உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

பாரதிக்குப் பின் தமிழ்
உரைநடை

வல்லிக்கண்ணன்

மணிவாசகர் நூலகம்
சிதம்பரம்

முதல் பதிப்பு மார்ச்—1981
உரிமை ஆசிரியருக்கு



பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன் எம். ஏ.



விலை ரூ. 11.00



எங்கள் வெளியீடுகள் கிடைக்குமிடம் :—

மணிவாசகர் நூலகம்
39, லிங்கிச் செட்டித் தெரு, சென்னை—1
258, மேலமாசி வீதி, மதுரை—1


அச்சிட்டோர்:

நாவல் ஆர்ட் பீரிண்டர்ஸ்
சென்னை—600 014—தொலைபேசி—82731

ச. மெய்யப்பன், எம்.ஏ;
தமிழ் விரிவுரையாளர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
பதிப்புரை


20 ஆண்டுகளாக நல்ல நூல்களைப் பதிப்பித்து வளர்ந்து வருகிறது மணிவாசகர் நூலகம். துறைதொறும் புதுவகை நூல்களை வெளியிட்டு வருகிறது. அண்மைக் காலத்தில் தமிழுக்குப் புதுவகை அணிகளைப் படைக்கிறது. திரு பி.எஸ். ராமையா அவர்களின் ‘மணிக்கொடி காலம்’ என்ற இலக்கிய வரலாற்றுத் திறனாய்வு நூலை வெளியிட்டது. அந்நூல் பலரது பாராட்டையும், உயரிய விற்பனை வாய்ப்பையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து திரு. வல்லிக்கண்ணன் அவர்களின் ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை’ என்ற ஆய்வு நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறது. இரண்டு நூல்களும் தீபம் இதழில் வெளிவந்த போது, பல்லாயிரக் கணக்கான வாசகர்களால் படிக்கப் பெற்றன. அவற்றிற்குப் புத்தக வடிவமைத்து இன்னும் பலருக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் அழகிய நூல்களாக வெளியிட்டுள்ளோம். இன்றியமையாத பயனுள்ள நூல்களே மட்டுமே வெளியிடுகிற நிறுவனமாக எங்கள் நிறுவனம் அறிஞர்களால் மதிக்கப் பெறுகிறது.

தமிழ் உரைநடை பற்றிச் சில நூல்கள் வெளிவந்துள்ளன. செல்வகேசவராயரின் தமிழ் வசனம், திரு. மு. அருணாசலம் அவர்கள் எழுதிய பிரச்சனைக்குரிய ‘இன்றைய தமிழ் வசனம்’ என்பன குறிப்பிடத்தக்கன. ஈழத்து அறிஞர் செல்வநாயகம் அவர்கள் எழுதிய தமிழ் உரைநடை வரலாறு குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புமிக்கது.

உரைநடை வளர்ச்சி பரிணாம முறைப்படி நன்கு ஆராயப் பெறவில்லை. இப்பொழுது ஆய்வுக் கூறுகள் உள்ள நல்ல நூல்கள் வரத் தொடங்கியுள்ளன. அவ்வகையில் குறிப்பிடத்தக்கநூல் ‘பாரதிக்குப் பின்தமிழ்உரைநடை’

வளரும் வசன நடையின் பல்வேறு அம்சங்களை இந்நூல் நன்கு ஆய்கிறது. சமன் செய்து சீர் தூக்கி ஆசிரியர் கருத்துகளை நிறுவுகிறார். பாரதியார் தமிழ் உரைநடை பெற்ற வலிமையை நன்கு ஆராய்கிறார். ஒவ்வொரு எழுத்தாளரின் நடையின் தனித் தன்மையை மிக நுட்பமாக விளக்குகிறார்.

