக் கேட்டதே இல்லை.”

“இதுவும் சண்டைதானே?”

“இதில் ஏழு பேரோடு இளம் பருவமுடைய ஒரு மன்னன் தனியே நின்று போரிடுவதென்பது வியப்பிலும் வியப்பு! இது முன்பு கண்டறியாத போர்” என்று தம் வியப்புக்குரிய காரணத்தை வெளியிட்டார் இடைக்குன்றூர் கிழார்.

“அந்த ஏழு பேரையும் தேடி இவனா போனான்? மண்ணாசை இவனுக்கு இல்லை. பாண்டி நாட்டைத் தக்கபடி ஆண்டுவந்தால் போதுமே. அவர்களுக்குத்தான் மண்ணாசை; பாண்டி நாட்டைப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று ஆசை. தலை வாசலில் வந்து படையுடன் நிற்கும்பொழுது அரண்மனையில் தூங்கிக் கொண்டிருக்க முடியுமா?”

“அவர்கள் நாட்டின் எல்லையில் வந்து அக்கிரமமாகப் புகுந்தது உண்மைதான். அவர்களுக்கு இவனுடைய பெருமை தெரியவில்லை; இவனுடைய தலைமையும் தெரியவில்லை. ஆசை ஒன்றே உந்த அறிவு மங்க வந்துவிட்டார்கள். அப்படி வந்தவர்கள் எளியராகத் தோற்றவில்லை. முன்பே பல போரில் ஈடுபட்டுக் கழல் கட்டிக்கொண்டவர்கள். அவர்களை நான் ஒருவனே சென்று அடுகிறேன் என்று புறப்பட்டானே, நம் அரசன்; அது எவ்வளவு ஆச்சரியமான செயல்!”

“உண்மைதான். இவனும் அவர்களைப் போல வேறு யாரையேனும் துணைவர்களாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. தன் பலத்தில் இவன் அத்துணை நம்பிக்கை வைத்திருக்கிறான்.”

“அது மாத்திரம் அன்று. முன்பு சேரன் எதிர்த்தபோது படைத் தலைவர்களை விட்டு அடக்கினது போலச் செய்திருக்கலாம். அப்படியும் செய்ய வில்லை. போர்ப்பறை காதில் விழுந்ததோ இல்லையோ, தன் குலத்துக்குரிய வேப்பந் தளிரைச் சூடிக்கொண்டான், நாட்டை முற்றுகையிட்டிருக்கும் பகைவரோடு பொரப் புகுவார் அணிகிற மரபுப்படி உழிஞைக் கொடியையும் அணிந்து கொண்டான். வீர முரசு ஆர்ப்ப, அந்த ஏழு பேரையும் அடக்குவேன் என்று புறப்பட்டு விட்டானே! இந்தப் பருவத்தில் இத்துணைத் துணிவு உண்டானது ஆச்சரியப்படக் கூடியதல்லவா?”

“ஆம், ஆம்” என்று இப்போது தலையசைத்தார் மற்றொரு புலவர்.

பாண்டி நாட்டின் வடவெல்லையிலே போர் மூண்டது. அங்கேயே பகைவர்களை எதிர்த்து அழிப்பது என்று பாண்டிய மன்னன் புறப்பட்டுவிட்டான்.

பகைவர் ஏழு பேர்கள்; பகைப் படைகளும் ஏழு. ஆயினும் ஏழு வகையில் செயலாற்றலாமா? எருமையூரன் படைக்கும் சோழநாட்டுப் படைக்கும் பேச்சிலும் பழக்க வழக்கங்களிலும் எவ்வளவோ வேறுபாடுகள். முன்பு கூடியறியாதவர்கள் அவர்கள். அத்தகையவர்கள் எப்படி ஒத்துப் போர் செய்ய முடியும்? சோழ நாட்டு வேளிர்களில் இன்னும் சிலரைத் துணைக்கு அழைத்திருக்கலாம்; நெடுஞ் சேய்மையிலுள்ள இருங்கோவேள்மானிடம் போயிருக்க வேண்டாம்; எருமையூரனை நாடியிருக்க வேண்டாம். எல்லாம் பட்ட பிறகு தானே தெரிகின்றன? ஒவ்வோர் ஊர்ப் படையும் ஒவ்வொரு வகையில் போரிடுவதாக இருந்தால் போரில் எப்படி ஒருமித்துத் தாக்க இயலும்?

இந்தக் குறைபாடும் பாண்டியனது படைக்குப் பலமாக முடிந்தது. இயற்கையாகவே பெருவிறல் படைத்த படைத்தலைவர்கள் கட்டுத்திட்டமாகப் படை வீரர்களை நடத்திச் சென்றனர். பாண்டி நாட்டுப் படையின் ஒழுங்கு முறைக்கு முன் எந்த நாட்டுப் படையின் ஒழுங்கு முறையும் நில்லாது. தன் படைப் பலமும் பகைவருடைய வலியின்மையும் பாண்டியனுக்குத் துணையாயின.

