பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/015
15. ஸி. என். அண்ணாதுரை
தேசிய உணர்வு எழுச்சியும், நாட்டின் விடுதலை இயக்க வேகமும் மொழிகளில் ஒரு மறுமலர்ச்சி புகுத்தியது வரலாற்று உண்மையாகும். அதே காலத்தில், இன உணர்வும்—மொழி அடிப்படையிலும் இன ரீதியிலும் தனி நாடு அமைக்கவேண்டும் என்று ஒரு சாராரிடையே எழுந்த உணர்வும்—மொழியின் மலர்ச்சிக்கு வகை செய்தது. இதுவும் வரலாறு காட்டும் ஒரு உண்மைதான்.
பெரியார் ஈ. வே. ராமசாமி திராவிட இன உணர்வைத் தூண்டி, தமிழர்—தமிழ்—தமிழ்நாடு—தமிழ்மொழி உயர்வு என்ற உணர்ச்சிகள் பெருகுவதற்கு வகை செய்தார். அவரைப் பின்பற்றியவர்கள் பலர் மொழிப்பற்றுடன் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தம்மால் இயன்றதைச் செய்ய முற்பட்டார்கள். அவர்களில் முக்கிய மானவர் ஸி. என். அண்ணாதுரை ஆவார்.
பெரியார் விதைத்த இயக்கம் நன்கு வளரவும், வேகமாகப் பரவவும், இளைஞர்களைக் கவர்வதற்கும் அண்ணாதுரையின் பேச்சாற்றலும் எழுத்து வேகமும் முக்கியக் காரணங்களாக அமைந்தன.
“உலகிலே பலபல தீவிரவாதிகள் தோன்றியது பற்றிய வரலாறுகள் எனக்குத் தெரியும். நாத்திகம் பேசிய நாவலரையும் நானறிவேன். நெருப்பாறு தாண்டும் வீரரும் எனக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசத்தை உணரவேண்டுகிறேன். அவர்கள் படித்த பக்குவ மனம் படைத்து கூட்டத்திலே பேசினர். அவர்களுக்கு எழுதினர். பெரியாரின் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே கல்வீச்சு மண்வீச்சுக்கிடையே என்பதை அறியவேண்டும். அதிலும் சகலமும் உணர்ந்த சகலகலா வல்லவர்களும் வெறும் சாமியாடிகளைக் கண்டித்துப் பேசவும் சக்தியற்றுக்கிடந்த காலை, பெரியாரின் பெருங்காற்றுத் தமிழகத்திலே வீசி, நச்சு மரங்களை வேரோடு கீழே பெயர்த்தெறிந்தது என்பதை உணர வேண்டும்.” (வர்ணாஸ்ரமம்)
பெரியார் துவக்கி வைத்த பெருங்காற்றை வலிய சூறையாகத் தமிழ் மண்ணிலே பரப்ப திட்டமிட்ட அண்ணாதுரை அதற்குத் தேவையான அறிவு வலிமையும் பேச்சுத் திறனும் எழுத்து வன்மையும் பெற்றிருந்தார். அவருடைய பேச்சிலும் எழுத்திலும் உயிரும் உணர்வும், வேகமும் கனன்றன. எழுத்து எப்படி இருக்கவேண்டும், என்னென்ன சாதிக்க வேண்டும் என்ற திட்டமான கருத்துக்களை ஆரம்ப முதலே அவர் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம்.