சாகித்ய அகாடமியின் பரிசு பெற்ற வல்லிக்கண்ணன் அவர்கள் இந்நூல் மூலம் தமது பணியில் மேலும் பெருமை சேர்க்கிறார். அண்மையில் அவரது மணிவிழாவில் அறிஞர்கள் கூடி அவர் தம் ஆன்ற புலமையினை, அமைதியான வாழ்வினை, தமிழ்ப் பணியினை போற்றிப் புகழ்ந்தார்கள். ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற நினைவில் வாழ்ந்து வரும் ஆசிரியர் சிந்தனையால், சொல்லால், செயலால் தூயராக, நல்லவராக, இனியவராக வாழ்ந்து வருகிறார். தமது தொண்டால், தூயபணிகளால் சிறந்து வரும் ஆசிரியர்க்கு எங்கள் நன்றி என்றும் உரியது. நல்ல நூல்களை இனங்கண்டு வாங்கிக் கற்று வரும் வாசகர்கட்கும் எங்கள் நன்றி.

முன்னுரை

முதலிலேயே சொல்லி விடுகிறேன்—

நான் ஒரு ஆராய்ச்சியாளன் இல்லை; இந்நூல் தமிழ் உரைநடை பற்றிய முழுமையான ஆய்வும் அல்ல.

இதன் தன்மை குறித்து நூலின் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

பாரதிக்குப் பிறகு தமிழ் உரைநடை வளமாகவும் பலவித வனப்புகளோடும் வளர்ந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி வளரும் வசனநடை குறித்த சுவையான சிந்தனைகளே இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள்.

இவற்றை நான் எழுத நேரிட்டதற்கு ‘தீபம்’ நா. பார்த்தசாரதி அவர்களின் ஊக்குவிப்பே காரணம் ஆகும்.

இதர இலக்கியப் பத்திரிகைகள் செய்யாத பல நல்ல காரியங்களைத் ‘தீபம்’ செய்திருக்கிறது. இலக்கிய விஷயங்கள் சம்பந்தமான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடும் பணியை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பி. எஸ். ராமையாவின் ‘மணிக்கொடி காலம்’; அதைத் தொடர்ந்து நான் எழுதிய ‘சரஸ்வதி காலம்’; ‘புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ குறிப்பிடத் தகுந்தவை. பிறகு தான் நான் ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை’ என்ற கட்டுரைத் தொடரை எழுதலானேன்.

இவ்விதம் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு அளித்த ‘தீபம்’ பத்திரிகைக்கும், திரு. நா. பா. அவர்களுக்கும் என் நன்றி உரியது.

இக் கட்டுரைத் தொடரின் ஆரம்பப் பகுதியில், நான் செய்துள்ள ஒரு தவறைச் சுட்டிக் காட்டி, இலங்கைப் பேராசிரியர் டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பயனுள்ள சில தகவல்களை அறிவித்தார்கள்.

“தமிழ் இலக்கிய வரலாறு பட்டப் படிப்புக்கான பாடமானதன் பின்னர் வெளிவந்துள்ள பாட நூல்களில் இவ்விடயம் பற்றிப் பேராசிரியர்கள் பலர் எழுதியுள்ளனர். ஆனால், அவற்றைவிட, அத்தகைய நூல்கள் பல தோன்றுவதற்கு முன்னரே எழுதப் பெற்றுள்ள நான்கு முக்கிய ஆக்கங்கள் உள்ளன.

தமிழ் உரைநடை வரலாறு பற்றி ஆங்கிலத்திலே தனி ஆய்வுகளாகவும், தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் அத்தியாயங்களாகவும் பல முக்கிய ஆக்கங்கள் உள்ளன. அவை பற்றி எதுவும் குறிப்பிடாது, தமிழில் தமிழ் உரைநடை பற்றி எழுதப்பட்டுள்ளனவற்றுள் மிக முக்கியமானவையாகவும், ஆராய்ச்சியாளர்களால் கட்டாயம் கவனத்திற் செடுத்துக் கொள்ளப்பட வேண்டியவையென நான் கருதும் நான்கு ஆய்வுகள் பற்றி எடுத்துக் கூற விரும்புகிறேன்.