பகை மன்னர்கள் பாண்டியன் இளம் பருவத்தினன் என்பதை எண்ணினார்களே யன்றிப் படையை இயக்கிய தலைவர்கள் பல போரில் வெற்றி பெற்றுக் கைதேர்ந்தவர்கள் என்பதை எண்ணவில்லை.

பாண்டி நாட்டின் எல்லையில் சிறிது நேரந்தான் போர் நடைபெற்றது. பகைப் படை மெல்ல மெல்லப் பின்னுக்கு நகர்ந்தது. சோழ நாட்டின் எல்லைக்குள் போர் நடக்கத் தொடங்கியது. மெல்ல மெல்ல நகர்ந்தது பகைப்படை; பின்பு வேகமாகவும் சென்றது. கடைசியில் தலையாலங்கானம்[2] என்னும் இடத்தில் நின்று போர் செய்தது. அதுவரையில் வராமல் தாமதமான பிற படைகளும் வந்து சேர்ந்தன. தன்னுடைய எல்லைக்குள்ளே பாண்டியன் படை வந்துவிட்டமையால் எளிதில் சுற்றி வளைத்துத் தொலைத்துவிடலாம் என்று நம்பினான் சோழன். மற்றவர்களுக்கும் சொல்லி ஊக்கினான்.

போர் கடுமையாக மூண்டது. இரு பெரு வேந்தரும் ஐம்பெரு வேளிரும் தம் தம் படைக்குத் தலைவராக நின்று முடுக்கினர். பாண்டி நாட்டுப் படைக்கு நெடுஞ்செழியனே தலைமை வகித்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு படைவீரர் அத்தனை பேரும் ஊக்கமுற்றனர். ‘வீட்டில் இனிதாகப் பொழுது போக்கவேண்டிய இளம் பருவத்தினனாகிய இவனே நேரில் போர்க்களத்தில் வந்து அஞ்சாமல் நின்று போர் செய்யும்போது, இவனுக்காக உயிரையும் வழங்கி வெற்றி வாங்கித் தரவேண்டியது நம் கடமை’ என்ற உணர்ச்சி அவர்களுக்கு மேலோங்கி நின்றது.

முதல் போரில் சோழனது படை கை விஞ்சியது போலத் தோன்றியது. ஆயினும் தொடர்ந்து தாக்குவதற்கு அப்படைக்குத் துணைப்படை உதவி செய்யவில்லை. இருப்பினும் வெற்றி தோல்வி யார் பங்கில் என்று சொல்ல முடியாத நிலையே நீடித்தது. சோழன் இரண்டு காரியங்களைச் செய்துவந்தான். தன் படைக்குத் தலைமை பூண்டு போர் செய்ததோடு மற்ற நண்பர்களையும் அவ்வப்போது ஊக்கிவந்தான். அந்தப் போரில் அவர்களுக்குத் தன்னளவு ஊற்றம் இல்லையென்ற எண்ணம் அவன் உள்ளத்தினூடே இருப்பதை இந்தச் செயலால் அவன் வெளிப்படுத்திக் கொண்டான். வேளிர் படைகள் பாண்டியன் படையை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இழந்தன.

சமயம் பார்த்து நெடுஞ்செழியன் சிங்கவேறு போல் பாய்ந்தான். இது கன்னிப் போராக இருப்பினும் அவனுடைய போர்த் திறமை கணத்துக்குக் கணம் நண்பர்களுக்கு வியப்பையும் பகைவர்களுக்கு அச்சத்தையும் உண்டாக்கியது. மெல்ல மெல்லப் பாண்டிப்படை முன்னேறியது. வேளிர் படையிற் சிலர் படையை விட்டே ஓடிப்போயினர். அது கண்ட மற்றவர்களுக்கும் சோர்வு உண்டாயிற்று.

