பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/007
7. உ. வே. சாமிநாதையர்
பண்டிதர், புலவர், பள்ளிக்கூடம், கல்லூரி, யுனிவர்சிட்டி, பட்டப்படிப்பு—இவை எல்லாம் டி. கே. சி.க்குப் பிடிக்காத விஷயங்கள். பண்டிதர்களையும் புலவர்களையும் பட்டப்படிப்பு பெற்றவர்களையும் அவர் வெறுத்தும் குறை கூறியும் பரிசாகம் பண்ணியும் நிறையவே எழுதியிருக்கிறார் ஆனாலும் அவர் மனம் நிறைந்து பாராட்டிய பண்டிதர் புலவர் ஒரு சிலர் உண்டு. அவர்களில் ஒருவர் மகாமகோபாத்யாய டாக்டர் உ. வே. சாமிநாதையர்.
சாமிநாதையரின் தமிழ் ஆர்வமும், புலமையும், கடுமையமான உழைப்பும் பழந்தமிழ் காவியங்கள் பலவற்றைத் தேடித் தந்தன. அவருடைய உழைப்பு இல்லையேல் அருமையான பல பழைய நூல்கள் தமிழுக்குக் கிடைக்காமலே போயிருக்கும். பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடி எடுப்பதற்காக அவர் நெடுகிலும் அலைந்து திரிந்து அல்லற்பட்டது பெரும் அனுபவம் ஆகும்.
தனது அனுபவங்களை எல்லாம், தான் கண்டு பழகிய மனிதர்களைப் பற்றி எல்லாம் அவர் சிறுசிறு கட்டுரைகளாக நிறையவே கழுதியிருக்கிறார். ‘என் சரித்திரம்’ என்று சுயசரிதை வாயிலாகவும் அவர் எத்தனையோ அரிய விஷயங்களை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
பெரும் புலவரான சாமிநாதையர் தனது புலமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு பண்டித நடையில் எழுதவில்லை. மிக எளிமையான, இனிய உரை– நடை அவருடையது. கோபால கிருஷ்ண பாரதியார்பற்றி அவர் எழுதியுள்ள ஒரு குறிப்பு அவருடைய தமிழ் நடைக்கு நல்ல உதாரணமாகும்—
“நானும் என் தகப்பனாரும் மயூரத்தில் மகாதானபுர அக்கிரகாரத்தில் ஓரன்பருடைய வீட்டுத் திண்ணையிலிருந்து பேசிக் கொண்டிருந்தோம். பிற்பகல் 3 மணி இருக்கும். வீதி வழியே ஒருவர் நடந்து வந்தார். அவரைக் கண்ட என் தகப்பனார் எழுந்து ‘பாரதியாரவர்களா?’ என்று கேட்கவே வீதியிற் சென்ற அவர், ‘யார் அது? வேங்கடசுப்பையரவர்களா? ஏது இவ்வளவு தூரம்?’ என்று சொல்லிக் கொண்டே நாங்கள் இருவரும் இருந்த திண்ணைக்கு வந்து அமர்ந்தார். உடனே என்னுடைய தந்தையாரின் கட்டளைப்படி அவரை நான் சாஷ்டாங்கமாக தமஸ்கரித்தேன்.
வந்தவர் கோபாலகிருஷ்ண பாரதியாரென்பதையறிந்த நான் மிக்க வியப்பை அடைந்தேன். அவருடைய புகழையும் நந்தனார் சரித்திரத்தின் அழகையும் உணர்ந்து ஈடுபட்டிருந்த என் இளைய உள்ளத்துக்குப் பாரதியார் ஓர் அழகிய உருவத்தை உடையவராக இருப்பாரென்ற காரணமில்லாத தோற்ற மொன்று இருந்து வந்தது. நான் கண்ட காட்சியோ அதற்கு நேர் விரோதமாக இருந்தது.
அகலமான புறங்கால்களுக்கு மேல் சூம்பின கால்கள்; பருத்த முழங்கால்கள்; தடித்த இடை; முழங்கால்களுக்கு மேல் வஸ்திரம்; கூனல் முதுகு; இறுகின கழுத்து; பெருத்த முண்டொன்று முன் வந்திருக்கும் குரல்வளை; அந்தக், கழுத்தில் ஏக (ஒற்றை) ருத்திராட்சம்; மார்பில் வில்வ ஓட்டு வில்லையோடுள்ள ருத்ராட்ச கண்டி; பூனைக்கண்; குறுக்கே நீண்ட தலை; அதன் மேல் நாணற் பூவைப் போல் பறந்துகொண்டிருக்கும் பத்து மயிர்; இந்தக் கோலத்தோடு பாரதியார் இருப்பார் என்று தான் கனவிலும் நினைத்ததில்லை. அவருக்கு அக்காலத்தில் பிராயம் சற்றேறக் குறைய எழுபதுக்கு மேலிருக்கலாம்:”