உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டிய மன்னர்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




ஶ்ரீ

பாண்டிய மன்னர்

பொள்ளாச்சி

முனிசிபல் உயர்தர கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர்

‘வித்துவான்’

நா. கனகராஜையர்

இயற்றியது.

பிரசுர கர்த்தர் :

இ. மா. கோபால கிருஷ்ணக் கோன்,

புத்தக வர்த்தகர், மதுரை.

பதிப்புரிமை]  1930  [விலை அணா, 10.


ஶ்ரீ:

முகவுரை


மிழ் நாட்டிலே முன்னாளில் இறைமை பூண்டிருந்த முடிமன்னர்மூவகையார். அவருட் பண்டையர் என்ற பெயர்க்குரிமை பெற்றவர் பாண்டியரே. பாண்டியருள் இந்நாளில் யாம் பெயரளவால் அறியத்தக்கவர் பலருளர். சங்க நூல்கள் உலகிலே வளருமாறு தமிழ்த் திருப்பணி புரிந்து புகழ் படைத்த சங்க காலத்துப் பாண்டியருட் சிலர் வரலாறேனும் தெளிவுற விளங்குமாறில்லை. இந்நிலைக்குக் காரணம் பண்டை வரலாறுகள் என வழங்கு வனவற்றுட் பெரும்பாலன இயற்கை நெறிக்கு மாறாகவுள்ள அநேக செய்திகளைக் கொண்டிருப்பதும், அறிஞருள் எவரும் உண்மை வரலாறுகளை ஒரு கோவைப் படத் தொகுத்து எழுதி உதவாமையுமேயாம். எட்டுத் தொகை நூல்கள் எல்லாம் இக்காலத்தில் அச்சுருவம் பெற்று வெளிவந் துலவுகின்றன. இத்திருப்பணி புரிந்த பெரியார்க்குத் தமிழ் மக்கள் நன்றி என்றும் உரியதே. பத்துப் பாட்டும் பதினெண்கீழ்க் கணக்கில் ஒன்றிரண் டொழிந்தனவும் நல்ல ஆராய்ச்சியுரைகளோடு வெளி வந்துள. இவற்றை யெல்லாம் ஒரு சேர வைத்து ஆராய்வதோடு, சாஸ்னங்கள் என வழங்கும் பண்டையோர் எழுத்துக்களையும் பிற ஆதரவுகளையுங் கொண்டு ஆராய்வதால், நம் பண்டைய மன்னருட் சிலர் வரலாறேனும் ஒருவாறு துணியப்படலாம்.