எருமையூரன் படைவீரர்களுக்குத்தான் முதல் முதலில் சோர்வு உண்டாயிற்று. “நம்முடைய ஊர் எங்கே? இந்த இடம் எங்கே? பாண்டியனுக்கும் நமக்கும் என்ன பகை? சோழனுக்கும் நமக்கும் என்ன உறவு? நம்முடைய தலைவர் பைத்தியக்காரத் தனமாக இந்தச் சோழன் பேச்சைக் கேட்டு ஏமாந்து போய்விட்டார். பாண்டியன் தோல்வியுற்றாலும் அவன் நாட்டை நம்மால் ஆள முடியுமா? சோழனுக்குத்தானே அது காணியாகும்? பல நாடுகள் இடையிட்டு நாம் வாழ்கிறோம். சில பொருளை அள்ளிக் கொண்டு போகலாம். அவை எத்தனை நாளைக்கு உதவும்?’-இப்படி அவர்களுக்குள் ஊக்கக் குறைவு தலை நீட்டியது. இந்த எண்ணம் புலிகடிமால் படையில் உள்ளவர்களுக்கும் அடுத்தபடி தோன்றியது. தமக்கு நன்மை ஏதும் இல்லை என்ற எண்ணம் உண்டாகி விட்டால் பிறகு போரில் எப்படி ஊக்கம் தொடர்ந்து இருக்க முடியும்?

அங்கங்கே பகைப் படைகளில் உள்ள வீரர்கள் கை வாங்கினர். சோழன் மட்டும் துணிவோடு நின்றான். சேரனுக்குக்கூட ஊக்கம் குறைந்துவிட்டது. சோழப் பெரும்படையே நெடுநேரம் பாண்டியன் படையின் முன் நின்று பொருதது. கடைசியில் அதுவும் பின் வாங்கியது.

பாண்டிப் படையின் ஆற்றலும் ஒற்றுமையும், நெடுஞ்செழியனது வீரமும் அன்பும் வெற்றியை உண்டாக்கின. அச்செழியன் கன்னிப் போரில் வெற்றி மகளைக் கைப்பற்றினான். எங்கே பார்த்தாலும் வெற்றி ஆரவாரந்தான். சோழன் அடிபணிந்தான். சேரன் ஓடிப்போனான். மற்ற வேளிரும் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டார்கள். தலையாலங்கானத்துப் பெரும்போர் என்று அப்போரை வழங்குவர். வென்றவரும் அதை மறக்காமல் பாராட்டினார்கள்; தோற்றவர்களும் மறக்கவில்லை.

நெடுஞ்செழியன், சோழனும் பிறரும் பணிந்து அளித்த பொருள்களுடனும், அங்கங்கே வாரிக்கொண்ட பண்டங்களுடனும் மதுரைக்கு வந்து வெற்றி விழாக் கொண்டாடினான். புலவர்கள் அவன் புகழைப் பாடினார்கள். அவன் அவர்களுக்குத் தான் பெற்ற பொருள்களை வீசினான். பாணர்களும், பிற கலைஞர்களும் பலவகைப் பரிசில்களைப் பெற்றனர். போர் செய்த வீரர்களுக்குப் பல பண்டங்களை மன்னன் வழங்கினான். படைத் தலைவர்களுக்கு ஏனாதி, நம்பி என்ற சிறப்புப் பட்டங்களை வழங்கினான். அமைச்சர்களுக்குக் காவிதி என்னும் பட்டத்தை அளித்தான்.

போர் நிகழ்ந்தது சில நாட்களே யானாலும் அதனால் உண்டான மகிழ்ச்சி யாரவாரம் பல மாதங்கள் இருந்தது. புலவர்கள் கவி பாடி அந்த வெற்றியை மக்கள் மறவாதபடி செய்தார்கள்.

நெடுஞ்செழியனைப் புலவர்கள் பாராட்டும் போதெல்லாம் அவன் தன் படைத் தலைவர்களையும் வீரர்களையும் புகழ்ந்தான். தான் ஒன்றும் செய்யாதவனைப் போல இருந்தான். இந்த உயர்ந்த பண்பை உணர்ந்து அதையும் பாராட்டினார்கள் புலவர்கள்.