1. செல்வநாயகம் வி.—‘தமிழ் உரை நடையின் வரலாறு’, சாரதா விலாஸ் பிரஸ், கும்பகோணம். 1957 தமிழ் உரைநடை வரலாற்றினை முற்று முழுதாக எடுத்துக்கூற முனையும் இந்நூல் இலங்கையிற் பரவலாகக் கிடைக்கும். (இந்தியாவில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற் பெறப்படலாமென நூலிற் குறிப்பிடப்பட்டுள்ளது.)

2. சுப்பிரமணிய அய்யர், ஏ. வி.—‘தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி’ (பண்டைக் காலமும் இடைக் காலமும்). அமுத நிலையம், சென்னை 1959.

3. வேங்கடசாமி, மயிலை, சீனி—‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்’, (1800-1900), சாத்தி நூலகம், சென்னை, 1962,

4. அழகிரிசாமி. கு—‘வழிவழி வந்த வசன நடை’ (தொகுப்பு) பக். 279—335. தமிழ் வட்டம் இரண்டாவது ஆண்டு விழா மலர், சென்னை 1969.

தமிழ் உரைநடை வரலாறு பற்றிய மேற்கூறிய ஆக்கங்கள் உள்ளன என்பதை மாத்திரமே இக்குறிப்பின்மூலம் கூற விரும்புகின்றேனே யன்றி இவை போதும் என்ற கருத்தில் இதனை தான் எழுதவில்லை, தமிழ் உரைநடையின் வளர்ச்சி பற்றிய புறநிலை ஆராய்ச்சி முடிவுகளிலும் பார்க்க உரைநடை வளர்ச்சிக்கு ஆக்க எழுத்தாளன் என்றவகையிலும் விமரிசகன் என்ற வகையிலும் கடந்த பல வருடங்களாகப் பணியாற்றி வரும், ஆக்க நுண்ணுணர்வும், வெளிப்பாட்டுத் திறனும் விளக்கமான பொது நோக்கும்கொண்ட ஒருவர், தமிழ் இலக்கிய உரைநடை வரலாற்றில் தானே இடம் பெறவேண்டிய ஒருவர், தமிழ் உரைநடைப்போக்கின் சாயல்கள் பற்றிய தமது சிந்தனைகளை எழுதத்தொடங்கியுள்ளமை தமிழ் உரைநடை வரலாற்றாய்வாளர்களுக்கும், ‘உரை’யைத் தமது ‘தொடர்பு முறைமை’யாகக் கொண்ட எழுத்தாளர்களுக்கும் மகிழ்ச்சியூட்டுவதாகவுள்ளது.”

இவ்விதம் தமது கருத்தை அறிவித்த, எனது மதிப்புக்குரிய நண்பர் டாக்டர் சிவத்தம்பி அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும் உரியன.

பயன் கருதாது, நல்ல பல நூல்களை ஆர்வத்தோடும் இலட்சிய வேகத்தோடும் வெளியிட்டு வருகிற ‘மணி வாசகர் நூலகம்’ ‘பதிப்புச் செம்மல்’ ச. மெய்யப்பன் எம்.ஏ. அவர்கள் இக்கட்டுரைகளை விரும்பிக் கேட்டு வாங்கி, சிறந்த முறையில் நூலாகப் பிரசுரித்திருப்பது எனக்கும் இலக்கிய நண்பர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செயல் ஆகும். திரு மெய்யப்பன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் உரைநடை பற்றிய இந்தப் புத்தகம் வித்தியாசமான ஒரு நூல் என்பதையும், பயன் நிறைந்த இனிய இலக்கிய விருந்து என்பதையும் ரசிகர்கள் உணர முடியும்.

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

வல்லிக்கண்ணன்

பொருளடக்கம்