“ஜோலா. பிரான்சு நாட்டிலே இலக்கிய மன்றத்தாரால் ஏளனம் செய்யப்பட்டு, புத்தகம் எழுதுவோரால் புறக்கணிக்கப்பட்டு, மேட்டுக் குடியினரால் வெறுக்கப்பட்டு தன்பாட்டு மொழியினால் நாட்டுக்குக் கேடு வருகிறதென்று பலர் பழித்துரைக்கக் கேட்டு, பாரிசில் பல கஷ்டங்களைப் பட்டுக் கொண்டிருந்தார். போராடிப் போராடியே, உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். ஆகவே தான், எமிலி ஜோலாவால், ‘நானா’வுக்காக அனுதாபத்துடன் போராடியவரால், டிரைபசுக்காகப் போராட முடிந்தது. மற்றவர்கள் ‘மேதை’ என்ற புகழ்பெற மேட்டுக் குடியினரின் பாதசேவை செய்தனர், அரண்மனைக்கு ஆலாத்தி எடுத்தனர்; ஆலயப் பூஜாரிக்கு அன்பாபிஷேகம் செய்தனர். ஜோலா, மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக எழுதினார்; எழுதினார் என்றால், போராடினார் என்றே பொருள். அவருடைய எழுத்து, வீரன் கைவாளை விட வலிவுடையது. உள்ளத்தை உலுக்கக் கூடியது. உலகே எதிர்த்தாலும் அஞ்சாது போரிடும் எழுத்துக்கள். மமதைக் கோட்டைகளைத் தூளாக்கும் வெடிகுண்டுகள். ‘நீதி’ வேண்டும் என்று, ஜோலாவின் பேனா எழுதிற்று. என்ன நேரிட்டது? ‘நீதி’ கிடைத்தது! மந்திரி சபைகளை, அவருடைய பேனா முனை மாற்றி அமைத்தது. பல மண்டலங்களிலே, மறக்கப்பட்டுப் போன டிரைபசுக்கு, நண்பர்களைத் திரட்டிற்று, ஒரு பெரும் படை திரட்டிவிட்டார், பேனா மூலம். எங்கோ தீவிலே, ஏக்கத்துடன், ‘நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே’ என்று கதறிக் கொண்டிருந்த டிரைபசுக்கு, வெற்றி, விடுதலை! பதினோரு ஆண்டுகள் பராரியாகப் பாழும் தீவில் வதைபட்டவனுக்கு, வெற்றி, விடுதலை; ஒரு ஜோலாவின் எழுத்தால்” (ஏழை பங்காளர் எமிலி ஜோலா)
இந்த விதமான ஒரு சக்தி தனது எழுத்துக்கும் வேண்டும் என்று அண்ணாதுரையின் உள்ளம் ஆசைப்பட்டிருக்கக் கூடும். எத்தகைய சூழ்நிலையில், எப்படிப்பட்டவர்களுக்காக எழுதுகிறோம் என்பதை நன்கு உணர்ந்திருந்தார் அவர். எனவே என்னென்ன எழுதவேண்டும், எதை எப்படி எழுதவேண்டும் என்றும் அவர் நன்கு அறிந்திருந்தார். அதற்கேற்றபடி அண்ணாதுரையின் உரைநடையும் அமைந்தது.
மேலே தந்துள்ள உதாரணங்களிலேயே அண்ணாதுரை உரைநடையின் தன்மை ஒருவாறு புலனாகும். எளிமை, இனிமை, உணர்ச்சிவேகம், இவற்றுடன் ‘பாட்டுமொழிக்கு’ உரிய அடுக்குத் தன்மையும் மோனை அழகும் அவர் நடையிலே கலந்துள்ளன.அடுக்கு மொழி ஆர்வம் சில சந்தர்ப்பங்களில் நீளம் நீளமான வாக்கிய அமைப்புகளுக்கு இடம் அளித்து விடுவதையும் அவர் எழுத்தில் காணமுடியும்—