பாண்டியர் வரலாறுகளைச் சமீபகாலத்தில் ஆங்கில மொழியில் எழுதியுபகரித்த ஸ்ரீமான். நீலகண்ட சாஸ் திரியார்க்கும், தமிழ்மொழியில் சுருக்கம் சுருக்கமாகவேனும் வரைந்து தவிய அம்பா சமுத்திரம் தமிழ்ப்புலவர் அரிகர பாரதியார்க்கும், தமிழ் நாட்டுச்சரித்திரம் அறியும் ஆவலுடையோர் கடமைப்பட் டிருக்கின்றனர். இவ்வாறாகிய பல வகை உதவிகளைக் கொண்டு சங்க காலப் பாண்டியருள் ஓர் ஐவர் வரலாறுகளை விளக்கியுரைக்க இந்நூல் எழுந்தது. இந்நூலின் முதற் பகுதியில் மூவர் பாண்டியரைப் பற்றியும், இரண்டாம் பகுதியில் இருவர் பாண்டியரைப்பற்றியும் கூறப்படும். சங்கச் செய்யுட்களின் ஆதரவைக்கொண்டு அறியலாகும் வரலாறு களை இடையிடையே பொருத்தமான முறையில் அக் கால மக்கள் மனப்போக்குக்கும் வாழ்வின் நிலைக்கும் ஏற்ப விவரித்து, முன்னைய வரலாறுகளால் அறியலாகாத சில பாத்திரங்களையும் இடையிடைப் பெய்து, பழமையிற் புதுமை சில கலந்திருப்பினும் பழமைக்கு மாறுபடா வண்ணம் இயன்றவளவு அமைத்து, இந்நூற்பகுதிகள் எழுதப்பட்டுள. ‘இவ்வாறு எழுதப்படுவது உண்மை வரலாறு ஆகுமோ?’ என்ற கேள்வி எழலாம். உண்மை வரலாற்றின் சில பகுதிகளை நன்கு விளக்க உதவ வேண்டி அயற்பொருள்கள் இடையிடைப் பெய்யப் பட்டுள்ளனவே யொழிய, வேறு எவ்வகையிலும் சரித்திரப் போக்கினை மாற்றவோ மறைக்கவோ செய்யாமையாலும், பள்ளிக்கூட மாணாக்கர் உள்ளத்தினைக் கவர்ந்து அவர்கட்குப் பாண்டியர் ஐவர் வரலாற்றினை விளக்கும் அரும்பணி பூண்பதாலும், இஃது உண்மை வரலாற்றோடு பெரும்பாலும் ஒத்ததே. இவ்வைவரை வரிசைப்படுத்தியது கால வாராய்ச்சி செய்து உண்மை தெளிந்த மனவுறுதியினா லன்று; சங்க நூல்களிற் காணப்படும் சிற்சில வரலாறுகளின் உதவியாலேயேயாம். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சியில், முற்காலத்து அரசன் எனவும் நல்லோர் சேர்க்கையாற் பேரின்பம் பெற்றான் எனவும் புகழப்பட்டுளான். நிலந்தருதிருவின் நெடியோன் என்ற பெயர் அச்செய்யுளில் அதனையடுத்து வந்துள்ளது. தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் பாடிய பாயிரத்தில் வரும் நிலந்தருதிருவிற் பாண்டியன் என்ற பெயரும் முதுகுடுமியை நெட்டிமையார் பாடிய செய்யுளில் வரும் முந்நீர் விழவின் நொடியோன் என்ற பெயரும் அதனோடு பொருத்தி ஆராயத் தக்கன. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடும் பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ளத் தென்றிசை யாண்ட தென்னவனும் அடியிற்றன்னள வரசர்க் குணர்த்தியவனும் இந்திரன் இட்டமாலை பூண்டோனும் மேகத்தைச் சிறை செய்தவனும் ஆகிய ஒரு பாண்டியன் முந்நீர் விழாவின் நெடியோன் என்று முன்னே கூறப்பட்டவனா, அவனின் வேறா என்று ஆராய்வதும் அவசியமே. திருவிளையாடற் புராணத்தால் அறியப்படும் உக்கிர குமார பாண்டியன் இச்செயல்கள் செய்திருப்பதாய் அப்புராணத்தின் உதவியால் விளங்கு மாகையால், இவ்வளவு பெருமையும் படைத்தவன் உக்கிரப் பெருவழுதியாய் இருக்கலாமோ என்று சிலர் கூறுகின்றனர்.

அகநானூறு தொகுப்பித்தோன் உக்கிரப் பெருவழுதி யென்பது அந்நூல் வரலாற்றால் விளங்குகிறது. இவ்வுக்கிரப் பெருவழுதிக்கு நண்பனாயிருந்த சோழன் இராய சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பான், பின்னாளிலே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் வென்று சிறைப்படுத்தப்பட்ட கோச் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை என்ற சேரனால் போர் புரிந்து வெல்லப்பட்டிருக்கிறான். உக்கிரப் பெருவழுதியால் தொகுப்பிக்கப் பெற்ற அகநானூற்றில் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் வரலாறு தெரிவிக்கும் செய்யுட்கள் ஒன்பது உண்டு. உக்கிரப் பெருவழுதி காலத்தில் அரங்கேற்றப் பெற்ற திருக்குறளின் செய்யுட்கள் ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் வரலாற்றை விளக்கிய இளங்கோவடிகளாலும் மணிமேகலை யாசிரியர் சீத்தலைச் சாத்தனாராலும் ஆளப்பட்டுள்ளன. இவற்றால் உக்கிரப் பெருவழுதியென்பான் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப் பிற்காலத்தவனா, ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு முற்காலத்தவனா என்பதும் விளங்கவில்லை. இறையனார் அகப்பொருள் உரை கேட்டவன் உக்கிரப் பெருவழுதியேயோ, வேறு பாண்டியனோ என்பதும் விளங்கவில்லை. நக்கீரர், புறநானூற்றிலே இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடியிருக்கிறார்; இறையனார் அகப் பொருளுக்குப் பொருள் உரைத்திருக்கிறார். உருத்திர சன்மன் அந்நாளில் ஐயாட்டைப் பிராயத்தானாய் இருந்தான் என்பது அவ்வுரையிற் காணும் செய்தியாம். அவனே அகநானூறு தொகுத்தான். இந்நக்கீரரே நெடுநல்வாடை பாடித் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் புகழ்ந்தவர். கூல வாணிகன் சாத்தனார் மணிமேகலை பாடிய காலத்திருந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைத் தவிரப் பாண்டியன் சித்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறனையும் பார்த்துப்புகழ்ந்தவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் சிறைப்பட்ட கோச் செரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை கபிலருக்கு நண்பனாவன். அவர் பதிற்றுப் பத்தில் ஏழாம் பத்தைச் சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதன் மீது பாடினர். அவன் முன்னவனுக்கு என்ன முறையானோ! தலையாலங்கானத்துப் போரில் இறந்தசேரல் இவ்விருவர்க்கும் என்ன முறையானோ!