“போர் செய்யும் பருவம் இன்னும் வரவில்லை. நேற்று வரைக்கும் கிண்கிணி அணிந்திருந்த கால் அது. இப்போது அதில் கழலை அணிந்துகொண்டான். இப்போதுதான் குடுமி வைத்தார்கள். அதற்குள் வேப்பந் தளிரையும் உழிஞையையும் அணிந்துகொண்டான். கையில் காப்பு அணிந்து விளையாடினவன் அதைக் கழற்றிவிட்டு வில்லை எடுத்துக்கொண்டான். தேரில் சிங்கக் குட்டிபோல நின்றான். ‘இவன் யார்! விளையாடிக்கொண்டிருந்த அவனா!’ என்று நாங்கள் எங்கள் கண்களையே நம்பவில்லை. அவன் வாழட்டும், அவன் கண்ணி வாழட்டும் என்று போற்றினோம். எங்கள் கண்ணேறு படக்கூடாதல்லவா? இன்னும் குழந்தைப் பருவத்துக்குரிய ஐம்படைத் தாலியைக் கழற்றவில்லை. பாலை விட்டுவிட்டுச் சோறே உண்ணும் பழக்கமும் வரவில்லை. அதற்குள் படையெடுத்து வந்த பகைஞரை எதிர்க்கப் புறப்பட்டுவிட்டான். அவர்களுடைய படைப் பெருமையைக் கண்டு வியக்கவும் இல்லை; அதை அலட்சியம் செய்யவும் இல்லை. அவரைத் தக்கபடி தாக்கி எலியைப் பொறியிலே அகப்படுத்துவதுபோலச் சுற்றிக்கொண்டான். வெற்றியாரவாரம் வானத்தில் எதிரொலி செய்யுமாறு அவர்களை மடக்கினான்; நிலத்தைக் கவ்வும்படி செய்தான். அதைக் கண்டு நாடே அதிசயத்தில் மூழ்கிக் கிடக்கிறது. அவனோ இதற்காக அளவற்ற மகிழ்ச்சியடையவும் இல்லை; தன் பெருமையைச் சொல்லிக்கொள்ளவும் இல்லை. அவன் வீரத்தைச் சொல்வதா? உள்ளத் திண்மையைச் சொல்வதா? பண்பின் சிறப்பைச் சொல்வதா?”[3]

இவ்வாறு பாடினார் இடைக்குன்றூர் கிழார். ஒரு பாட்டோடு நின்றாரா? மேலும் மேலும் பாடினார்.

“அந்தப் பைத்தியக்காரர்களுடைய அறிவை என்னவென்று சொல்வது! புலி புறப்பட்டால் அதன் முன்பு மற்ற விலங்குகள் எம்மாத்திரம்? அது சோம்பல் முரித்துக்கொண்டு பாயும்போதல்லவா அதன் பெருமை தெரிகிறது? புலியின் ஆற்றலைத் தெரிந்து கொள்ளாதவர்கள் அவர்கள். சோழன் புலிக் கொடியைக் கையிலே பிடித்திருக்கிறானே அன்றி, அதன் தன்மையைச் சிறிதும் எண்ணினான் இல்லை. மற்றவர்களும் இவன் வீரத்தை மதியாமல் தாங்களே பெரியவர்கள் என்று புறப்பட்டார்கள். ‘இவன் சிறு பிள்ளையாண்டான்; இவன் நாடு கிடைத்தால் நமக்குப் பெரிய கொள்ளை கிடைக்கும்’ என்று எண்ணி வந்தார்கள். அவர்களை இந்த நாட்டிலே வைத்து நசுக்கியிருக்கலாம். இவன் அப்படிச் செய்யவில்லை. பகைவர் நாட்டிற்கே சென்று ஊர்ப் பெண்கள் அவருடைய தோல்வி கண்டு நானும்படி அங்கேயே அட்டான். என்னே இவன் வீரம்!”[4] என்று பா அலங்கல் சூட்டினார்.

மாங்குடி மருதனார் பாடினார். நக்கீரர் பாடினார். இன்னும் பல புலவர்கள் தலையாலங்கானத்துப் போரையும், அதில் பாண்டியனுக்குக் கிடைத்த வெற்றியையும் பல பல வகையிலே புனைந்து பாடி இன்புற்றார்கள். அந்தப் பாடல்கள் நாட்டு மக்களுக்குத் தமிழ் இன்பத்தையும், மன்னனது புகழையும் ஒருங்கே வெளிப்படுத்தின. அதுமுதல் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனானான். புலவரும் பாண்டி நாட்டு மக்களும் மாத்திரமா அப்படிச் சொன்னார்கள்? அந்தப் போர்க்களத்தில் தோல்வியுற்றவர்களின் நாட்டிலும் அவனுடைய பெயர் இந்தச் சிறப்புடனே வழங்கலாயிற்று.


  1. தன் பழைய நகரத்கின் வாயிலில் உள்ள குளிர்ச்சியையுடைய குளத்தில் நீராடிப் பொதுவிடத்தில் வளர்ந்துள்ள வேம்பின் ஒள்ளிய தளிரை அணிந்து, தெளிவான பறை முன்னாலே, போதலே உடைய ஆண் யானையைப்போல மிடுக்குடன் நடந்து வெவ்விய போரைச் செய்யும் பாண்டிய மன்னனும் வந்தான்; அவனுக்கு முன் எதிர்ப்பட்ட புதிய வீரரோ பலர்; பகற்பொழுது, மிகச் சிறிது. இவர்கள் அழியாமல் எஞ்சுவார்களோ!
  2. குடவாயிலுக்கு அருகில் தலையாலங்காடு என்ற பெயரோடு விளங்கும் சிவத்தலமே இது.
  3. புறநானூறு.77
  4. புறநானூறு.98.