“இலட்சியத்துக்காகவும், அந்த இலட்சியத்தை அடைய உதவும் கருவிபோன்ற கட்சிக்காகவும், சொந்த நலனையும், உயர்பதவியையும் வெறுத்து ஒதுக்கும் வீரமும் கஷ்ட நஷ்டம் ஏற்கும் சகிப்புத் தன்மையும் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால், அவரைத் தலைவராகக் கொண்ட கட்சியும் அதனைச் சார்ந்துள்ள மக்களும் முன்னேற்றமடைய முடியுமென்பது திண்ணம். அரண்மனை மாடியிலே அம்சதூளிகா மஞ்சத்திலே அமர்ந்துள்ள அரிவையை அடைய ஆங்குச் சென்ற ஆணழகன், அகழின் ஆழத்துக்கோ, அதிலே அலையும் முதலையின் வாய்க்கோ அஞ்சினால், எங்ஙனம் மங்கையைப் பெறமுடியும்! இலட்சியமெனும் எழிலுடையாளைப் பெற்று இன்புற எண்ணுவோரிற் பலர், அகழிக்கு அஞ்சி, புறத்தே நின்று புகைபடு மனமுடன் போரிட்டுக் கொண்டோ, புலம்பியோ கிடப்பர். ஒரு சிலருக்கே, உழவுக்கேற்ற விளைவு எனும் மொழிவழி நடக்கும் அறிவாற்றல் உண்டு. அவர் தமைச் சலிப்பு அண்டாது. சாகசத்துக்கு அவர் பலியாகார், போலியைக் கண்டு ஏமாறார், புல்லரின் புன்மொழி கேட்டுப் புழுங்கார், தாக்கிய வேலினைத் தூக்கியெறிந்துவிட்டுப், போர்க்குப் புகின் யார்க்கும் இது நேரல் முறையே என்பது தெரிந்து, புலியுடன் போரிடுகையிலே, கிலி எனும் வலி கொளல் கூடாது என்பதறிந்து, உயிர் கெடும் வரை நெடுவரைபோல் நின்று போரிடுவர் வீரர். கட்சிப்பணியும், களத்துப் பணி போன்றே, வீரருக்கு ஏற்றதேயன்றி விலாவிலே விரக்திப் புழு நடமாடுவோருக்கோ, மனதிலே சுயநலமெனும் குளவி கொட்டிடுவோருக்கோ ஏற்றதன்று. சிறு செயல் புரிய மட்டுமே தெரிந்தோர்க்குப் பெருநெறி பிடித்தலரிது. கட்சிப் பணிக்கு இத்தகைய கடமையுணர்த்த காவலர் தேவை.” (வர்ணாஸ்ரமம்)
தாழ்ந்து கிடந்த சமுதாயத்துக்கு விழிப்பும் வீர உணர்வும் புகுத்த வேண்டும் என்ற நோக்குடன், வரலாற்று நிகழ்ச்சிகளை விறுவிறுப்பான நடையில் எடுத்துச் சொல்லும் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார் அண்ணாதுரை. அவற்றின் ஆரம்பமே எடுப்பாக இருக்கும். ஒரு நாடகப் பாங்குடன் அது மேலே செல்லும். உதாரணமாக, ‘அந்த ஜூலை 14!’ என்ற கட்டுரையின் துவக்கப் பகுதியைப் பார்க்கலாம்.
“ஜூலை 14! உலக வரலாற்று ஏட்டிலே உன்னதமான இடத்தைப் பெற்றுவிட்டது. அந்நாளே வீர பிரஞ்சு மக்களின் வெற்றிநாள்! எதிரி நாட்டின்மீது போரிட்டுப் பெற்ற வெற்றியா? இல்லை! கொடுமையை எதிர்த்துக் கொடுங்கோலை எதிர்த்து, அன்று வரை குமுறிக் கிடந்த கூட்டம், அந்நாள் வரை அடக்குமுறையினால் தாக்கப்பட்டு அடிமைப்பட்டு, ‘இம்மென்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்’ என்ற நிலையிலே சிக்கிச் சிதைந்து, நசுக்கப்பட்டு நாதியற்றுக் கிடந்த மக்கள், நிமிர்ந்து நின்று, புனல் சொரிந்த கண்களினின்றும் கனலைக் கக்கி, பெருமூச்சை நிறுத்திப் பெருமுழக்கங் கிளப்பி, தருகதர்களின் தாளைத் தொட்டுக் கிடந்த கரங்களிலே, வாளேந்தி, விடுதலை; விடுதலை! என்ற புரட்சி கீதம் பாடிக்கொண்டு படைபோல் திரண்டு, இடிபோல் ஆர்ப்பரித்து, புயலெனக் கோபத்தை வீசி, போக போகத்திலே புரண்டு, பொதுமக்களைப் பொதி மாடுகளாக்கி, அரசியலைக் கொடுமைக் கருவியாகக் கொண்டு, மக்களைக் கசக்கிப் பிழிந்து, அவர்தம் மானத்தை மண்ணெனக் கருதி, மதித்து, செருக்கு நிறைந்த சீமான்கள் எதேச்சாதிகாரம் செய்து வந்ததை ஒரே அடியில், ஒரே நாளில், ஒரே பெரும் புரட்சியில், அடித்து நொறுக்கி, உருத்தெரியாதபடி அழித்த நாள் அந்த ஜூலை 14...”