இவ்வாறு பல அரசர் பெயரும் முன்பின் அறியலாகா வண்ணம் பிணைந்து கிடக்கும் செய்யுட்களிலிருந்து உண்மை வரலாற்றை ஊகித்துணர்வது மிகவும் சிரம சாத்தியமே. உக்கிரப் பெருவழுதியும் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் இரு வேறு அரசர் அல்லர், ஒருவனே என்று துணிந்தாரும் உளர். சங்க நூற் குழப்பத்துக் கிடையில் அவர் துணிவுக்குக் கிடைத்த ஆதரவு என்னவோ என்பது அறியலாவதாயில்லை.

இந்நிலையில் இவ்வைவர் பாண்டியர் வரலாறுகளை அவ்வவரைப் புகழ்ந்து புலவர் பாடிய செய்யுட்களில் இருந்து தொகுத்து ஒன்றோடொன்று கலவா வண்ணம் எடுத்து எழுதுவது எளிதோ, பெருமுயற்சியால் இயல்வதோ என்பதை இச்செய்யுட்களை ஆராய்வதே பொழுது போக்காக உடைய அறிஞர் அறிவர். உண்மை வரலாற்றோடு வேறு சிலவற்றைக் கலந்து வைத்தது தொடர்ப்பட்ட சரித்திரமாக இவை தோன்றுவதற்கே யன்றி, வேறு கருத்தானன்று.

தமிழ்ப் பயிற்சி பெருக வேண்டும், பண்டை நூல்களில் உள்ளவற்றை ஆராயும் அறிவு வளர வேண்டும் என்று எங்கும் முழக்கமாய் இருக்கும் இந்நாளில், பாண்டியர் வரலாற்றை உரைக்க வெழுந்த இச்சிறு நூல் ஆங்கில கலாசாலை மாணவத் தொகுதியினர்க்கும் பிறர்க்கும் சிறிதளவேனும் அம்முயற்சியில் ஊக்கம் பிறப்பிக்குமாயின், அதுவே இதனை யெழுதியதாற் பெற்ற பெரும்பயனாக நினைக்கப்படும்.

தமிழ்த் தெய்வம் துணை நிற்க.

பொள்ளாச்சி, நா. கனகராஜையர்,

30-5-'30. தமிழ்ப் பண்டிதர்.

உள்ளுறை

பொருள்

பக்கம்

1
53
106

உரிமையுரை


ழுதியரா மோரைவர் வள்ளன்மை
போற்ற எழுதியவிந் எலுரிமை யேற்கத் - தொழுதெனது
தாயாம் மதுரைத் தமிழ்ச்சங்கத் தெய்வத்தை
வாயாற் புகழ்வன் மகிழ்ந்து.

க்கள் மழலைமொழி மாநிலத்துத் தாயர்க்கு
மிக்க இனிமையுற மேவுதலால்-மக்கள்
இனத்துட் சிறியேன் எனது மொழி யெந்தாய்
மனத்துள் அடைப்பள் மகிழ்ந்து.

பாண்டியர் ஓரைவர் பண்டைவர லாறுசொல
வேண்டிய இந்நூல் மிகுபுலமைப்-பாண்டிய
பாண்டித் துரைவளர்த்த பைந்தமிழின் சங்கத்தை
வேண்டிப் புகுதும் விழைந்து.

நா. கனகராஜ அய்யர்

பிழை திருத்தம்

பக்கம் வரி பிழை திருத்தம்
34 3 கற்பகம் கற்பம்
37 6 பிரம்மம் பிரம்மம்.
42 16 தழிழ் தமிழ்
47 14 வாழுக வாடுக
50 19 தாம் தாம்.
86 3 அறைவுரை அறவுரை
88 1 நமிழ் தமிழ்
96 23 காமக காமர்
102 14 அலயட்சியம் அலட்சியம்
104 15 மந்திர மந்திரச்
114 3 உமது எமது
118 4 அரியே அறியே
121 21 நூற்சொல் நூலிற்சொல்
144 22 குச். குச்
  • பிழைகளை முன்னரே திருத்திக்கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாண்டிய_மன்னர்&oldid=1872740" இலிருந்து மீள்விக்கப்பட்டது