இப்படி வளர்கிறது இன்னும் மேலே—
“முகாரி முடிந்து அடாணா ஆரம்பமான நாள்! மாடப்புறா வல்லூறைத் துரத்திய நாள்! மன்னர் மருண்ட நாள்! சீமான்களின் தலை சிதறிய நாள்! மதுக்கிண்ணமேந்திய மனோஹரிகளின் இதழ் தரும் சுவையிலே இகத்தின் ரசத்தைக் கண்டு, பரலோக ரசம் பாதிரிமாரின் கைவசம் இருக்கிறது, கேட்டால் கிடைக்கும், அதற்காகத் தேடி அலைவானேன் என்று மதோன்மத்தர்கள், அரண்மனை செல்லப்பிள்ளைகள், ஆணவ சொரூபங்கள் ஆடிப் பாடிக் கிடந்த கோலாகலத்தை வேரறுத்த நாள்! ஓடப்பரெல்லாம் உதையப்பரான நாள்! விலங்கு பூட்டப்பட்டு வேதனையை அடைந்த கரங்களிலே வீரவாள் ஜொலித்த நாள்! விடுதலை நாள்! வீரரின் வெற்றித் திருநாள்! வெறியரின் வீழ்ச்சி நாள்!”
அண்ணாதுரையின் எழுத்துக்களில் ஒரு குறைபாடு—ஒரு சிறு விஷயத்தை வைத்துக் கொண்டு அளவுக்கு அதிகமாக அளப்பது. சுருங்கச் சொல்கிற தன்மை அவரிடம் இல்லை. சுவையாகச் சொல்லப்பட்டாலும், தேவை இல்லாமலே சவ்வுமிட்டாய்த்தனம் பண்ணியிருப்பது பாராட்டக் கூடியதாக இல்லை. மேடையில் மணிக்கணக்கிலே பேசும் பழக்கம் சிறுவிஷயத்தை மிகப் பெரிதாக வளர்த்தலையும். சொன்னதையே வெவ்வேறு விதங்களில் திரும்பத் திரும்பக் கூறும் தன்மையையும் அவருடைய இயல்புகளாகிவிட்டன. எழுத்து நடையிலும் அது பிரதிபலிக்கிறது.
மக்களைக் கவரவேண்டும் என்பதற்காக அண்ணாதுரையும் புராணங்களில் உள்ள ஆபாசங்களையும், கம்பராமாயணத்தில் கலந்துள்ள ஆபாசவர்ணனை எனத் தாம் கருதியவைகளையும் சுவையாக விவரித்திருக்கிறார். சொல்வதை நயமாகச் சொல்ல அவருடைய நடை கைகொடுத்துள்ளது.
“‘இரும்பனைய நெஞ்சுடையோன் பரிசளித்த இடையணியைக் களைந்தாள். கணமொன்று கவலை கொண்டாள். முகில் சிறிது மூடிய முழுமதிபோல் நின்றாள்’ என்ற கருத்துப்பட, மங்கை நிர்வாணமாவதை, ஆடை களைவதைக் கூறுகிறார் கவி. நிர்வாணமான பிறகு குதிரைமீதமர்ந்து மங்கை சென்றதைக் கூறுகையில், டெனிசன் கற்பெனும் ஆடை பூண்ட காரிகை, குதிரைமீதேறிச் சென்றாள் என்ற கருத்துப்பட, Then she rode forth, clothed on with chastity என்று கூறுகிறார். ஒரு உத்தமி நிர்வாணமாக, ஊரை வலம் வந்த கதையை, ஓர் கவி வல்லவர், ஆங்கிலர் மட்டுமேயன்றி, அவனியில் வேறு பல நாட்டினரும் வியந்திடும் அளவு புலமை கொண்ட டெனிசன், இவ்வளவு நாகரிகமாக நாசுக்காகப் பாடியிருக்கிறார். இதனால், ஆங்கில் நாட்டிலே கலை வளம் குன்றிவிடவில்லை. கவிதா ஊற்று வறண்டுவிடவில்லை. ‘பாவம்’ பாழாகிவிடல்லை, புலமை புகைந்து போகவில்லை. மொழிவளம் கெட்டுப்போவில்லை, இவ்வண்ணம் பாடினதால், டெனிசனைக் கவிதா விற்பன்னர் பட்டியிலே சேர்க்கலாகாதென்று கூறும் மட்டியும் எவரும் இல்லை. தோழர்களே கம்பர் இராமகாதையிலே கொட்டியிருக்கும் காமரசத்தைக் காண்போர், கம்பரிடம் மட்டும், ஆடைகளைந்து அசுவமேறி ஊர்உலவிய உத்தமியின் கதையைப் பாடிட ‘கண்டிராக்டு’ விட்டிருந்தால், எவ்வளவு மலைமலையான ஆபாசத்தை அழகழகாப் பாடியிருப்பார், என்பதைக் சற்றே சிந்தித்து பாருங்கள்! பிராட்டியின் உருவையே நிர்வாணமாக்கிக் காட்டிடும் பெரும் புலவரின் கவிதைத் திறத்திடம், நிர்வாண நங்கை சிக்கியிருந்திருப்பின் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நினைக்கும்போதே நடுக்கம் பிறக்கிறது. டெனிசன் அனுசரித்த முறை, ஒழுக்கத்தையும், உயர்ந்த எண்ணத்தையும், தூய்மையையும், தோகையரின் மேன்மையையும் உணர்த்துமா, வாம மேகலை இறவளர்ந்த அல்குலை உடையவள் பிராட்டி என்று கூறிய கம்பரின் கவிதை முறை, இத்ததைய உயரிய எண்ணத்தைக் கிளப்புமா என்று கேட்கிறேன். புளித்த காடி தாகவிடாய் தீர்க்குமா, இளநீர் போக்குமா என்று கேட்கிறேன். புண்ணிலிருந்து (வடிவது) நாற்றமடிக்கும், பூவிலிருந்து மணம் வீசும்! புலமை என்றால், புனிதமான எண்ணத்தைப் பக்குவமாகப் புகுத்த வேண்டுமேயொழிய, மேலிட மறைவிட வர்ணனைக்குக் கருவியாக இருக்க வேண்டுமா என்றுதான் நான் கேட்கிறேன்.” (கம்பரசம்)
அரசியல் உண்மைகளை அழுத்தமாகக் கூறுகிறபோது, சாதாரண மக்களும் இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் சர்வ சாதாரண விஷயங்களை உதாரணங்களாக அடுக்கி, உரிய கருத்தை நன்கு பதிய வைக்கும் திறன் அண்ணாதுரையின் உரைநடையில் கலந்து மிளிர்கிறது. இதோ ஒரு பகுதி—
“மோட்டார் நன்றாக ஓட, அதை ஓட்ட விசை இருந்தால் மாத்திரம் போதாது—அது தவறான வழியில் சென்றால் தடுக்க ‘பிரேக்’கும் வேண்டும்! நாடு செழிக்க நல்ல ஆறு இருந்தால் மாத்திரம் போதாது—அதிலிருந்து வெள்ளம் புரண்டு ஊரை அழித்து விடாமல் இருக்கக் கரைவேண்டும்? நல்ல காளையை ஓட்ட சிறு சவுக்கு இருந்தால் மாத்திரம் போதாது—அதைக் கிழக்கேயும் மேற்கேயும் திருப்ப மூக்கணாங் கயிறும் வேண்டும்! வீட்டிற்கு வாயிற்படி இருந்தால் மாத்திரம் போதாது—வாயிற்படிக்குக் கதவு வேண்டும். கதவுக்குத் தாழ்ப்பாளும் வேண்டும்! அது போலவே, ஜனநாயக காலத்தில், குடியரசு வந்த பிறகு, நாட்டில் நல்லாட்சி நடக்க வேண்டுமானால், ஆளும் கட்சி ஒன்று இருந்தால் மாத்திரம் போதாது—மாற்றுக் கட்சியும் வேண்டும். மாற்றுக் கட்சி இல்லாத ஜனநாயக சர்க்கார், பிரேக் இல்லாத கார், கரை இல்லாத ஆறு, மூக்கணாங்கயிறு இல்லாத மாடு! ஆகவே ஆளும் கட்சிக்கு அது அடக்குவாரற்று அக்கிரமம் செய்யும் கட்சியாக மாறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள ஒரு மாற்றுக் கட்சி தேவை.” (நாம்)
பிறமொழிப் பதங்கள் தமிழில் சேர்வதை அண்ணாதுரை வெறுக்கவில்லை இதர மொழிச் சொற்களை அவர் தாராளமாகவே தன் உரைநடையில் எடுத்தாண்டிருக்கிறார்.
“நெறியில்லாதவனுக்கு நெறி காட்ட, ஒளி காணாதவனுக்கு ஒளிகாட்ட ஒரு ஜோதி—ஆண்டவன்!
அசுத்தமான உலகில் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதை விளக்க,
அநாகரிக உலகில் நாகரிக போதனையின் நாதனாக விளங்க.
கபடம்; வஞ்சகம், காய்ச்சல் முதலியன கொண்ட உள்ளத்திலே, கருணை, நேர்மை, அன்புடைமை முதலிய அருங்குணங்கள் உண்டாகச் செய்ய ஒரு குருநாதன் ஆண்டவன்! எங்கும் நிறைந்து, எந்தச் சக்தியும் பெற்று எல்லையில்லாத இன்பத்தின் எல்லையாகி, சத்திய சொரூபியாகி, சாட்சாத்காரமாகி, சகல ஜீவாத்மாக்களுக்கும் ரட்சகனாகி, பதியாகி உள்ள பரமன்—ஆண்டவன்.
கடவுளைப் பற்றிக் கசிந்து கண்ணீர் மல்கி, பலர் கூறுவர் இதுபோல! ஆம். நெறி, ஒளி, நீதி, வாய்மை, தூய்மை, அன்பு—இவையே கடவுள். அழிவான தெய்வமே! எங்கும் நிறைகின்ற பொருளே! அன்பே சிவம்! உண்மையே ஆண்டவன்!—என்று பலர் போதித்தனர்.” (தேவலீலைகள்)
அண்ணாதுரை பல சிறுகதைகளும், சில நாவல்களும் எழுதியுள்ளார். அவருடையவை ‘சிறுகதை’களே அல்ல; நாவல்கள் இலக்கியத் தன்மை பெற்றனவாகவும் இல்லை.‘பாட்டியம்மா ‘பாட்டி’ ஆகி, பிறகு ‘கிழவி’யாகி, பிறகு ‘ஏ! யாரது?’ ஆகி, பிறகு ‘போ! போ!’ என்றாகி பிறகு ‘இதேதடா தொல்லை’ என்றாகி, ‘பெரிய சனியன்’ என்றாகி ‘பிசின், இலேசில் விடாது’ என்றாகி, இப்போது கவனிப்பார், கவலைப்படுவாரற்ற ஓர் உருவமாகிவிட்ட நிலை!’ —இது போன்ற நயமான வர்ணிப்பு அபூர்வமாகச் சில இடங்களில் காணக் கிடைக்கும். மற்றப்படி சுத்த வளவளா!
அண்ணாதுரையின் பேச்சு, அவரைப் போலவே நாமும் பேசவேண்டும் என்ற ஆசையை அவருடைய ‘தம்பிகள்’ பலருக்கு ஏற்படுத்தியது போலவே, அவருடைய எழுத்து அண்ணாதுரையைப் போல நாமும் எழுதவேண்டும் என்ற எழுச்சியைப் பல இளைஞர்களிடையே உண்டாக்கியது. ஆனால், அண்ணாதுரையின் படிப்பும் பயிற்சியும், அறிவும் ஆற்றலும், சிந்தனையும் உள்ளத்தின் ஒளியும் அவர்களில் எவரிடமும் இல்லாததால், உரைநடையில் அண்ணாதுரை பெற்ற வெற்றியை மற்றவர்கள் பெறஇயலாமல்போயிற்று.